Friday, February 10, 2023

திரு கபிலர் குன்று 🌺🙏🏽🙇🏽‍♂️


🌷 சங்ககாலப் புலவரான திரு கபிலரின் திருக்கோயிலாகும் - அவர் வடக்கிருந்து திருநீற்று நிலையடைந்த திருவிடமாகும்.


🌷 கபிலர் குன்று என்றழைக்கப்படும் இந்த பாறைக்கோயில், தேவாரப்பாடல் பெற்றதும், அட்டவீரட்டத் திருக்கோயில்களில் ஒன்றானதும், திரு சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திய ஒளவைப்பாட்டி "விநாயகர் அகவல்" பாடி, திருநீற்று நிலையடைந்ததுமான திரு வீரட்டேசுவரர் திருக்கோயிலுக்கு பின்புறம் பாயும் தென்பெண்ணை ஆற்றுக்குள் உள்ளது. (இன்று வீரட்டேசுவரர் திருக்கோயிலுக்கும் ஆற்றுக்குமிடையே பல வீடுகள் தோன்றிவிட்டன. அன்று, வெற்றிடமாக / காடாக இருந்திருக்கும்; பலர் வடக்கிருந்திருப்பர்.)

🌷 கபிலர் சங்ககாலத்திய ஒளவைப்பாட்டியின் சமகாலத்தவர். இருவரும் இணைந்து, பாரி வள்ளலின் மகள்களான அங்கவை & சங்கவைக்கு, திரு வீரட்டேசுவரர் திருக்கோயிலில் திருமணம் நடத்திவைத்தனர்.

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️

இனி, வடக்கிருத்தல் பற்றி சற்று பார்ப்போம்.

வடக்கிருத்தல் எனில் வடக்கு முகமாக அமர்ந்து, உணவு தவிர்த்து உயிர்விடுதல் என்று பெரும்பாலானோர் கருதுகின்றனர். இது தவறாகும்!

புற உலகிற்கு எவ்வாறு திசைகள் இருக்கின்றனவோ, அவ்வாறே நமதுடலுக்கும் திசைகள் இருக்கின்றன. இடுப்பிலிருந்து கீழேயுள்ள பகுதி தெற்கு. நெஞ்சு கூட்டின் நடுவிலிருந்து வலது பகுதி முழுவதும் கிழக்கு. நெஞ்சு கூட்டின் நடுவிலிருந்து இடது பகுதி முழுவதும் மேற்கு. தலை, முகம் & கழுத்து ஆகியவை வடக்கு.

வடக்கிருத்தல் - வடக்கில் இருத்தல் - வட பகுதியில், குறிப்பாக முகத்தில், கருத்தை வைத்திருத்தல். அதாவது, தன்மையுணர்வில் நிற்றல். தொடக்கத்தில், முயற்சியுடன் செய்யப்படும் இப்பயிற்சி, இறுதியில், நமது இயல்பாகிவிடும். புறநாட்டமென்பது அறவே அற்றுப்போகும். இத்துடன் உணவை தவிர்த்தோமானால், 2-3 வாரங்களில், உடல் இறந்துவிடும். உடல் நீங்கியபின்னர் மீதமிருப்பது... நாம் மட்டுமே. இதுவே திருநீற்று நிலையெனப்படும். இதில் நிலைபெற முதிர்ச்சிவேண்டும். இல்லையெனில்... கோவிந்தா! மீண்டும் உடல்-வையக சிறைக்குள் சிக்கிக்கொள்வோம்.

இவ்வாறு அக்குன்றின் மீது வடக்கிருந்து, தன்மையுணர்வில் நிலைபெற்று, உடல் உகுத்திருக்கிறார் கபிலர். இதை உறுதி செய்த அன்றைய பெரியோர்கள், அவரது உடலை அடக்கம் செய்து, அதன்மீது அவரது நிலையைக் குறிக்கும் சிவ அடையாளத்தை நிறுவி, சுற்றி ஒரு திருக்கோயிலை எழுப்பியுள்ளனர். அக்கோயிலும் 2,300-2,800 ஆண்டுகளாக காலவெள்ளத்தை தாங்கி நின்றுகொண்டிருக்கிறது.

வெளி விடயங்களைவிட்டு மனம்
தன்னொளி உரு ஓர்தலே உந்தீபற
உண்மை உணர்ச்சியாம் உந்தீபற

-- உபதேச உந்தியார் #16

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment