Monday, December 20, 2021

கோளறு பதிகம் - பாடல் #4 - கொதியுறு காலன் - சிறு விளக்கம்


மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

-- கோளறு பதிகம் - பாடல் #4

(ஓவியம்: திரு பத்மவாசன். தினமலர், சென்னை. 19/12/2021)

oOo

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்

மேலுள்ள பாடலில் இடம்பெறும் இந்த வரிகளை படிக்கும் போதே ஒரு நெருடல் தோன்றியது: ஒரே வரியில் ஏன் காலன் & நமன் என்று இருமுறை கூற்றுவரை (யமன்) குறிப்பிடுகிறார்?

தொன்ம வழியில் இச்சொற்றொடரின் பொருள்: கோபம் கொண்ட காலன், அக்கினி, யமன், யமதூதர் மற்றும் கொடு நோய்கள் பலவும்.

சொற்களைப் பிரித்து, வேறு பொருள்களை பொருத்திப் பார்ப்போம்:

🔸 கொதி - கோபம்

🔸 உறு - வலி / வருத்தம். "கண் உறுத்துகிறது" / "மனம் உறுத்துகிறது".

🔸 காலன் - சோம்பல். எருமை மாடு காலனின் ஊர்தியாகும். எருமை சோம்பலின் அடையாளம். சோம்பலினால் தன்மையுணர்விலிருந்து சற்றே விலகினாலும் மீண்டும் பிறவி சுழற்சிக்குள் சென்றுவிடுவோம். அதாவது, இறந்துவிடுவோம். மெய்யறிவில் நிலைபெறுவது - பிறப்பு. அதிலிருந்து விலகுவது - இறப்பு. விலகுவதற்கு ஏதுவாகும் சோம்பல் காலனாகிறது.

🔸 அங்கி - பசி

🔸 நமன் - அச்சம். மேலே "காலன்" என்ற சொல்லிற்கு கண்ட அதே விளக்கம்தான் இங்கும். தன்னிலையிலிருந்து விலகச் செய்யும் யாவும் கூற்றுவர்களே. எனிலும், நமது முன்னோர்கள் அச்சம் (கரிய உருவம்), சோம்பல் (எருமை), பற்றுகள் (சாட்டை) ஆகியவற்றை கூற்றுவர் பற்றுவதற்கான முகமை ஏதுக்களாக கருதியுள்ளனர்.

🔸 தூதர் ... - மேற்கண்டவற்றின் தூதர்களாக வரும் கொடு நோய்கள்

இனி, அனைத்தையும் இணைத்துப் பார்ப்போம்.

கோபம், வருத்தம், சோம்பல், பசி, அச்சம் மற்றும் இவற்றை விளைவிக்கும் கொடிய உடல் & மன நோய்கள் வந்தாலும், இவற்றால் பெருமானின் அடியார்களுக்கு கேடு விளையாது. ஏனெனில், அவர்களது உள்ளத்தில் ஏற்கனவே பெருமான் குடிகொண்டுள்ளார்! (அதாவது, ஏற்கனவே அவர்கள் நிலைபேற்றினை அடைந்தவர்கள்.)

(காெதி + உறு - கொதியுறு - கொதித்து இருத்தல் என்றும் கொள்ளலாம்)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment