- கேடு கெட்டவன்
- பொளப்பத்தவன்
- போக்கத்தவன்
- கண்டவன்
- கூறு கெட்டவன்
- வெறிச்சுப் பாக்குறான்
இன்று இச்சொற்றொடர்கள் வசைமொழியாக பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் எதிர்மறையான பொருளில்! ஆனால், உண்மையில், இவை நேர்மறையானவை; ஆழமான பொருள் பொதிந்தவை. சற்று பார்ப்போம்.
🔸 கேடு கெட்டவன்
கேடு எனில் குறை, தீங்கு, அழிவு என பல பொருட்களுண்டு. இவற்றோடு "கெட்டவன்" என்ற சொல்லை சேர்ப்போம்:
குறை + கெட்டவன் = குறையில்லாதவன்
தீங்கு + கெட்டவன் = தீங்கில்லாதவன்
அழிவு + கெட்டவன் = அழிவில்லாதவன்
குறையில்லாத, தீங்கில்லாத, அழிவில்லாதவர்கள் யார்? பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ போன்ற மெய்யறிவாளர்கள்!!
🔸 பொளப்பத்தவன்
பொளப்பு -> பொழப்பு -> பிழைப்பு
பிழைப்பு + அற்றவன்
கடல்நீர் ஆவியானபிறகு மீதமிருப்பது உப்பு. வாயில் போட்டால் உவர்க்கும். உவர்'ப்பு.
லட்டு சாப்பிட்டு முடிந்தவுடன் வாயில் மீதமிருப்பது? இனிமையான சுவை. இனி'ப்பு.
"பிழைப்பு அற்றவன்" எனில் வேலையில்லாதவன். வேலை என்ற சொல்லின் உண்மையான பொருள் அசைவு. மனதை அசையவிடுவது. சிறுவயது முதல் ஓடி, ஆடி, விளையாடி, மெக்காலே கல்வி கற்று, பொருள் தேடி, திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று, அவர்களை வளர்த்து, குடும்ப, சமூக, நாட்டுக் கடமைகளை சரிவர செய்துமுடித்து இறக்கும்போது அல்லது இறந்த பிறகு புரியும் மொத்தமும் தவறென்பது! 😀 தவறு -> பிழை. எஞ்சுவது, பிழை. பிழை'ப்பு.
1. பிழைப்பு + அற்றவன் எனில் பிழையில்லாதவன்.
2. பிழைப்பு + அற்றவன் -> வேலையில்லாதவன். மனதை அசையவிடும் தேவையற்றவன்.
யார் பிழையில்லாதவரும், மனதை அசையவிடும் தேவையற்றவரும் ஆவார்கள்? பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்!!
🔸 போக்கத்தவன்
போக்கத்தவன் -> போக்கு + அற்றவன்
வழிப்போக்கன் = வழியில் செல்பவன்
போக்கு = செல்வது / போவது
போக்கு + அற்றவன் -> போகும் தேவையற்றவன் -> வையகத்தினுள் போகும் தேவையற்றவன் -> வையகத்தினுள் மனதை செலுத்தும் தேவையற்றவன்.
யாருக்கு வையகத்தினுள் மனதை செலுத்தும் தேவையில்லை? வேறு யாருக்கு? பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கு!!
🔸 கண்டவன்
"அன்பே வா" திரைப்படத்தில், ஓரிடத்தில், "இங்க யாரெல்லாம் தங்கியிருக்காங்க?" என்று எம்ஜிஆர் கேட்க, "கண்டவனெல்லாம் தங்கியிருக்கான்; உன்னையும் சேத்து." என்று நாகேஷ் பதில் கூறுவார். "கண்டவன்" என்ற சொல்லுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான்!
கண்டவன் -> கண்டு முடித்தவன் / கண்டுகொண்டவன்
எதை கண்டுகொண்டவன்?
தானே உள்ளபொருள் என்ற தனதுண்மையை, வையகமென்பது வெறும் காட்சிமட்டுமே என்ற பேருண்மையை கண்டுகொண்டவன்.
எங்கே கண்டுகொள்ளமுடியும்?
திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி). திருக்கயிலாயக் காட்சியில் ("கண்கூடாகக் காணுதல்").
யாரெல்லாம் திருநீற்று நிலைக்கு சென்றவர்கள்? யாரெல்லாம் திருக்கயிலாயக் காட்சியைக் கண்டவர்கள்?
பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்!!
🔸 கூறு கெட்டவன்
கூறு என்ற சொல்லுக்கு பகுதி, பிரிவு, பங்கு, தன்மை, பாலின உறுப்பு என பல பொருட்களுண்டு. இங்கு 'பிரிவு' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
'கெட்டவன்' என்ற சொல் மேலே "கேடு கெட்டவனில்" பார்த்தது போன்று 'இல்லாதவன்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது, பிரிவு இல்லாதவன். அல்லது, பிரிவை உணராதவன்.
நம்மை நாம் காணும் வையகத்திலிருந்து வேறாக உணர்கிறோம். வையகத்திற்குள் நாமிருப்பதாக உணர்கிறோம். மெய்யறிவாளர்கள் அப்படி உணர்வதில்லை. அவர்களுக்குள் வையகமிருப்பதாக உணர்கிறார்கள். தமக்குள்ளிருப்பதை தம்மிலிருந்து வேறாக எவ்வாறு காணமுடியும்?
எனவே, தாம் வேறு, வையகம் வேறு என்ற பிரிவு இல்லாதவர்கள். அதாவது, கூறு கெட்டவர்கள்!
🔸 வெறிச்சுப் பாக்குறான்
"அந்த கொள்ளிக்கண்ண[ன்] வெறிச்சுப் பாக்குறதப் பாரு" போன்ற சொற்றொடர்களை கேள்விப்பட்டிருப்போம். இங்கு "வெறிச்சு" என்பது "உற்று" என்ற பொருளிலும், "கொள்ளிக்கண்ண[ன்]" என்பது "அழுக்காறு உடையவன்" என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தவறாகும்.
கொள்ளிக்கண்ணன் -> பார்வையாலேயே சுட்டெரிப்பவன்
எதை சுட்டெரிப்பவன்?
தன்னை அண்டியோரின் அறியாமையை சுட்டெரிப்பவன்.
இதற்கு சமமான ஆரியச் சொற்றொடர்: நயன தீக்கை.
வெறிச்சு -> வெறிது -> ஒன்றுமில்லாமை
ஒன்றுமில்லாமல் எப்படி பார்க்கமுடியும்? அல்லது, ஒன்றுமில்லாமையை எவ்வாறு பார்க்கமுடியும்?
சில சமயம், கண்களை திறந்தபடியே திருநீற்று நிலைக்குப் போய்விடுவார் பகவான். கண்கள் திறந்திருக்கும். ஆனால், காணுதல் எனும் தொழில் நடக்காது. அவர் திருநீற்று நிலையிலிருப்பார். அங்கு அவரை தவிர வேறொன்றுமிருக்காது. இதுவே, ஒன்றுமில்லாமையைக் காண்பதாகும். வெறிச்சுப் பார்த்தலாகும்.
oOo
ஆக, மேற்கண்ட அனைத்து சொற்றொடர்களும் மெய்யறிவாளர்களைக் குறிக்கும் ஆழ்ந்த பொருள் பொதிந்த, மேன்மையான சொற்றொடர்களாகும். எப்போது இவை வசைமொழியாக மாறியிருக்கும்?
எளிய பதில்: பொருளாதார சிந்தனை மேலோங்கிய பின்னர்.
நீண்ட பதில்: தொடர்ந்த மத & அரசியல் படையெடுப்புகள், அந்நிய இனங்களின் ஊடுறுவல், இனப்பெருக்கம், வெள்ளையர் விதைத்த பஞ்சம், இயற்கை பேரிடர்கள், பல நூற்றாண்டுகளாக தமிழரல்லாதவரின் ஆட்சி, கடந்த 60 ஆண்டுகளாக "ஊருக்குள் சேர்க்கவேக்கூடாது" என்ற வகையறாக்களின் கையில் ஆட்சி & ஏவல்... இந்த மேலான சூழ்நிலையில், மெய்யியல் சிந்தனை எங்கே மிஞ்சும்!
தற்போது நிலவும் பொருளாதார சூழல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இறக்கும் தருவாயிலும்கூட ஒருவர் தனது பொருளாதாரத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்நிலையில், பொருள் தேடவேண்டிய ஒருவர் வடக்கிருத்தல், மெய்யறிவு, வீடுபேறு என்று கிடந்தால்... 😏
oOo
🔸 ஆள் அரவமின்றி
இறுதியாக, "ஆள் அரவமின்றி" என்ற சொற்றொடரை பார்ப்போம்.
ஓரிடத்தில் ஒருவருமில்லாமல், எவ்வகையான ஓசையுமில்லாமல் இருந்தால், அவ்விடம் ஆள் அரவமின்றி காணப்படுகிறதென்று சொல்வோம். ஆள் என்பது எதனை குறிக்கிறதென்று கேட்டால், "மனிதன்" என்று பதில் சொல்லுவோம். சரி, அதென்ன அரவம் (பாம்பு)? பூனை, நாய், மாடு என எத்தனையோ பழக்கப்பட்ட உயிரிகள் இருக்கையில், ஏன் அரவமென்றார்கள்?
அரவமெனில் ஓயாமல் நமக்குள் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் மனமாகும்! மனதை பாம்பு, அன்னை (மாயை), மாயோன் (மாயக்கண்ணன்) என்று பல வகையாக உருவகப்படுத்தியுள்ளனர். சிவபெருமானின் உச்சந்தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையன்னையும் மனதையே குறிப்பிடுகிறார். ஓயாமல் அவரிடமிருந்து வெளிப்படும் நீரானது, ஓயாமல் நமக்குள் தோன்றும் எண்ணங்களைக் குறிக்கும். எவ்வளவு மோசமான எண்ணமாகவிருந்தாலும், இறுதி விளைவு நல்லதாகத்தான் இருக்கும் என்ற கணக்கில், அந்நீரை மேன்மையான நீராக (புனிதநீர் - கங்கை) காண்பித்துள்ளனர்.
அடுத்து, ஆள்.
ஆள் எனில் மனிதனல்ல. "நான் இன்னார்" என்ற எண்ணமாகும்! இந்த எண்ணமே நமக்கு தனித்தன்மையைக் கொடுக்கிறது.
"நான் இன்னார்" (ஆள்) & மனம் (அரவம்) ஆகிய இரண்டும் எந்த நிலையில் காணாமல் போகின்றன? திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி)!!
(தூக்கத்திலும் இவ்விரண்டும் இருப்பதில்லை. ஆனால், இவை இல்லையென்பதை நாம் உணருவதில்லை. திருநீற்று நிலையில் தெளிவாக உணருவோம்.)
எனவே, ஆள் அரவமின்றி = திருநீற்று நிலை.
இவ்வாறு, ஓரிடத்தைப் பற்றி விளக்குவதற்கும், ஒருவரை திட்டுவதற்கும்கூட மெய்யியலை பயன்படுத்திய குடி, வையகத்தில் தமிழ் குடியாகத்தான் இருக்கமுடியும். மேலும், மேற்கண்ட சொற்றொடர்கள் யாவும் கற்றவர் மட்டுமே பயன்படுத்தியவையல்ல. இன்னும் சொல்லப்போனால், சில சொற்றொடர்கள் பாமரர்கள், எளியவர்கள் மட்டுமே பயன்படுத்தியவையாகும். அவ்வளவு தூரம் மெய்யியல் தமிழோடும், தமிழர்களோடும் கலந்திருந்துள்ளது. இன்னும் ஆராய்ந்தால், மெய்யியலே அன்னைத்தமிழின் உயிர்நாடியென்பது தெளிவாக விளங்கும். இவ்வளவு பண்படுவதற்கு எத்தனை ஆயிரம், இலட்சம் ஆண்டுகளாயிற்றோ!
சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே! 💪🏽
oOOo
என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌷🙏🏽
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌸🌸🌸🌸