Showing posts with label சோதிடம். Show all posts
Showing posts with label சோதிடம். Show all posts

Thursday, August 28, 2025

கூமுட்டை கணியரால் (சோதிடரால்) முகமை வேட்பாளர் படும்பாடு! ☺️

"மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால் மன்னராகலாம்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறாராம் ஒரு சிங்களத் தெலுங்கு நடிகர்! 😀

"3 துறவியரை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்தால், அரச பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, 3 நாமாசுரரை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்திருக்கிறார் கொல்டியாள் முன்னேற்றக் கழகத்தின் (கொமுக) பட்டத்து இளவரசர்! 😃

"கையில் கருங்காலி வைத்திருந்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, கையும் கோலுமாக திரிகிறாராம் மதுரை தெலுங்கரின் மனைவி! 😄 இதே அறிவுரையை கேட்டு, காலை நடை பயணத்தின் போது, கருங்காலிக் கோலை பயன்படுத்துகிறாராம் தற்போதைய கொமுக மன்னர்! 😁

(அடியேனும் பிறப்பால் தெலுங்கன்தான். ஆனால், உணர்வால் திருநெறியத் தமிழன்! 🙏🏽)

oOo

🌷 மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்தல்

> கணவன் & மனைவி - அம்மையப்பர்
> கணவன் - அப்பன் (சிவன்) - நான் எனும் நமது தன்மையுணர்வு
> மனைவி - அம்மை - மனம்
> மனைவியை பிரிதல் - மனதை பிரிதல் 
> மனதை பிரிதல் - மனதை கண்டுகொள்ளாதிருத்தல்
> மனதை கண்டுகொள்ளாதிருந்தால் - மனமடங்கும். தொடர்ந்து கடைபிடித்தால், காலப்போக்கில், அழிந்தே போகும்.
> மனமழிந்தால் மீதமிருப்பது - நமது தன்மையுணர்வு மட்டுமே. இதுவே அரச பதவியெனும் வீடுபேறாகும்.

🌷 கையில் கருங்காலி வைத்திருத்தல்

கருங்காலி மரம் உறுதி யானதாகும். முதலில், கருங்காலி மரத்தின் ஒரு பகுதியை / ஒரு கிளையை வெட்டியெடுத்து, சீர் செய்து, கோடாலிக்கு பிடியாக பொருத்திக்கொண்டு, பின்னர் அதைக் கொண்டே மரத்தை வெட்டிச் சாய்ப்பார்கள். இந்த அடிப்படையில், தான் சார்ந்துள்ள குடும்பத்தை, நிறுவனத்தை, குழுவை, இனத்தை, நாட்டை அழிப்பவரை கருங்காலிகள் என்றும், அவர்களது செயலை கருங்காலித்தனம் என்றும் அழைக்கிறோம்.

இந்த வையகத்தில், எதையும் நாம் மனதின் வழியாகத்தான் அறிய முடியும். ஓர் எடுத்துக்காட்டிற்காக, திரு அருட்கடல் பெருமானின் (அசுரத்தில், பகவான் இரமணர்) "நான் யார்?" என்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட அறிவுரையை பற்றி படிக்கிறோம்; அல்லது, கேள்விப்படுகிறோம். உடனே, அது நமது மனதின் ஒரு கூறாகிவிடும். அடுத்து, அதைப்பற்றி சிந்திக்க தொடங்குகிறோம். செயல்படுத்துகிறோம். ஒரு சமயத்தில் மனமழிந்து தெளிவு பெறுகிறோம். இவ்வாறு, மனதின் ஒரு கூறாகி, பின்னர் மனதையே அழிப்பதால், "நான் யார்?" என்ற அறிவுரை கருங்காலியாகிறது!

காலையில் கண் விழித்தது முதல், இரவு உறங்கும் வரை, தன்னை நாடும் பயிற்சியை ("நான் யார் ?" என்ற சிந்தனை) இடைவிடாது செய்யவேண்டும். விட்டு விட்டு செய்தால் பயன்படாது. இதையே, "கருங்காலிக் கோலை எப்போதும் கையில் வைத்திருக்கவேண்டும்" என்று பதிவு செய்திருக்கின்றனர்!

மனமழிந்த பிறகு அங்கு செய்வதற்கு ஒன்றுமிருக்காது. எதுவும் நம்மை பாதிக்காது. வருவதை வரவிட்டு, போவதை போக விட்டு, திரைப்படத்தை பார்க்கும் ஒரு பார்வையாளனை போன்று வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருப்போம். இதுவே கருங்காலியால் கிடைக்கும் "சிறப்பான எதிர்காலமாகும்"!

🌷 வீட்டிற்குள் 3 துறவியரை வரவழைத்தல்

முன்னர் கண்ட இரண்டும் நிலைபேற்றினை போற்றுகிறதெனில், இது அலைபேற்றினை போற்றுகிறது.

> அலைபேறு - மனதை அலைபாய விடுவது, பற்றுகளை சேர்த்துக் கொள்வது, பிறவி சுழற்சியில் இருப்பது. அதாவது, இப்போது நாமிருக்கும் நிலை.

> வீடு - நமது உள்ளம்
> 3 துறவிகள் - நனவு, கனவு, தூக்கம் என்ற 3 நிலைகள்

"அன்பே வா" திரைப்படத்தில் ஒரு ஒரு காட்சியில் கம்பிச்செய்தி (அசுரத்தில், தந்தி) வரும். அதைப் படித்துவிட்டு,

நாகேஷ்: நாளைக்கு முதலாளி வர்றார்
மனோரமா: (ஏற்கனவே அங்கிருக்கும் எம்ஜிஆர்தான் முதலாளி என்பது இவருக்கு தெரியும். எனவே...) என்னது? முதலாளி வர்றாரா?
நா: பின்ன என்ன இங்கயா இருக்குறாரு?

இந்த நகைச்சுவை காட்சிக்கு இணையானதுதான் நனவு, கனவு & தூக்கம் என்ற 3 துறவிகளை நமக்குள்ளே வர விடுவதென்பது! ஏற்கனவே அவர்களை உள்ளே வரவிட்டுத்தான் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம்! 😁 மறுபடியும் எங்கிருந்து உள்ளே வரவிடுவது?

எனில், "அரச பதவியை தக்க வைப்பது" என்பது... நாம் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை தக்க வைப்பதாகும்! 😆🤭 இது மட்டும் கொமுக-வின் பட்டத்து இளவரசருக்கு தெரிந்தால், அந்த கூமுட்டையின் நிலை... 😂! இது போன்று, மற்றவருக்கும் அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் முட்டாள்தனத்தின் உண்மைப் பொருள் தெரிந்தால், அந்த கூமுட்டைகளின் நிலை... 🤣🤣!

கணியரில் சிலர் மற்றவரிடமிருந்து தங்களை வேறுபடுத்தியும், உயர்த்தியும் காட்டுவதற்காக, உட்பொருளை உணராமல் மெய்யியல் சொற்றொடர்களை சோதிடத்திற்குள் புகுத்தி, அதை கெடுத்து, அதன் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழித்துக் கொண்டிருக்கின்றனர்!!

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, May 22, 2023

வாரம், திதி, நட்சத்திரம், யோகம் & கரணம் சொல்வதின் உட்பொருள்


🔸 வாரம் சொன்னால் வாழ்நாள் வளரும்
🔸 திதி சொன்னால் செல்வம் பெருகும்
🔸 நட்சத்திரம் சொன்னால் தீவினை போகும்
🔸 யோகம் சொன்னால் நோய் நீங்கும்
🔸 கரணம் சொன்னால் நினைத்தது நடக்கும்

சோதிடர்கள் மட்டுமல்லாது, பஞ்சாங்கம் புரட்டும் பழக்கமுள்ளவர்களும் அறிந்திருக்கும் இந்த வரிகளின் உட்பொருளை சற்று பார்ப்போம்.

🔸 வாரம் - வாழ்நாள்

வாரம் என்பது 7 நாட்களை குறிக்கும். 7 என்பது எலும்பு, தசை முதலான 7 பொருட்களை குறிக்கும். இந்த 7 பொருட்கள் நமதுடலை குறிக்கும்!

உடலை பேணினால் நோய் நொடி
இல்லாமல், நீண்ட நாட்கள் வாழலாம்!!

🔸 திதி - செல்வம்

திதி என்பது பகலவனுக்கும், நிலவுக்கும் இடையேயான இடைவெளியாகும்.

> பகலவன் - உள்ளபொருள் / பரம்பொருள்
> நிலவு - மனம்
> செல்வம் - மெய்யறிவு (ஆரியத்தில், ஞானம்)

மனதை எவ்வளவுதூரம் உள்ளபொருளுக்கு அருகில் கொண்டு செல்கிறோமோ, அவ்வளவு தூரம் நமது மெய்யறிவு பெருகும்.

(விளக்குவதற்காக இப்படி எழுதியிருக்கிறேன். உண்மையில், உள்ளபொருளை விட்டு எக்கணமும் விலகமுடியாது. நீரிலிருக்கும் மின் நீரைவிட்டு விலகமுடியுமா? அல்லது, நீருக்கு அருகில் செல்லமுடியுமா?)

🔸 நட்சத்திரம் - தீவினை

விண்மீன் (ஆரியத்தில், நட்சத்திரம்) தன்னொளி கொண்டதாகும். இதற்கு சமமாக நம்மிடமிருப்பது நமது தன்மையுணர்வாகும். நாம் இருக்கிறோம் என்பதை உணர இன்னொருவரின் / இன்னொன்றின் உதவி தேவையில்லை. இந்த நான் என்ற தன்மையுணர்வைப் பற்றி தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், நமது தீவினைகள் குறைந்து கொண்டே வரும். இறுதியில், நிலைபேறு / வீடுபேறு கிட்டும்.

நமது தன்மையுணர்வின் இன்னொரு பெயர் - உள்ளபொருள்!

🔸 யோகம் - நோய்

யோகம் எனில் இணைப்பு / இணைவது ஆகும்.

> தன்மையுணர்வு - உள்ளபொருள்
> மனம் - சீவன்
> "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம் - நோய்

மனதை தன்மையுணர்வில் தொடர்ந்து பொருத்திக் கொண்டிருந்தால், உடலல்லாத நம்மை உடலாக கருதும் நோயின் தாக்கம் குறைந்து கொண்டேவந்து, இறுதியில் நீங்கிவிடும்.

🔸 கரணம் - நினைத்தது நடக்கும்

கரணம் என்பது ஐம்பொறிகளையும் குறிக்கும்; அந்தக்கரணம் என்று ஆரியத்தில் அழைக்கப்படும் மனதையும் குறிக்கும். மனமென்றால் என்னவென்று தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், மனம் அழிந்துபோய் நாம் நாமாக இருப்போம். இதன் பிறகே, "இவ்வளவு காலமும், நம் முன்னே நடந்த யாவும், முற்பிறவிகளில் நாம் நினைத்தவையே (விரும்பியவை / வெறுத்தவை)" என்பதை உணருவோம்!

சோதிடம் என்பதே ஒளியை பற்றிய ஆராய்ச்சிதான்! நம் கண் முன்னே விரியும் உலகம், ஏன் இவ்வாறு விரிகிறது என்று நம் முன்னோர் சிந்தித்ததின் விளைவே சோதிடமாகும்!!

oOo

இப்போது ஒரு கேள்வியெழலாம்: இந்த விளக்கமெல்லாம் சரி. மெய்யியலை கொண்டுபோய் சோதிடத்திற்குள் ஏன் நுழைத்தார்கள்?

சோதிடத்திலுள்ள ஒவ்வொரு சொல்லிற்கு பின்னும் நீண்ட வரலாறு இருக்கிறது. கணக்கிலடங்காத பல பெரியவர்களின் பன்நெடுங்கால உழைப்பே இன்றைய சோதிடத்தின் அடித்தளமாகும். MB, GB, TB, ZB என்று எவ்வளவு பெரிய தரவாக இருந்தாலும், இன்று பாதுகாப்பாக, பல வகைகளில், பல இடங்களில் சேமித்து வைக்கமுடியும். அன்று இத்தகைய சூழ்நிலையில்லை. எனவே, நம் முன்னோர்கள் மனிதர்களை சேமிப்பகமாக பயன்படுத்தியுள்ளனர்!

"அடேய், மனிதா, எதிர்கால தலைமுறையினருக்காக, இதை நினைவில் வைத்திரு" என்றால் யார் நினைவில் வைத்திருப்பார்கள்? 😏 எனவே, இதை சொன்னால் வாழ்நாள் வளரும், அதை சொன்னால் செல்வம் பெருகும் என்று கதைவிட்டுள்ளனர்! 😃

கனிந்த மரம் கல்லடி படும் என்ற பழமொழிக்கேற்ப, அழியாச் செல்வமும், அழியும் செல்வமும் நிறைந்திருந்த நம் பாரதம் கண்ட படையெடுப்புகள் எண்ணிலடங்காது. இவற்றுடன், அவ்வப்போது ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் வேறு! (முதலாம் நரசிம்ம பல்லவரின் காலத்தில், 12 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மழை பொய்த்துள்ளது!!) இப்படிப்பட்ட சூழ்நிலையில், "பெரியவர்கள் கண்டெடுத்த விலைமதிப்பில்லா முத்துகளை எவ்வாறு பாதுகாப்பது?" என்று நம் முன்னோர்கள் சிந்தத்தின் விளைவே "மக்களை சேமிப்பகமாக பயன்படுத்தலாம்" என்ற நுட்பம்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

Friday, April 9, 2021

சோதிடம் - ஒளியைப் பற்றிய அறிவியல்!!

ஒரு வயதான சோதிடர், சோதிடத்தின் பெருமையைப் பற்றி பேசுகையில், நியூட்டன், கெப்ளர் போன்ற பரங்கியர்களும் சோதிடர்களாக இருந்தனர் என்று கூறி மகிழ்ந்தார். அதாவது, அப்பரங்கியர்களால் சோதிடம் பெருமையடைவது போல் பேசினார். அவருக்கு நான் கொடுத்த பதிலை சற்று மாற்றி இங்கு பதிவிட்டுள்ளேன். நன்றி.

oOOo

🔸சோதிடம் என்பது திருமறைகளின் ஒரு பகுதி. அதன் மதிப்பை, புராதனத்தை உணர இந்த ஒரு தகவல் போதும். நியூட்டன், கெப்ளர், ஆர்க்கிமிடிஸ் போன்ற திருட்டுப்பயல்களின் வரலாறு தேவையில்லை. பராசரர், வராகமிகிரர், ஸ்ரீபதி, பரமேஸ்வரா போன்ற மேதைகள் நம்மிடமிருக்க, எடுத்துக்காட்டிற்குக்கூட நம்மை சீரழித்த பரங்கியர்களைப் பயன்படுத்தக்கூடாது.

🔸அக்காலத்தில் மருத்துவர்களே சோதிடர்களாகவும் இருந்தனர் என்று கேள்விப்பட்டதுண்டு. அதாவது, மக்களின் துயர் துடைக்க உருவாக்கப்பட்ட ஓர் அறிவியலே சோதிடம்!

🔸தாங்கள் சொல்வது போல் நமது முன்னோர்களின் அண்ட-பிண்ட ஆரய்ச்சியின் விளைவாக தோன்றியவற்றில் ஒன்றாக சோதிடமும் இருக்கும்.

🔸திருமறைகளின் இறுதி நோக்கம் மனிதன் மெய்யறிவு (ஞானம்) பெற்று நிலைபேறு (சமாதி - மரணமில்லாப் பெருவாழ்வு) பெறுவதே. எனில், அவற்றின் ஒரு பகுதியான சோதிடமும், அந்நோக்கத்தை அடைவதற்கு உதவி புரிவதற்காகத்தான் உருவாக்கப்பட்டிருக்கும் என்பது எனது கருத்து.

🔸சோதிடம் - ஜோதிடம் - ஜோதிஷா - ஜோதி = ஒளி. ஒளியைப் பற்றிய அறிவியல்.

🔸ஜோதிஸ - ஜோதிஸ் + அ = சாபம் அல்லது மதி மயக்குவது. உடலல்லாத நம்மை உடலாக நாம் காணுவதற்கு முக்கிய காரணமான ஒளியை "மதி மயக்குவது" என்றும், இப்படி மதி மயங்கி கிடப்பதை சாபம் என்றும் கொள்ளலாம்.

oOOo

எனது சோதிட ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!! 🙏🏽