Showing posts with label தகப்பன் சுவாமி. Show all posts
Showing posts with label தகப்பன் சுவாமி. Show all posts

Saturday, June 11, 2022

அன்னையின் மைந்தனும் தகப்பன் சுவாமியும்!!


விநாயகர் எனில் விசேட நாயகர். அதாவது, சிறப்பு வாய்ந்த நாயகர்.

🌷 இவரிடமென்ன சிறப்புள்ளது?

அப்பனின் தொடர்பில்லாமல், அன்னையால் மட்டுமே உருவாக்கப்பட்டவர் என்பதால் "சிறப்பு வாய்ந்தவர்" ஆகிறார். அதாவது, நம்மிடம் சேர்ந்துள்ள அறிவு (விநாயகர்) அனைத்தும் உலகிலிருந்து (அன்னை) பெறப்பட்டது; உள்ளபொருளில் (அப்பன்) இருந்து அல்ல என்பது உட்பொருள்.

அடுத்து, இளைய பிள்ளையான கந்தன்.

கந்தன் - திரண்டவன் - நம்மிடமிருந்து திரண்டு வெளிப்படும் ஓர் ஆற்றல் / அறிவு.

🌷 இவ்வாற்றல் / இவ்வறிவு வெளிப்படும்போது 4 செயல்கள் ஒருங்கே நடைபெறும்:

🔸 ஆற்றல் / அறிவு வெளிப்படுதல் (கந்தன்)
🔸 காணப்படும் உலகம் (அன்னை) மறைதல்
🔸 நம்மை நாம் (அப்பன்) தெளிவாக உணர்தல்
🔸 "நாம் இன்னார்" என்ற பொய்யறிவு (அசுரன்) நீங்குதல்

🌷 கந்தன் எனும் ஆற்றல் / அறிவு வெளிப்படும்போதுதான் நம்மை நாம் (தகப்பன்) தெளிவாக உணர்வதால், கத்தனுக்கு "தகப்பன் சுவாமி" / "சுவாமிநாதன்" என்று பெயரிட்டனர்.

🌷 முதலில் உலகைப் பற்றிய தேவையான அறிவு (விநாயகர்) கிடைக்கிறது. இறுதியில், நம்மைப் பற்றிய அறிவு (கந்தன்) கிடைக்கிறது. இதனால், விநாயகர் மூத்தவராகிறார்; கந்தன் இளையவராகிறார்.

🌷 விநாயகர் எனும் அறிவு உலகிலிருந்து பெறப்பட்டது. இதனால்தான், அன்னையின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சந்தனத்திலிருந்து (உலகிலுள் நானாவகையான பொருள்களிலிருந்து) பிறந்தவர் விநாயகர் எனப்படுகிறார். இதற்கு மாறாக, கந்தன் எனும் மெய்யறிவு நம்மிடமிருந்து பிறக்கிறது. இதனால்தான், அன்னையின் துணையில்லாமல், அப்பனிடமிருந்து பிறந்தவர் கந்தன் எனப்படுகிறார்.

(இங்கு கந்தன் மெய்யறிவுக்கு சமமாகிறார். இதே கந்தன் சிவகுடும்பத்தில் ஒருவராய் வீற்றிருக்கும்போது மனதிற்கு சமமாவார். இவரே தனியாகவோ அல்லது துணைவியருடன் இருக்கும்போது உள்ளபொருளாகிறார். தமிழ் எழுத்துகளை இடத்திற்கேற்றவாறு உச்சரிப்பது போன்று, இவரையும் இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ளவேண்டும்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, May 28, 2019

சிங்கப்பெருமாள் பிறந்த தினம் - ஆதிசங்கரரின் கராவலம்ப தோத்திரம்

சென்ற வைகாசி வளர்பிறை பதினான்மையன்று (சதுர்த்தசி) சிங்கப்பெருமாளின் பிறந்த தினம் வைணவர்களால் கொண்டாடப்பட்டது. (பெரும்பாலும் சுவாதி நாள்மீனும் உடன் வரும்). அச்சமயம் சில இடுகைகளும், சில காணொளிகளும் எனக்கு வந்து சேர்ந்தன. அதிலொரு இடுகையில் சிங்கப்பெருமாளைப் புகழ்ந்து (அல்லது வேண்டி) #ஆதிசங்கரர் பாடிய #கராவலம்ப #தோத்திரம் (கை தூக்கி விடு / கை கொடு என்று வேண்டுதல்) பிறந்த வரலாற்றை எழுதியிருந்தார்கள். அதிலிருந்து ஒரு பகுதி:

... ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த  காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு #கபாலிகன் அவரைக் காளிக்கு நரபலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நரபலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை). அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார். தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதிசங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்மபாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த கபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார். அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது வரலாறு. ...

👊🏼 தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் -  இவர்களாகவே ஆதிசங்கரரை சிங்கப்பெருமாளின் பத்திமன் என்று எழுதிக்கொண்டுவிட்டார்கள்!! 😃 பத்திமையும் மெய்யறிவும் வேறுவேறல்ல என்று இலக்கணம் எழுதியவர், வாழ்நாள் முழுவதும் "உருவமற்ற, செயலற்ற, குணங்களற்ற பரம்பொருள் ஒன்றே" என்ற பேருண்மையை நிலைநாட்டப் போராடியவர் ஒர் உருவத்திடம் பத்திமை கொண்டாராம்! விட்டால், அடுத்த பதிப்பில், சங்கரர் நாமத்தை போட்டுக் கொண்டுப் பாடினார் என்றும் எழுதுவார்கள்!! 😂

👊🏼 நரசிம்மர் பத்மபாதருக்குள் ஆவேசித்து, அந்த கபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார் - அவென்ஜர்ஸ் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவரை வைத்து எழுதியிருப்பார்கள் போலிருக்கிறது!! 😁 ஏற்கனவே ஒவ்வொரு சீவனுள்ளும் பரம்பொருள் உள்ளது (இந்த கண்ணோட்டம், மெய்யறிவு கிடைத்த பின், பரம்பொருளினுள் தான் அனைத்தும் உள்ளது என்ற மாறும்). இன்னொரு முறை பரம்பொருள் எப்படி நுழையும்? இப்படி நுழைய முடியும் என்று எடுத்துக் கொண்டால், ஏன் பத்மபாதருக்குள் நுழையவேண்டும்? கபாலிகனுக்குள் நுழைந்து அவனை சரி செய்திருக்கலாமே! 😎

(ஆவேசித்தல் - ஆ+வேசம் - ஆ+வேடம் - ஒரு சீவனின் உரு கொள்ளுதல்)

நாம் உயிரினும் மேலாக கருதும் ஒரு நபருக்கு கடுந்துன்பம் நேரப்போவதை உணர்ந்தால் / கண்டால், பாய்ந்தோடிச் சென்று எப்பாடுபட்டாவது அவரைக் காப்போம். துன்பத்தை போக்கிய பின்னரும், நாம் நமதியல்பு நிலைக்கு திரும்ப சற்று நேரமாகும். அச்சமயம், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை இளைப்பாற வைக்க முயற்சிப்பார்கள். இது போன்றொரு நிகழ்வு தான் பத்மபாதருக்கு நடந்திருக்கும். தனது மெய்யாசிரியருக்கு நேரவிருக்கும் இன்னலை உணர்ந்தவுடன் / கண்டவுடன் பாய்ந்தோடிச் சென்று கபாலிகனைக் கொன்றிருக்க வேண்டும். கொன்ற பின்னரும், தனதியல்பு நிலைக்குத் திரும்பாமல் இருந்தவரை, தவம் கலைந்து எழுந்த ஆதிசங்கரரும், மற்ற மாணவர்களும் இளைப்பாற செய்திருக்க வேண்டும்.

ஆதிசங்கரர் செயற்கரிய செயல்களை செய்தவர் என்பதாலும், அவர் காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் கடந்து விட்டபடியாலும் நிகழ்வுகள் கற்பனைகளோடு கலந்துவிட்டன. "பத்மபாதர் சிங்கமாக உருமாறினார்" என்ற ஆரம்ப நிலை 🤒 முதல், "பரம்பொருள் நரசிம்மமாக பத்மபாதருக்குள் நுழைந்து" என்று அவென்ஜர்ஸ் நிலை 🥴 வரை பல படிகளைத் தாண்டி விட்டது.  இவற்றுடன், ஒரு கூட்டத்தின் "தனது பத்திமனான" என்ற கைங்கர்யம் வேறு சேர்ந்துவிட்டது. 🤪

💥💥💥💥💥

ஆன்மாவின் போதமருளும் ஆசானாம் சங்கரன்
அவ்வான்மாவுக்கு அன்னியனாவனோ - அவ்வான்மாவாக
என்னகத்தே இருந்து இன்று தமிழ் சொல்வானும்
அன்னவனன்றி மற்றார்

ஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய #ஆத்மபோதம் என்னும் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை பகவான் ஸ்ரீரமணருக்கு அனுப்பியிருந்தார் ஒரு முகம்மதிய பத்திமர். அதைக் கண்ணுற்ற பகவான், ஓர் இரவு முழுவதும் கண் விழித்திருந்து, ஒரு புதிய தமிழ் மொழிபெயர்ப்பை எழுதினார். அந்த மொழி பெயர்ப்பின் மங்கல செய்யுளே மேலுள்ள பாடல்.

(இந்தச் செய்யுளில் ஆதிசங்கரர் யார் என்பதை மிகத்தெளிவாக காண்பிக்கிறார் பகவான்)

🌸🏵️🌹🌻🌷🌼💮

#சிங்கப்பெருமாள் என்பவர் யார் அல்லது எது என்று தெரிந்து கொண்டால் எல்லா குழப்பங்களும் தீரும்:

சீவனாகிய நம்மால் ஓரளவிற்கு மேல் நமக்குள் ஆழ முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் வெளிமுகமாகவே செல்ல எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை, திரும்ப திரும்ப நான் என்னும் நமது தன்மையுணர்வின் மேல் கொண்டு வந்து வைப்பது மட்டுமே. ஒரு சமயத்தில் நமது இயலாமையை நாம் உணர்ந்து நமது முயற்சியை கைவிடுவோம் (இதுவே #சரணாகதி எனப்படும்). அச்சமயம் உள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நமக்கு ஒரு புதிய தெளிவைக் (அறிவு என்றும் கொள்ளலாம்) கொடுக்கும். இந்த ஆற்றலே #காலசம்ஹார #மூர்த்தி ஆவார் (இந்த காலசம்ஹாரம் வைணவத்தில் #ஆணவ #சம்ஹாரம் - #இரணிய #வதம் -  என்றும், காலசம்ஹார மூர்த்தி #நரசிம்மர் என்றும் மாறிவிட்டது.) கிடைத்த புதிய தெளிவே #தகப்பன் #சுவாமி (#சுப்ரமணியர்) எனப்படும் (சாக்தத்தில் #அன்னபூரணி என்று அழைக்கப்படுவதும் இதே தெளிவு தான்). இந்த தெளிவால், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு (மாயை) அழிந்துவிடும். #காலசம்ஹாரம் - காலனை உதைப்பது என்பது இதுவே!! 

(உள், வெளி, ஆழ்ந்து, வெளிப்பட்டு என்பதெல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தியுள்ள சொற்கள். உண்மையில் இருப்பது ஒரு பரம்பொருளே. காணப்படும் அனைத்து அதன் வெளிப்பாடே. நாம் இறைவனை தேடுவதென்பது: "ராமன் என்பவன் தன்னை ராமன் என்று உணர கண்ணாடி வேண்டுமோ?", #பகவான் #ஸ்ரீரமணர் 😀)

Sunday, May 12, 2019

வெங்காயம் சுக்கானால்... 😍

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே!!

-- #காளமேகப் #புலவர் 🙏🏼

சமையலறை சரக்குகளை வைத்தே ஒரு அருமையான ஆன்மிக #சிலேடை பாடலை எழுதியிருக்கிறார்! 👏🏼👌🏼😍 சிலேடை பாடல்கள் இரு பொருள் தரும். இப்பாடலின் ஆன்மிக பொருளை மட்டும் இங்கு பார்ப்போம்.

🔶 வெங்காயம் - வெறும் காயம் - வெங்காயத்தை இறுதி வரை உரித்தாலும் எதுவும் இருக்காது. அவ்வாறே இவ்வுடலையும் இறுதி வரை உரித்துப் பார்த்தாலும் உள்ளே யாரும் இருக்கமாட்டார்கள்.

🔶 சுக்கானால் - காய்ந்து சாரமற்ற இஞ்சி போன்று உயிர் பிரிந்த உடல் (காயம்).

🔶 வெந்தயத்தால் ஆவதென்ன - உயிர் பிரிந்த உடலை எரிப்பதால் கிடைப்பதென்ன? வெறும் சாம்பல் மட்டுமே.

🔶 இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை - இந்த உலகில் யார் இறந்த உடலை வைத்துக்கொள்ள விரும்புவர்?

🔶 மங்காத சீரகத்தை தந்தீரேல்  - சீரகம் - சீரான அகம் - அலைபாயாத மனம் - சஞ்சலமற்ற அறிவு - நிலைபேறு. நிலைபேற்றை கொடுத்தீர்களேயானால்...

🔶 வேண்டேன் பெருங்காயம் - பெரும் / பெருமைக்குரிய உடல். மனித பிறவியே கிடைத்தற்கரிய பிறவியாதலால், இங்கு பெருங்காயம் மனித உடலைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். கவன ஆற்றலை நான் என்னும் தன்மையுணர்வின் மீது திருப்புவது என்பது மனிதப் பிறவியால் மட்டுமே முடியும். ஏனைய பிறவிகளுக்கு ஊழ்வினையில் கொடுப்பினை இருந்தால் மட்டுமே சாத்தியம். (இங்குதான் பேயாரின் (காரைக்கால் அம்மையார்) 🌺🙏🏼 அறிவுத் திறனை நாம் பாராட்ட வேண்டும். பெருங்காயமோ, சிறுகாயமோ, உன்னை என்றும் மறவாதிருக்கவேண்டும் என்று கேட்டுவிட்டார்! 😀)

🔶 வேரகத்து செட்டியாரே - வேரகம் - #திருவேரகம் - #சுவாமிமலை. செட்டியார் - (இங்கு) பலசரக்கு வாணிபம் செய்பவர். இவ்வண்டத்திலுள்ள அனைத்து சரக்குகளையும் வைத்து, அவற்றை உயிர்கள் அனுபவிக்க உழைப்பு என்னும் குடியிறையைப் பெற்றுக் கொண்டு வாணிபம் நடத்தும் சுவாமிமலையில் சமாதியாகியுள்ள பெருமான் - #தகப்பன் #சுவாமி!! 🌺🙏🏼

படிக்கும்போதே மனதிற்கு குதூகலத்தையும் 😊, பொருளை உணரும் போது பெரும் மகிழ்ச்சியையும் 😍 கொடுக்கும் இது போன்ற உயர்ந்த பொருள் பொதிந்த சிலேடைப் பாடல்களைப் இனி யார் தமிழன்னைக்கு அணிவிக்கப் போகிறார்கள்? 😔

🌱🌿🌳🌴

இந்த பாடல் எனக்கு கிடைக்கும் போதே நாமப்பேர்வழிகளின் கைங்கரியத்துடன் தான் கிடைத்தது. சீரகம் என்றால் ஸ்ரீ + அகமாம்! 😝 ஏரகம் என்றால் வைகுண்டமாம!! 😂 (கணவனும் மனைவியும் தனிதனிக் குடித்தனம் போலிருக்கிறது!! 😁) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தக் கூட்டம் சைவத்திலிருந்தோ, அத்வைதத்திலிருந்தோ கதைகளை சுட்டு வைணவ காப்புரிமை (நாமம்) போட்டுவிடும் என்பதை நன்கு அறிவேன். இது தான் முதல் முறை ஒரு சைவப் பாடலை சுடுவதைப் பார்க்கிறேன். அன்னை தமிழை யாரும் சரியாக கவனிப்பதில்லை என்பதாலா? "யாரும் சரியாக கவனிக்காத போது", "அனைவரின் கவனமும் வேறு திசையில் இருக்கும்போது", "இன்னும் புகழ் பெறாத மகான்"... எல்லாம் இவர்களது தொழிலின் உட்கூறுகள்!! அந்த கொங்கணவச் சித்தரும் (திருமலை பெருமாள் 🌺🙏🏼), சட்டை முனி சித்தரும் (திருவரங்கப் பெருமாள் 🌺🙏🏼) தான் இவர்களை திருத்த வேண்டும்.

💥💥💥💥💥

இப்படியே போனால் இவர்களது பாதையில் தொடர்ந்து வரும் பரங்கி மதத்தினர் இன்னும் சில தலைமுறைகளில் இப்பாடலை தமதாக்கி, சீரகம் எனில் உள்ளூர் கிளை என்றும், ஏரகம் எனில் இத்தாலியிலுள்ள தலைமை அலுவலகம் என்றும் கதை விட வாய்ப்புள்ளது!! 🤣🤣

💥💥💥💥💥

இன்று வரை வெட்டு, குத்து, குண்டு என்று தொழிலை ஓட்டும் வெடிகுண்டு மதத்தினர் ஒரு வேளை நாம பேர்வழிகளின் வழியில் பயணிக்க நேர்ந்தால்... சீரகம் எனில் உள்ளூர் தீவிரவாத பயிற்சி கூடத்திலுள்ள சுவர் என்றும், ஏரகம் எனில் கருப்புத்துணி மூடிய கட்டிடம் என்றும் கதை விடுவார்கள் என்று உறுதியாக கற்பனை செய்து கொள்ளலாம்!! 🤣🤣🤣

Monday, May 6, 2019

திருக்கடவூர் - எமபயம் போக்கும் தலம்!! 🌺🙏🏼

#திருக்கடவூர் - மார்க்கண்டேயருக்கு அருளிய தலம் - எமபயம் போக்கும் தலம் - #காலசம்ஹாரமூர்த்தி வெளிப்பட்ட தலம்

🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺🙏🏼🌺


🔆 யம (Yama) என்பதை மாற்றிப் படித்தால் மாய (Maya) என்று வரும். அதாவது, மாயை - இல்லாதது (#பகவான் #ஸ்ரீரமணர் 🌺🙏🏼 அருளியது). யமனின் வாகனம் எருமை மாடு - சோம்பலைக் குறிக்கும். நம்முள் இருக்கும் இமைப்பொழுதும் நீங்காதான் தாள்களை இமைப்பொழுதும் நீங்காமல் பற்ற வேண்டும். ஒரு கணம் தவறினாலும் மாயையின் பிடிக்குள் போய்விடுவோம். ஆக, இறப்பு என்பது மெய்யிலிருந்து பொய்க்குள் போய் விழுவது! மற்றும், பிறப்பு என்பது பொய்யிலிருந்து மெய்க்கு வந்து சேருவது!!


"#மெய்யறிவு (#ஞானம்) கிடைத்த பிறகு என்னவாயிற்று?", என்று அன்பர் ஒருவர் கேட்டதற்கு, "அத்தோடு உயிர் பயம் போயிற்று", என்று பதிலளித்தார் பகவான் ஸ்ரீ ரமணர். ஆக, "எம பயம் போயிற்று" என்பதன் பொருள் "மெய்ஞானம் கிடைத்தது" என்பதாகும்! "எமபயம் போக்கும் தலம்" எனில் "மெய்ஞானம் அருளும் தலம்" என்பதாகும்!!


🔆 "#யமன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறைவனைப் பணிந்து நின்றார்" என்பதன் பொருள் - மெய்யறிவு தோன்றும் கணம் மாயக் காட்சிகள் மறைந்து போகும். பின்னர், மீண்டும் தோன்றும். மெய்யறிவு பெறுவதற்கு முன் மாயை என்பது அரைகுறை வெளிச்சத்தில் தெரியும் பாம்பு போன்றது; பெற்ற பின்  நல்ல வெளிச்சத்தில் தெரியும் கயிறு போன்றது (மெய்யறிவே வெளிச்சம்). மெய்யறிவு பெற்ற பின்னரும் மாயக் காட்சிகள் தொடரும். ஆனால், மெய்யறிவாளரை ஒன்றும் செய்யாது. யமன் மீண்டும் உயிர் பெற்று எழுந்து இறைவனைப் பணிந்து நிற்பதன் பொருள் இதுவே!!


🔆 மூலவரின் பெயர் திரு #அமிர்தகடேச்சுவரர். கடம் என்றால் குடம். இங்கு குடம் உடல் என பொருள்படும்.. அமிர்தம் என்பது இங்கு அழிவற்றது / இறப்பற்றது என பொருள்படும். இணைத்துப் பார்க்கும் போது "அழிவற்ற உடலை உடையவர்" என பொருள் வரும். "பிறப்பிலியான சிவப்பரம்பொருளுக்கு உடலா?", என்ற கேள்வி எழலாம். பொருள் நிலையைத் தாண்டிய இறையை (பரம்), பொருள் என்ற சொல்லோடு இணைத்து பரம்பொருள் என்றழைப்பது போல, தோன்றி மறையும் நுண்ணுயிரியின் உடல் முதல் விண்மீன் வரை அனைத்திற்கும் இடம் அருளும் அண்டத்தை இறைவனின் உடலாகக் கருதி இவ்வாறு பெயரிட்டிருக்கிறார்கள்.


🔆 #காலசம்ஹார #மூர்த்தி - தன்னை வணங்கிய மார்க்கண்டேயனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காலனை (யமனை) உதைத்து தள்ளியவர் என்று சுவைபட ஒரு பேருண்மையை பதிவு செய்திருக்கிறார்கள்.


சீவனாகிய நம்மால் ஓரளவிற்கு மேல் நமக்குள் ஆழ முடியாது. நம்மால் முடிந்ததெல்லாம் வெளிமுகமாகவே செல்ல எத்தனிக்கும் நமது கவன ஆற்றலை, திரும்ப திரும்ப நான் என்னும் நமது தன்மையுணர்வின் மேல் கொண்டு வந்து வைப்பது மட்டுமே. ஒரு சமயத்தில் நமது இயலாமையை நாம் உணர்ந்து நமது முயற்சியை கைவிடுவோம் (இதுவே #சரணாகதி எனப்படும்). அச்சமயம் உள்ளிருந்து ஒரு ஆற்றல் வெளிப்பட்டு நமக்கு ஒரு புதிய தெளிவைக் (அறிவு என்றும் கொள்ளலாம்) கொடுக்கும். இந்த ஆற்றலே காலசம்ஹார மூர்த்தி ஆவார் (இந்த காலசம்ஹாரம் வைணவத்தில் #ஆணவ #சம்ஹாரம் - #இரணிய #வதம் -  என்றும், காலசம்ஹார மூர்த்தி #நரசிம்மர் என்றும் மாறிவிட்டது.) கிடைத்த புதிய தெளிவே #தகப்பன் #சுவாமி (#சுப்ரமணியர்) எனப்படும் (சாக்தத்தில் #அன்னபூரணி என்று அழைக்கப்படுவதும் இதே தெளிவு தான்). இந்த தெளிவால், "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு (மாயை) அழிந்துவிடும். காலசம்ஹாரம் - காலனை உதைப்பது என்பது இதுவே!! (உள், வெளி, ஆழ்ந்து, வெளிப்பட்டு என்பதெல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தியுள்ள சொற்கள். உண்மையில் இருப்பது ஒரு பரம்பொருளே. காணப்படும் அனைத்து அதன் வெளிப்பாடே. நாம் இறைவனை தேடுவதென்பது: "ராமன் என்பவன் தன்னை ராமன் என்று உணர கண்ணாடி வேண்டுமோ?", பகவான் ஸ்ரீ ரமணர் 😀)


🔆 என்றும் 16 பெற்ற #மார்க்கண்டேயர் - இதை படித்ததும், மார்க்கண்டேயர் வரம் பெற்ற பிறகு 16 வயது இளைஞனாகவே வாழ்ந்தார் என்று நினைத்துக் கொள்வோம்!! இது தவறு. 😁


பகவான் ஸ்ரீரமணர் தனது 16 வயதில், மதுரையில் அவரது சிறிய தந்தையின் வீட்டில் தங்கியிருந்த போது மெய்யறிவு பெற்றார். பிற்காலத்தில் அவரது ஆசிரமத்திற்கு வந்த ஒர் அன்பர், "இத்தனை வருடங்களில் தங்களது (மெய்யறிவு) நிலையில் ஏதேனும் மாற்றமுண்டா?" என்று கேட்டதற்கு, பகவான், "இல்லை. அதே நிலைதான் இன்றும். சிறிதும் மாற்றமில்லை." என்று பதிலளித்தார்.


இது தான் "என்றும் 16" என்பதின் பொருள்!! மார்க்கண்டேயர் தனது 16 வயதில் மெய்யறிவு பெற்று மார்க்கண்டேய மகரிஷியாக 🌺🙏🏼 உயர்ந்திருக்கிறார். பின்னர், அந்த நிலையிலேயே வாழ்ந்து, இறுதியில் திருக்கடவூரில் திரு அமிர்தகடேச்சுவர அடையாளத்தின் கீழ்  சமாதியாகியிருக்கிறார். மெய்யறிவு பற்றிய அவரது அறிவுரைகளை அல்லது மெய்யறிவுப் பாதையில் அவருக்கு கிடைத்த பட்டறிவை தல வரலாறு, திருவிழாக்கள், இறை உருவங்கள் மற்றும் இறை பெயர்கள் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!! 🙏🏼


🌸🏵️🌻🌷🌼🌹💮


தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி

விலக்குவா ரிலாமை யாலே விளக்கத்திற் கோழி போன்றேன்

மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்து

கலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னீரே


-- அப்பர் 🌺🙏🏼 தேவாரம் 4.31.5


பொருள்: கடவூர் வீரட்டனீரே! நாணத்தக்க செயல்களையே செய்து வாழ்நாளைக் கடத்தி, ஏற்ற செயல் எதுவும் செய்யாமல், தவறு செய்வதைத் தடுத்து நல்வழிப்படுத்துவாரும் ஒருவரும் இல்லாமையால், செஞ்சுடர் விளக்கத்தில் தானே கூவித் தானே அடங்கும் கோழியைப் போல உள்ளேன். என் மனத்தினுள்ளே ஐம்பொறிகளும் கலக்கத்தைத் தருகின்றன. யமனுடைய ஏவலர்கள் வந்து கலக்குதலால் யான் யம பயத்தாற் கலங்குகின்றேன்.


🌸🏵️🌻🌷🌼🌹💮


குறிப்புகள்:


1. இணைப்பு படம்:  சென்ற 13/04/19 சனிக்கிழமையன்று திருக்கடவூரில் நடந்த யம சம்ஹார விழாவின் போது எடுக்கப்பட்ட படம். திரு சிவ ஏ விஜய் பெரியசுவாமி அவர்களின் முகநூலில் பக்கத்திலிருந்து எடுத்தேன்.


2. திருக்கடவூர் பழம்பெரும் தலமாக இருந்தாலும், எண்ணற்ற அருளாளர்களை ஈர்த்த தலமாக இருந்தாலும், மக்கள் வரவு அதிமாக இருப்பதால், அமைதியும் தனிமையும் வேண்டுவோர் அருகிலுள்ள இன்னொரு தேவாரப் பாடல் பெற்ற தலமான #திருக்கடவூர் #மயானம் செல்லலாம். என்ன ஓர் அமைதி!! 😍 நம் தனித்துவத்தை இழக்க - நான் என்னும் வடிவில் ஒளிரும் இறைவனின் திருப்பாதத்தை பற்றிக் கொள்ள _ தவமியற்ற சிறந்த தலம்!! 😌

Tuesday, January 29, 2019

பழநி திருப்புகழ் 🌸🙏

சில நாட்களுக்கு முன் #சென்னை #பெசண்ட்நகர் #அறுபடை #முருகன் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கிருக்கும் #பழநியாண்டவர் திருக்கோயிலில் செதுக்கப்பட்டிருந்த பின் வரும் #திருப்புகழ் பாடல் என் கருத்தை கவர்ந்தது. அதிலும், இறுதி 2 அடிகள் என்னை சில நாட்களாகவே சிந்திக்க வைத்தது! இதோ அந்த பாடல்...

[image_0]

வசன மிக ஏற்றி மறவாதே
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசை பயில் சடாட்சரம் அதாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழநிமலை வீற்றருளும் வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே 🌸🙏

(நான் திருப்புகழிலோ தமிழிலோ புலமை பெற்றவனல்ல. இந்தப் பாடலைக் கண்டதும் என் உள்ளுணர்வில் எழுந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இடுகையை எழுதியுள்ளேன். 🙏)

🌼 வசன மிக ஏற்றி மறவாதே

"அளவுக்கு மீறி நூல்களை படிப்பதால் ஒரு பயனும் இல்லை. நான் என்பது உடலுக்குள் இருப்பது. புத்தகத்தில் அல்ல." என்பது பகவான் ஸ்ரீரமணரின் 🌸🙏 வாக்கு. அதாவது, நமக்குள் தேட வேண்டிய ஒன்றை நூல்களுக்குள்ளாகவே தேடிக் கொண்டிருந்தால் ஒரு பயனுமில்லை என்கிறார் பகவான். உள்ளங்கை நெல்லிக்கனி போலுள்ள இறையுணர்வை விளக்குகிறேன் பேர்வழி என்று வண்டி வண்டியாய் எழுதித் தள்ளியிருப்பார்கள். அல்லது, மணிக்கணக்கில் பேசி நுங்கம்பாக்கம் போக வேண்டிய விவேக் திருப்பதி போய் சேர்ந்தது போல் நம்மை எங்காவது கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்! 😁

🌼 மனது துயர் ஆற்றில் உழலாதே

மனமென்பது துயரமான ஆறு மட்டுமல்ல. வற்றாததும் கூட. இதனுடைய
மூலத்தை தேடினாலன்றி இதிலிருந்து கரையேற முடியாது. எண்ணங்களின் குவியலே மனம் என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர். "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணமே அனைத்திற்கும் மூல காரணம். இந்த "நான் என்பது என்ன?" அல்லது இந்த "நான் என்பது எங்கிருந்து தோன்றுகிறது?" என்று ஆராய்ந்தால் மட்டுமே இது அடங்கும். இந்த கருத்தை திருத்தல வரலாறுகளிலும், புராணக் கதைகளிலும் மற்றும் சிலை வடிவங்களிலும் வெகு அழகாக பதிவு செய்து வைத்திக்கிறார்கள் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட ஒரு சிலை தான் கோவையருகில் உள்ள திரு #அவிநாசியப்பர் 🌸🙏 திருத்தலத்தில் உள்ளது.

[image_1]

கூத்தப்பெருமானுக்கும் காளியம்மைக்கும் நடந்த போட்டி நடனம் பற்றி படித்திருப்போம். எந்த வித நடனத்தினாலும் அம்மையை வெல்ல முடியாமல் போகவே, இறுதியாக, பெருமான் தனது காலை உயர்த்தி தனது காதணி ஒன்றை கழற்றிக் காட்டுவார். அம்மையால் இதைச் செய்ய முடியாமல் போகவே, தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியாகிவிடுவார். இக்கதையில் வரும் காளியம்மை தான் மனம், மாயை எல்லாம். பெருமான் மெய்யறிவு பெற முயலும் சீவன். பல வித நடனங்கள் என்பது பக்தி, யோகம், ஜெபம், தியானம் போன்ற பல வித தவ முயற்சிகள். தனது காலை உயர்த்தி தனது காதணியை கழட்டுவது என்பது வெளிமுகமாகவே சென்று கொண்டிருந்த கவன ஆற்றலை தன் மீதே திருப்பி தனது மூலத்தில் ஒடுங்குதல் - "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னாரை இழத்தல் (கழட்டுதல்) - "நான் நானே" என்ற தனது உண்மையை உணர்தல். உண்மையை உணர்ந்த சீவன் சிவமாகிறது. இத்தோடு மாயையின் மாயாஜாலங்கள் உண்மைத் தன்மையை இழந்து கானல்நீர் காட்சிகள் போன்றாகி விடுகிறது.

எப்பேர்பட்ட பேருண்மையை எவ்வளவு அழகாக உவமையாக்கி, எவ்வளவு அருமையாக சிலையாக செதுக்கியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!! 😍🙏 (ஐயன் செதுக்கப்பட்டிருக்கும் தூணுக்கு எதிர் தூணில் அம்மையையும் அழகுடன் செதுக்கியிருந்தார்கள். படம் பிடிப்பதற்குள் பூசாரி வந்து தடுத்துவிட்டார். படம் பிடித்தால் இறையாற்றல் போய்விடுமாம்! 😀 தூணில் தான் இறையாற்றல் இருக்கும் போலிருக்கிறது. 😁 மேலும், இறையாற்றலை விட எனது படக்கருவி ஆற்றல் மிகுந்தது போலிருக்கிறது!! 😂)

🌼 இசை பயில் சடாட்சரம் அதாலே

சடாட்சரம் எனில் #ஆறெழுத்து - #சரவணபவ. எனில், நாணல்காட்டில் பிறந்தவர் (பிறந்தது). நாணல்காடு என்றால் எது? அதில் பிறப்பது எது? துன்பங்கள் நிறைந்த உலகமும், அதற்கு உதவிடும் மனமும் தான் நாணல்காடு. இத்துன்ப உலகில் சொல்லொண்ணா அல்லல்பட்டு, சரியான பக்குவம் அடைந்த பின் தெளிந்த, திரண்ட, கூர்மையான ஒரு அறிவு பிறக்கும். அனைத்திற்கும் காரணமான "நான் இன்னார்" என்ற பொய்யறிவை துளைத்து பிளக்கும். இந்த அறிவு தான் நாணல்காட்டில் பிறந்த கந்தவேல்!! 🌸🙏

இந்த கந்தவேலைப் பற்றிய சிந்தனை, பின்னணி இசை போன்று தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் செய்யவேண்டும். #அருணகிரிநாதர் 🌸🙏 "இசை பயில்" என்று 2 சொற்களில் வெளியிட்ட உத்தியை, பகவான் ஸ்ரீரமணர் "விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சி போல் விட்டிடாது உன்னலே" என்று 8 சொற்களாக விரித்து அருளியிருக்கிறார் (உலகின் பொய்த்தன்மையை, தன்மையின் உண்மைத்தன்மையை பற்றி அவ்வப்போது சிந்திக்காமல், ஆற்றின் ஓட்டம் போல், உருக்கிய நெய்யை ஊற்றுவது போல் தொடர்ச்சியாக சிந்திக்கவேண்டும்).

🌼 இகபர சௌபாக்யம் அருள்வாயே

மேற்சொன்ன 3 வரிகளை தனித்தனியாகவும் பொருள் கொள்ளலாம் (மறவாதே, உழலாதே, இசை பயில்). அல்லது, மூன்றையும் இணைத்தும் பொருள் கொள்ளலாம் (மறவாமல், உழலாமல், இசை போல் பயின்றால்). இப்படி பொருள் கொண்டால், இவற்றால் கிடைக்கும் பலன்களை 4வது வரியில் வெளியிடுகிறார் அருணகிரியார் - இக & பர சௌபாக்யம். சௌபாக்யம் எனில் நற்பேறு. பர வாழ்க்கையில் நற்பேறு எனில்... பர வாழ்க்கையே நற்பேறு தான்! இறையோடு இரண்டற கலத்தலே அந்த நற்பேறு. இக வாழ்க்கையில் நற்பேறு எனில் பெயர், புகழ், பொருள், வசதிகள் போன்றவை இல்லை. பர வாழ்க்கையைப் பெற்றுத் தரக்கூடிய ஞானம், கல்வி, தானம் மற்றும் தவம் என்று ஒளவைப்பாட்டி "அரிது அரிது மானிடர் ஆதல் அரிது" பாடலில் பட்டியலிட்டவையாகும் (#1).

இந்த இகபர நற்பேறுகளை வழங்குவதற்கு ஒருவர் / ஒன்று இருந்ததாகவேண்டும் (வினைகள் தாமே பலன் தரா என்றும், பலன்களை வழங்குபவர் இறைவன் என்றும் பகவான் ஸ்ரீரமணர் தமது உபதேச உந்தியாரில் பதிவிட்டிருக்கிறார் ("கன்மம் பயன் தரல் கர்த்தனது ஆணையால்...")). அவரைப் / அதைப் பற்றி அடுத்த 4 வரிகளில் பாடுகிறார்.

🌼 பசுபதி சிவாக்யம் உணர்வோனே

சீவன் (பசு) சிவனுள் (பதி) ஐக்கியமாகும் சிவ-ஐக்கியத்தை உணர்ந்தவனே. சிவனுள் ஐக்கியம், சிவனுள் ஒடுக்கம், சிவனுடன் இணைதல், சிவமாதல், கைலாயம் செல்லுதல், சிவனருள் பெறுதல் என்று எல்லாம் ஒன்றையேக் குறிக்கும். இப்படி விதவிதமாக உணர்ந்து கொண்டதால் தான் இன்று உலகில் இத்தனை மதங்கள். 🙁 பகவானிடம் கேட்டால், "முதலில் நீ யார் என்பதை கண்டுபிடி" என்பார். 😀

பிரம்மத்தை உணர்ந்தவர் பிரம்மமாகவே ஆவது போல், சிவ ஐக்கியத்தை உணர்ந்தவர் சிவமாகவே ஆகிறார். எனவே, இவ்வரியோடு 4ஆம் வரியையும் இணைத்து, "இகபர நற்பேற்றை வழங்கும் சிவபெருமானே" என்று பொருள் கொள்ளலாம். இந்த பெருமானார் குடி கொண்டுள்ள திருத்தலத்தை அடுத்த வரியில் வெளியிடுகிறார்.

🌼 பழநிமலை வீற்றருளும் வேலா

#பழநி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவர் #போகர் சித்தராவார். 🌸🙏 ஆனால், அருணகிரியார் மலையை சேர்த்துக் குறிப்பிடுகிறார். போகரின் சமாதி தலம் மலையடிவாரத்தில் உள்ள #திருஆவினன்குடி ஆகும். மலை மேல் சமாதியானாவர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அப்பெருமானார் புகழ் பெற்றவராகவும், அவரின் சமாதி தலம் ஆற்றல் மிகுந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதை இன்று வரை அத்தலம் ஈர்த்த & உருவாக்கிய அருளாளர்களைக் கொண்டும், நம்பிக்கையுடன் வந்து வணங்கிச் செல்லும் இலட்சக்கணக்கான அன்பர்களைக் கொண்டும் முடிவு செய்து கொள்ளலாம்.

🌼 அசுரர்கிளை வாட்டி மிகவாழ
      அமரர் சிறை மீட்ட பெருமாளே

இவ்வரிகளுக்குள் நுழையும் முன்னர் சமாதி நிலையை பார்ப்போம். இந்நிலையை நமது முன்னோர்கள் #சிவலிங்கம், #ஆடல்வல்லான், #கந்தவேல் (#2), #அரங்கநாதர், #முருகர் மற்றும் இவற்றின் மாறுபட்ட வடிவங்கள் வாயிலாக பதிவிட்டிருக்கிறார்கள். இவற்றுள் சிவலிங்கமும் கந்தவேலும் மிகப் பழமையானவை. இங்கே அருணகிரியார் எடுத்துக் கொண்டிருப்பது திருவரங்கநாதர் (இதிலும் பல வடிவங்கள் உண்டு. நாம் பார்க்கப்போவது பெருமான், லட்சுமி அம்மன் மற்றும் தொப்புளிலிருந்து கிளம்பிய தாமரையில் பிரம்மா இருக்கும் வடிவம்).

🌷சமாதி நிலையில் நாம் நாமாக இருப்போம் (நான் இன்னார் என்பதிலுள்ள இன்னார் நீங்கி, நான் மட்டும்) - பெருமான் தொழிலின்றி படுத்திருப்பது.
🌷உடன் அறிவு மட்டுமிருக்கும் - அம்மன் அமைதியாக, பணி புரிய தயாராக அமர்ந்திருப்பது.
🌷நம்மிடமிருந்து காட்சிகளைத் தோற்றுவித்து நம்மை சமாதி நிலையிலிருந்து வெளிக்கொணர முயலும் ஆற்றலே மாயை எனப்படும். உலக இயக்கத்தின் ஆரம்பம் இது தான் என்பதால் இதை தொப்புளிலிருந்து கிளம்பும் தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மாவாக சித்தரித்துள்ளனர். காளியன்னையின் பேயாட்டம் என்பதும் இதுவே. அருணகிரியார் குறிப்பிடும் அசுரர் கிளையும் இதுவே. (#3)

(இந்த உலகம் நம்முள்ளிருந்து தான் வெளிப்படுகிறது என்ற பேருண்மையை முதன் முதலில் உணர்ந்து வெளிப்படுத்தியது திருவானைக்கா திருத்தலத்தின் மூலவருக்கு கீழ் சமாதியாகியிருக்கும் பெருமான் 🌸🙏 என்பது என் கருத்து.)

இனி, எதிர்புறத்திலிருந்து - உலகிலிருந்து - வருவோம்.

"எதை நோக்கி நம் கவன ஆற்றல் செல்கிறதோ அது வலுப்படும்", என்கிறார் திரு #சாதுஓம் #சுவாமிகள். 🌸🙏 எண்ணிலடங்கா பிறவிகள் தோறும் நம் கவன ஆற்றலை வெளிப்புறமாகவே செலுத்தி வந்திருக்கிறோம். இதனால் நம் அசுரர் கிளையானது (#மாயை) நன்கு உரமேறி பரந்து விரிந்து பருத்துப் பெருகியுள்ளது. இக்கிளை வாடவேண்டுமெனில் (#4) இதன் உணவாகிய நம் கவன ஆற்றலை இதற்கு எதிர்புறமாக - நம் மீது (நான் என்னும் தன்மையுணர்வின் மீது) - திருப்பவேண்டும். இதனால் கிளையும் வாடும்; மனதின் தங்குதிறனும் அதிகரிக்கும். ஒரு சமயத்தில் கிளை நன்கு வாடி ஒதுங்க, இவ்வளவு காலம் அது மறைத்திருந்த "நாம் நாமே" என்ற பேருண்மை (சிவ தத்துவம்) வெளிப்படும். இந்த பேருண்மையே #இறைவன், #தேவன், #அமரர் என்று பலவாறு போற்றிப் புகழப்படுகிறது. எதனால் இப்பேருண்மை வெளிப்பட்டதோ அதற்கு (இறையருளால் தோன்றும் அறிவுக்கு) கந்தவேல் என்று பெயர். இப்படி வெளிப்படுத்துவதற்கே #சிறைமீட்டல் என்று பெயர். நாம் நாமே என்ற சிவதத்துவம வெளிப்பட்ட பிறகே நாம் யார் என்று உணர்வோம்; நாம் என்றுமே நாமாகவே (சிவமாகவே) இருந்திருக்கிறோம் என்ற உண்மையையும் உணர்வோம். இதனால் தான் கந்தவேலுக்கு #தகப்பன் #சுவாமி மற்றும் #சுவாமிநாதன் (உடையவருக்கே தலைவன் / உடையவரையே காப்பவன்) என்று பெயர்கள்.

வேதம் வேண்டாம் சகலவித்தை வேண்டாம்
கீதநாதம் வேண்டாம் ஞானநூல் வேண்டாம்
ஆதிகுருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்
திருப்புகழைக் கேளீர் தினம்

கந்தனுக்கு அரோகரா... 🌹🙏
முருகனுக்கு அரோகரா... 🌺🙏
வள்ளி மணாளனுக்கு அரோகரா... 🏵🙏

யானற்று இயல்வது தேரின் எது அது
தான் தவமென்றான் உந்தீபற
தானாம் #ரமணேசன் உந்தீபற

🌸🙏🌸🙏🌸

குறிப்புகள்:

1. அரியது கேட்கின் வரிவடி வேலோய் 
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது; 
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு 
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. 
பேடு நீங்கிப் பிறந்த காலையும் 
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது; 
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் 
தானமும் தவமும் தான்செயல் அரிது 
தானமும் தவமும் தான்செய்வராயின் 
வானவர் நாடு வழி திறந்திடுமே

2. இன்றும் சில முருகத்தலங்களில் வேலாயுதம் மூலவராக உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் கூட சமீபகாலம் வரை வேலாயுதம் தான் மூலவராக இருந்திருக்கிறது.

3. இவ்விளக்கத்திற்கும் வைணவத்திற்கும் சிறிதும் சம்பந்தமேயில்லை. வைணவத்தை வைத்து விளக்க வேண்டுமானால், அது "காதுல பூ" வேலையாகத் தானிருக்கும். 😁

4. எதற்காக அசுர கிளையை வாட்டவேண்டும்? எதற்காக பேருண்மை வெளிப்படவேண்டும்? "மிக வாழ" என்று பதில் கூறுகிறார். எனில், மரணமில்லா பெருவாழ்வு. பர வாழ்வு. நிலைபேறு.