Friday, May 26, 2017

மாறுவேடத்திலிருந்த ஸ்ரீ ராமரை கண்டுபிடித்த ஸ்ரீசீதை -- பின்னணியில் உள்ள பேருண்மையை விளக்குகிறார் பகவான் ஸ்ரீரமணர்...

ஸ்ரீராமகிருஷ்ண மடத்திலிருந்து வந்திருந்த லக்ஷ்மண பிரஹ்மசாரி “*நான் யாரென்னும் விசாரணையும் மனத்தின் ஓர் எழுச்சிதானே; அதனால் மனோநாசம் எப்படிக் கைகூடும்?*” என்று வினவினார்.

#பகவான் #ஶ்ரீரமணர்: ஸீதையின் நிகரற்ற கற்புச் சிறப்பை ரிஷிபத்னிகள் சோதித்துப் பார்த்ததாக ஒரு கதை சொல்லப்படும். ரிஷிகள் பலரிடையே ஸ்ரீராமனும் தன் வடிவை மறைத்து ஒரு ரிஷி வேஷத்தோடு நிற்க, ரிஷிபத்னிகள், அவர்களுக்குள் தன் பதி யாரென்று கண்டு பிடிக்கும்படி ஸீதையைக் கேட்டுக்கொண்டனர்.

ஸீதை ரிஷிகள் ஒவ்வொருவராகப் பார்த்துப் பார்த்து ‘இல்லை இல்லை’ என்று சொல்லிக்கொண்டே வந்து ரிஷி வேஷத்தில் நின்ற தன் பதியைக் கண்டதும் மௌனமாய்த் தலை குனிந்து நின்றாள். ஸீதையின் மௌனம் உண்மையைச் சிறப்புற உரைத்தது.

அவ்வாறே  வேதங்கள், தத்துவங்களை ஆய்ந்தாய்ந்து “அல்ல, அல்ல” என்று (நேதி – ந, இதி) புறக்கணித்துக் கொண்டே சென்று, ஓரிடத்தில் மேலேயொன்றும் சொல்வதற்கின்றி மௌனமாய் நிற்கின்றன. அதுவே உண்மை நிலை. *மௌனத்தால் உண்மையை விளக்குவதன் தாற்பரியம் இதுவே!* விசாரணை விருத்தியால், பிறவிருத்திகள் யாவும் விலக்கப்பட்டு, விலக்குவதற்கு மேலேயொன்றுமில்லா நிலையில் அவ்விருத்தி தன் மூலமாம் ஸ்வரூபத்தி லொடுங்க, ஸ்வரூபமே மிஞ்சி நிற்கிறது. என்றுமுள்ள ஏக பரிபூரண அஹம் ஸ்வரூபம் அதுவே. பாவனாதீதமாம் பரம்பொருள் அதுவே. உரை கடந்ததோர்  அனுபவ  ஸ்வரூபம்.

- #ஸ்ரீபகவத் #வசனாம்ருதம் நூலிலிருந்து

🌸🙏

(மூலம்: ஸ்ரீரமணாச்ரம முகநூல் பக்கம்)

No comments:

Post a Comment