Tuesday, January 29, 2019

பழநி திருப்புகழ் 🌸🙏

சில நாட்களுக்கு முன் #சென்னை #பெசண்ட்நகர் #அறுபடை #முருகன் கோயிலுக்குச் சென்றிருந்த போது, அங்கிருக்கும் #பழநியாண்டவர் திருக்கோயிலில் செதுக்கப்பட்டிருந்த பின் வரும் #திருப்புகழ் பாடல் என் கருத்தை கவர்ந்தது. அதிலும், இறுதி 2 அடிகள் என்னை சில நாட்களாகவே சிந்திக்க வைத்தது! இதோ அந்த பாடல்...

[image_0]

வசன மிக ஏற்றி மறவாதே
மனது துயர் ஆற்றில் உழலாதே
இசை பயில் சடாட்சரம் அதாலே
இகபர சௌபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழநிமலை வீற்றருளும் வேலா
அசுரர்கிளை வாட்டி மிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே 🌸🙏

(நான் திருப்புகழிலோ தமிழிலோ புலமை பெற்றவனல்ல. இந்தப் பாடலைக் கண்டதும் என் உள்ளுணர்வில் எழுந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த இடுகையை எழுதியுள்ளேன். 🙏)

🌼 வசன மிக ஏற்றி மறவாதே

"அளவுக்கு மீறி நூல்களை படிப்பதால் ஒரு பயனும் இல்லை. நான் என்பது உடலுக்குள் இருப்பது. புத்தகத்தில் அல்ல." என்பது பகவான் ஸ்ரீரமணரின் 🌸🙏 வாக்கு. அதாவது, நமக்குள் தேட வேண்டிய ஒன்றை நூல்களுக்குள்ளாகவே தேடிக் கொண்டிருந்தால் ஒரு பயனுமில்லை என்கிறார் பகவான். உள்ளங்கை நெல்லிக்கனி போலுள்ள இறையுணர்வை விளக்குகிறேன் பேர்வழி என்று வண்டி வண்டியாய் எழுதித் தள்ளியிருப்பார்கள். அல்லது, மணிக்கணக்கில் பேசி நுங்கம்பாக்கம் போக வேண்டிய விவேக் திருப்பதி போய் சேர்ந்தது போல் நம்மை எங்காவது கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்! 😁

🌼 மனது துயர் ஆற்றில் உழலாதே

மனமென்பது துயரமான ஆறு மட்டுமல்ல. வற்றாததும் கூட. இதனுடைய
மூலத்தை தேடினாலன்றி இதிலிருந்து கரையேற முடியாது. எண்ணங்களின் குவியலே மனம் என்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர். "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணமே அனைத்திற்கும் மூல காரணம். இந்த "நான் என்பது என்ன?" அல்லது இந்த "நான் என்பது எங்கிருந்து தோன்றுகிறது?" என்று ஆராய்ந்தால் மட்டுமே இது அடங்கும். இந்த கருத்தை திருத்தல வரலாறுகளிலும், புராணக் கதைகளிலும் மற்றும் சிலை வடிவங்களிலும் வெகு அழகாக பதிவு செய்து வைத்திக்கிறார்கள் நம் முன்னோர்கள். இப்படிப்பட்ட ஒரு சிலை தான் கோவையருகில் உள்ள திரு #அவிநாசியப்பர் 🌸🙏 திருத்தலத்தில் உள்ளது.

[image_1]

கூத்தப்பெருமானுக்கும் காளியம்மைக்கும் நடந்த போட்டி நடனம் பற்றி படித்திருப்போம். எந்த வித நடனத்தினாலும் அம்மையை வெல்ல முடியாமல் போகவே, இறுதியாக, பெருமான் தனது காலை உயர்த்தி தனது காதணி ஒன்றை கழற்றிக் காட்டுவார். அம்மையால் இதைச் செய்ய முடியாமல் போகவே, தோல்வியை ஒப்புக்கொண்டு அமைதியாகிவிடுவார். இக்கதையில் வரும் காளியம்மை தான் மனம், மாயை எல்லாம். பெருமான் மெய்யறிவு பெற முயலும் சீவன். பல வித நடனங்கள் என்பது பக்தி, யோகம், ஜெபம், தியானம் போன்ற பல வித தவ முயற்சிகள். தனது காலை உயர்த்தி தனது காதணியை கழட்டுவது என்பது வெளிமுகமாகவே சென்று கொண்டிருந்த கவன ஆற்றலை தன் மீதே திருப்பி தனது மூலத்தில் ஒடுங்குதல் - "நான் இன்னார்" என்பதிலுள்ள இன்னாரை இழத்தல் (கழட்டுதல்) - "நான் நானே" என்ற தனது உண்மையை உணர்தல். உண்மையை உணர்ந்த சீவன் சிவமாகிறது. இத்தோடு மாயையின் மாயாஜாலங்கள் உண்மைத் தன்மையை இழந்து கானல்நீர் காட்சிகள் போன்றாகி விடுகிறது.

எப்பேர்பட்ட பேருண்மையை எவ்வளவு அழகாக உவமையாக்கி, எவ்வளவு அருமையாக சிலையாக செதுக்கியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்!! 😍🙏 (ஐயன் செதுக்கப்பட்டிருக்கும் தூணுக்கு எதிர் தூணில் அம்மையையும் அழகுடன் செதுக்கியிருந்தார்கள். படம் பிடிப்பதற்குள் பூசாரி வந்து தடுத்துவிட்டார். படம் பிடித்தால் இறையாற்றல் போய்விடுமாம்! 😀 தூணில் தான் இறையாற்றல் இருக்கும் போலிருக்கிறது. 😁 மேலும், இறையாற்றலை விட எனது படக்கருவி ஆற்றல் மிகுந்தது போலிருக்கிறது!! 😂)

🌼 இசை பயில் சடாட்சரம் அதாலே

சடாட்சரம் எனில் #ஆறெழுத்து - #சரவணபவ. எனில், நாணல்காட்டில் பிறந்தவர் (பிறந்தது). நாணல்காடு என்றால் எது? அதில் பிறப்பது எது? துன்பங்கள் நிறைந்த உலகமும், அதற்கு உதவிடும் மனமும் தான் நாணல்காடு. இத்துன்ப உலகில் சொல்லொண்ணா அல்லல்பட்டு, சரியான பக்குவம் அடைந்த பின் தெளிந்த, திரண்ட, கூர்மையான ஒரு அறிவு பிறக்கும். அனைத்திற்கும் காரணமான "நான் இன்னார்" என்ற பொய்யறிவை துளைத்து பிளக்கும். இந்த அறிவு தான் நாணல்காட்டில் பிறந்த கந்தவேல்!! 🌸🙏

இந்த கந்தவேலைப் பற்றிய சிந்தனை, பின்னணி இசை போன்று தொடர்ச்சியாக இடைவெளி இல்லாமல் செய்யவேண்டும். #அருணகிரிநாதர் 🌸🙏 "இசை பயில்" என்று 2 சொற்களில் வெளியிட்ட உத்தியை, பகவான் ஸ்ரீரமணர் "விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சி போல் விட்டிடாது உன்னலே" என்று 8 சொற்களாக விரித்து அருளியிருக்கிறார் (உலகின் பொய்த்தன்மையை, தன்மையின் உண்மைத்தன்மையை பற்றி அவ்வப்போது சிந்திக்காமல், ஆற்றின் ஓட்டம் போல், உருக்கிய நெய்யை ஊற்றுவது போல் தொடர்ச்சியாக சிந்திக்கவேண்டும்).

🌼 இகபர சௌபாக்யம் அருள்வாயே

மேற்சொன்ன 3 வரிகளை தனித்தனியாகவும் பொருள் கொள்ளலாம் (மறவாதே, உழலாதே, இசை பயில்). அல்லது, மூன்றையும் இணைத்தும் பொருள் கொள்ளலாம் (மறவாமல், உழலாமல், இசை போல் பயின்றால்). இப்படி பொருள் கொண்டால், இவற்றால் கிடைக்கும் பலன்களை 4வது வரியில் வெளியிடுகிறார் அருணகிரியார் - இக & பர சௌபாக்யம். சௌபாக்யம் எனில் நற்பேறு. பர வாழ்க்கையில் நற்பேறு எனில்... பர வாழ்க்கையே நற்பேறு தான்! இறையோடு இரண்டற கலத்தலே அந்த நற்பேறு. இக வாழ்க்கையில் நற்பேறு எனில் பெயர், புகழ், பொருள், வசதிகள் போன்றவை இல்லை. பர வாழ்க்கையைப் பெற்றுத் தரக்கூடிய ஞானம், கல்வி, தானம் மற்றும் தவம் என்று ஒளவைப்பாட்டி "அரிது அரிது மானிடர் ஆதல் அரிது" பாடலில் பட்டியலிட்டவையாகும் (#1).

இந்த இகபர நற்பேறுகளை வழங்குவதற்கு ஒருவர் / ஒன்று இருந்ததாகவேண்டும் (வினைகள் தாமே பலன் தரா என்றும், பலன்களை வழங்குபவர் இறைவன் என்றும் பகவான் ஸ்ரீரமணர் தமது உபதேச உந்தியாரில் பதிவிட்டிருக்கிறார் ("கன்மம் பயன் தரல் கர்த்தனது ஆணையால்...")). அவரைப் / அதைப் பற்றி அடுத்த 4 வரிகளில் பாடுகிறார்.

🌼 பசுபதி சிவாக்யம் உணர்வோனே

சீவன் (பசு) சிவனுள் (பதி) ஐக்கியமாகும் சிவ-ஐக்கியத்தை உணர்ந்தவனே. சிவனுள் ஐக்கியம், சிவனுள் ஒடுக்கம், சிவனுடன் இணைதல், சிவமாதல், கைலாயம் செல்லுதல், சிவனருள் பெறுதல் என்று எல்லாம் ஒன்றையேக் குறிக்கும். இப்படி விதவிதமாக உணர்ந்து கொண்டதால் தான் இன்று உலகில் இத்தனை மதங்கள். 🙁 பகவானிடம் கேட்டால், "முதலில் நீ யார் என்பதை கண்டுபிடி" என்பார். 😀

பிரம்மத்தை உணர்ந்தவர் பிரம்மமாகவே ஆவது போல், சிவ ஐக்கியத்தை உணர்ந்தவர் சிவமாகவே ஆகிறார். எனவே, இவ்வரியோடு 4ஆம் வரியையும் இணைத்து, "இகபர நற்பேற்றை வழங்கும் சிவபெருமானே" என்று பொருள் கொள்ளலாம். இந்த பெருமானார் குடி கொண்டுள்ள திருத்தலத்தை அடுத்த வரியில் வெளியிடுகிறார்.

🌼 பழநிமலை வீற்றருளும் வேலா

#பழநி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவர் #போகர் சித்தராவார். 🌸🙏 ஆனால், அருணகிரியார் மலையை சேர்த்துக் குறிப்பிடுகிறார். போகரின் சமாதி தலம் மலையடிவாரத்தில் உள்ள #திருஆவினன்குடி ஆகும். மலை மேல் சமாதியானாவர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அப்பெருமானார் புகழ் பெற்றவராகவும், அவரின் சமாதி தலம் ஆற்றல் மிகுந்ததாகவும் இருக்கவேண்டும் என்பதை இன்று வரை அத்தலம் ஈர்த்த & உருவாக்கிய அருளாளர்களைக் கொண்டும், நம்பிக்கையுடன் வந்து வணங்கிச் செல்லும் இலட்சக்கணக்கான அன்பர்களைக் கொண்டும் முடிவு செய்து கொள்ளலாம்.

🌼 அசுரர்கிளை வாட்டி மிகவாழ
      அமரர் சிறை மீட்ட பெருமாளே

இவ்வரிகளுக்குள் நுழையும் முன்னர் சமாதி நிலையை பார்ப்போம். இந்நிலையை நமது முன்னோர்கள் #சிவலிங்கம், #ஆடல்வல்லான், #கந்தவேல் (#2), #அரங்கநாதர், #முருகர் மற்றும் இவற்றின் மாறுபட்ட வடிவங்கள் வாயிலாக பதிவிட்டிருக்கிறார்கள். இவற்றுள் சிவலிங்கமும் கந்தவேலும் மிகப் பழமையானவை. இங்கே அருணகிரியார் எடுத்துக் கொண்டிருப்பது திருவரங்கநாதர் (இதிலும் பல வடிவங்கள் உண்டு. நாம் பார்க்கப்போவது பெருமான், லட்சுமி அம்மன் மற்றும் தொப்புளிலிருந்து கிளம்பிய தாமரையில் பிரம்மா இருக்கும் வடிவம்).

🌷சமாதி நிலையில் நாம் நாமாக இருப்போம் (நான் இன்னார் என்பதிலுள்ள இன்னார் நீங்கி, நான் மட்டும்) - பெருமான் தொழிலின்றி படுத்திருப்பது.
🌷உடன் அறிவு மட்டுமிருக்கும் - அம்மன் அமைதியாக, பணி புரிய தயாராக அமர்ந்திருப்பது.
🌷நம்மிடமிருந்து காட்சிகளைத் தோற்றுவித்து நம்மை சமாதி நிலையிலிருந்து வெளிக்கொணர முயலும் ஆற்றலே மாயை எனப்படும். உலக இயக்கத்தின் ஆரம்பம் இது தான் என்பதால் இதை தொப்புளிலிருந்து கிளம்பும் தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மாவாக சித்தரித்துள்ளனர். காளியன்னையின் பேயாட்டம் என்பதும் இதுவே. அருணகிரியார் குறிப்பிடும் அசுரர் கிளையும் இதுவே. (#3)

(இந்த உலகம் நம்முள்ளிருந்து தான் வெளிப்படுகிறது என்ற பேருண்மையை முதன் முதலில் உணர்ந்து வெளிப்படுத்தியது திருவானைக்கா திருத்தலத்தின் மூலவருக்கு கீழ் சமாதியாகியிருக்கும் பெருமான் 🌸🙏 என்பது என் கருத்து.)

இனி, எதிர்புறத்திலிருந்து - உலகிலிருந்து - வருவோம்.

"எதை நோக்கி நம் கவன ஆற்றல் செல்கிறதோ அது வலுப்படும்", என்கிறார் திரு #சாதுஓம் #சுவாமிகள். 🌸🙏 எண்ணிலடங்கா பிறவிகள் தோறும் நம் கவன ஆற்றலை வெளிப்புறமாகவே செலுத்தி வந்திருக்கிறோம். இதனால் நம் அசுரர் கிளையானது (#மாயை) நன்கு உரமேறி பரந்து விரிந்து பருத்துப் பெருகியுள்ளது. இக்கிளை வாடவேண்டுமெனில் (#4) இதன் உணவாகிய நம் கவன ஆற்றலை இதற்கு எதிர்புறமாக - நம் மீது (நான் என்னும் தன்மையுணர்வின் மீது) - திருப்பவேண்டும். இதனால் கிளையும் வாடும்; மனதின் தங்குதிறனும் அதிகரிக்கும். ஒரு சமயத்தில் கிளை நன்கு வாடி ஒதுங்க, இவ்வளவு காலம் அது மறைத்திருந்த "நாம் நாமே" என்ற பேருண்மை (சிவ தத்துவம்) வெளிப்படும். இந்த பேருண்மையே #இறைவன், #தேவன், #அமரர் என்று பலவாறு போற்றிப் புகழப்படுகிறது. எதனால் இப்பேருண்மை வெளிப்பட்டதோ அதற்கு (இறையருளால் தோன்றும் அறிவுக்கு) கந்தவேல் என்று பெயர். இப்படி வெளிப்படுத்துவதற்கே #சிறைமீட்டல் என்று பெயர். நாம் நாமே என்ற சிவதத்துவம வெளிப்பட்ட பிறகே நாம் யார் என்று உணர்வோம்; நாம் என்றுமே நாமாகவே (சிவமாகவே) இருந்திருக்கிறோம் என்ற உண்மையையும் உணர்வோம். இதனால் தான் கந்தவேலுக்கு #தகப்பன் #சுவாமி மற்றும் #சுவாமிநாதன் (உடையவருக்கே தலைவன் / உடையவரையே காப்பவன்) என்று பெயர்கள்.

வேதம் வேண்டாம் சகலவித்தை வேண்டாம்
கீதநாதம் வேண்டாம் ஞானநூல் வேண்டாம்
ஆதிகுருப்புகழை மேவுகின்ற கொற்றவன் தாள் போற்றுந்
திருப்புகழைக் கேளீர் தினம்

கந்தனுக்கு அரோகரா... 🌹🙏
முருகனுக்கு அரோகரா... 🌺🙏
வள்ளி மணாளனுக்கு அரோகரா... 🏵🙏

யானற்று இயல்வது தேரின் எது அது
தான் தவமென்றான் உந்தீபற
தானாம் #ரமணேசன் உந்தீபற

🌸🙏🌸🙏🌸

குறிப்புகள்:

1. அரியது கேட்கின் வரிவடி வேலோய் 
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது; 
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு 
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. 
பேடு நீங்கிப் பிறந்த காலையும் 
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது; 
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் 
தானமும் தவமும் தான்செயல் அரிது 
தானமும் தவமும் தான்செய்வராயின் 
வானவர் நாடு வழி திறந்திடுமே

2. இன்றும் சில முருகத்தலங்களில் வேலாயுதம் மூலவராக உள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் கூட சமீபகாலம் வரை வேலாயுதம் தான் மூலவராக இருந்திருக்கிறது.

3. இவ்விளக்கத்திற்கும் வைணவத்திற்கும் சிறிதும் சம்பந்தமேயில்லை. வைணவத்தை வைத்து விளக்க வேண்டுமானால், அது "காதுல பூ" வேலையாகத் தானிருக்கும். 😁

4. எதற்காக அசுர கிளையை வாட்டவேண்டும்? எதற்காக பேருண்மை வெளிப்படவேண்டும்? "மிக வாழ" என்று பதில் கூறுகிறார். எனில், மரணமில்லா பெருவாழ்வு. பர வாழ்வு. நிலைபேறு.

No comments:

Post a Comment