Friday, December 22, 2023

வைகுண்ட ஏகாதசி



🌷 வைகுண்ட ஏகாதசி - திரு நம்மாழ்வாரின் திருநாள்

🌷 பரமபத வாயில் வழியாக நம்பெருமாள் வெளிவருவது - அவரதுடல் இறக்கும் தருவாயில் மண்டையோடு பிளந்தது. இதை, "மண்டையோடு பிளந்து, அவர் வெளியேறினார்" என்று மாற்றிச் சொல்கிறார்கள். இது தவறாகும். மெய்யறிவு பெற்று, நிலைபேற்றினை அடைந்த அவர், எங்ஙனம் வெளியேறுவார்? எங்கு போவார்? போக்கும் வரவும் அவருக்கில்லை.

🌷 பரமபத வாயில் வழியாக வெளிவரும் நம்பெருமாள் - நம்மாழ்வாரை குறிக்கும். பெருமாளை குறிக்காது. பெருமாள் என்பது மனம், உடல் & வையகம் ஆகிய அசையும் பொருட்களாகும். நம்மாழ்வார் அசையாப் பொருளாவார்.

🌷 பரமபத வாயில் வழியாக வெளிவருவது விடுதலையை (அசுரத்தில், மோட்சம்) கொடுக்கும் - நம்மாழ்வார் அறிவுருத்திய வழியை கடைபிடித்தால், நாமும் நிலைபேற்றினை அடையலாம்.

🌷 பரமபத விளையாட்டு - நமது அன்றாட வாழ்வு.

🌷 விளையாட்டை விளையாடுவது பெருமாளும் & தாயாரும் - வாழ்வென்பது மனமும் & அறிவும் ஆடும் விளையாட்டு.

🌷 இரவு முழுக்க விளையாடவேண்டும் - "காண்பவை யாவும் உண்மை" எனும் அறியாமை (இருள் / இரவு) இருக்கும் வரை, வாழ்க்கை எனும் விளையாட்டை ஆடியாகவேண்டும்.

🌷 நோன்பிருத்தல் (அசுரத்தில், விரதமிருத்தல்) - உண்ணாதிருத்தல். மனதில் தோன்றும் எண்ணங்களையும், காணும் காட்சிகளையும் சட்டை செய்யாதிருத்தல்.

🌷 நோன்பினிடையே தேவைப்பட்டால் துளசி நீர் குடித்தல் - மேற்சொன்னவாறு எண்ணங்களையும் காட்சிகளையும் சட்டை செய்யாதிருக்கும்போது, சில சமயம், "நாம் செய்வது சரியா?" என்ற ஐயம் தோன்றும். அச்சமயம், பகவான் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரைகளை (துளசி நீர்) சிந்தித்து, தன்னிலையிழக்காமல் இருக்கவேண்டும்.

oOo

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- திரு நம்மாழ்வார்

இப்பாடல் முழுவதிலும் இரண்டன்மை (அசுரத்தில், அத்வைதம்) வெளிபடுகிறது. இது பற்றிய பகவான் திரு இரமண மாமுனிவரின் கருத்தை பின்வரும் திரைநகலில் காணலாம்:


oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment