Showing posts with label திருநீற்று நிலை. Show all posts
Showing posts with label திருநீற்று நிலை. Show all posts

Monday, April 5, 2021

திரு மாணிக்கவாசகர் சுமந்த திரு வேதகிரீசுவரர் திருப்பாதம்!!

"... சுமந்த ... திருப்பாதம்" - இப்படி எதுகை மோனையுடன், பக்தி ரசம்/சாம்பார்/மோர்குழம்பு சொட்ட சொட்ட பரிமாறிவிடுகிறார்கள். நாமும் மூக்கைப்பிடிக்க உண்டு விட்டு, உள்ளூர், வடநாடு & வெளிநாட்டுக் கொள்ளையர்கள் பல தலைமுறைகள் சொத்து சேர்க்க உதவி விட்டு (அதாவது, வாழ்ந்துவிட்டு), அடுத்த உடலுக்கு தயாராகி விடுகிறோம்!!

இது போன்ற சொற்றொடர்கள் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள தவறான பாதிப்புகள் தான் எவ்வளவு! 😔

மணிவாசகப் பெருமானின் 🌺🙏🏽 காலம் சுமார் 9ம் நூற்றாண்டு. வேதகிரீசுவரர் என்னும் மூலவரின் கீழ் சமாதியாகியிருக்கும் பெருமானின் 🌺🙏🏽 காலம் அதற்கும் வெகுகாலத்திற்கு முன்னராகும். சிவமாய் சமைந்த ஒரு பெருமான் எவ்வாறு வெளிவந்து, ஒரு அன்பரின் சிரசில் கால் வைத்து ஆட்கொள்ள முடியும்? அப்படியே பாதம் வைத்தால் மணிவாசகரின் மனமழிந்துவிடுமா? சிவதத்துவம் என்பது உடலுடன் கூடியதா? (அனைத்தும் அதுவே - ஏகன் அநேகன் - என்பது வேறு)

திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயில்) குருந்த மரத்தினடியில் அமர்ந்திருந்த தனது மெய்யாசிரியரின் பார்வை பட்டதும், முதன்முதலாக "தான்" யாரென்று மணிவாசகர் உணர்கிறார். உடல், உலகம் முதலிய காட்சிகள் நீங்கப்பெற்று, தானே உள்ளபொருள் (சிவம்) என்ற துய்ப்பைப் பெறுகிறார். பின்னர், மீண்டும், உடல்-உலகு தோற்றத்திற்குள் சிக்கிக் கொள்கிறார். "நரி-பரி", "வந்திக் கிழவி" திருவிளையாடல்களுக்கு பின்னர், தனது முதலமைச்சர் பதவியைத் துறந்துவிட்டு, பல திருத்தலங்களுக்கு செல்கிறார். தான் துய்த்த திருநீற்று நிலையை மீண்டும் பெற போராடுகிறார். சில திருத்தலங்களில் துய்க்கவும் செய்கிறார். அப்படிப்பட்ட திருத்தலங்களில் ஒன்று தான் திருக்கழுக்குன்றம்.

இணைக்கப்பட்டிருக்கும் படத்திலுள்ள இடம், திருக்கழுகுன்றத்தின் அடிவாரத்தில், மலையேற்றப் படிகளுக்கு முன்னர் உள்ளது. இவ்விடத்தில் அவர் வடக்கிருந்திருக்கிறார். தானேத்தானாக - சிவமாக - மிளிர்ந்திருக்கிறார்!!

எனவே, இவ்விடத்தை "திரு மாணிக்கவாசகர் வடக்கிருந்து ...

🔹 திருநீற்று நிலை எய்திய இடம்
🔹 சிவநிலையை துய்த்த இடம்
🔹 தானேத்தானாய் மிளிர்ந்த இடம்
🔹 சிவமாய் இருந்த இடம்

போன்ற பெயர்களால் அழைக்கவேண்டும்.

இப்படி அழைப்பதால் என்ன பயன்?

"உண்மைகள் திரியாமலிருக்கும்", "முட்டாள்தனம் குறையும்", "சிந்தனை வளரும்" என எத்தனையோ பயன்கள் இருந்தாலும், திருத்தலத்திற்கு வருகை தரும் அன்பர்கள், திருத்தலத்தில் செய்யவேண்டியதை (வடக்கிருத்தலை) உணர்த்தும். இது ஒன்று சரியாக நடந்தால் அனைத்தும் சீராக வாய்ப்புள்ளதே! 😍

oOOo

ஒரு திருத்தலத்திற்கு சென்றுதிரும்பும் போது, நம்மைத் தெரிந்தவர்களை சந்திக்க நேர்ந்தால், அவர்கள் கேட்கும் கேள்வி:

🔹 சாமி கும்பிட்டீங்களா?
🔹 சாமிய நல்லா பாத்தீங்களா?
🔹 தரிசனம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?

பகுத்தறிவு தோன்றி, வளர்ந்து, உச்சத் தொட்டுள்ள இக்காலத்தில், இக்கேள்விகளின் பொருள்: கருவறையில் உள்ள மூலவரை நன்கு பார்த்தீர்களா?

பகுத்தறிவு தோன்றுவதற்கு முன்னர் இக்கேள்விகளின் பொருள்:

🔹 கும்பகமிட்டீரா? - மூச்சை உள்நிறுத்தும் போது மனம் செயலிழக்கும். மனமடங்கினால் மீதமிருப்பது... பரம்பொருள்!
🔹 பார்ப்பது / தரிசிப்பது - அனைத்தையும் பார்ப்பவனை பார்ப்பது!

அதெப்படி பார்ப்பவனை பார்ப்பது? இதற்கு பகவானின் 🌺🙏🏽 பதில் கேள்வி: இராமன் என்பவன் தன்னை இராமன் என்றுணர கண்ணாடி தேவையோ? 👌🏽👏🏽😍

குறைந்தது, திருத்தல வளாகத்தினுள் நுழைந்தது முதல் வெளிவரும் வரை, "நான் இன்னார்" என்ற உணர்விலுள்ள "இன்னாரைக்" கழட்டிவிட்டு நாம் நாமாக இருந்தால் போதும்.

oOOo

ஆளுடைய பிள்ளையார் 🌺🙏🏽, திருநீற்றுப் பதிகத்தில், திருநீறு என்ற சொல்லை சிவம் என்ற சொல்லிற்கு சமமாக பயன்படுத்துகிறார்:

🌷 செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயாந் திருநீறே

🌷 மாலொடு அயனறி யாத வண்ணமும் உள்ளது நீறு

அப்பெருமானின் வழி பற்றி, உடல்-உலகு காட்சிகள் நீங்கி, தான் மட்டும் "இருந்து விளங்கும்" நிலையை நிர்விகற்ப சமாதி என்று குறிப்பிடாமல், திருநீற்று நிலையென்று குறிப்பிட்டுள்ளேன். 🙏🏽

oOOo

ஊலிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮