Saturday, February 11, 2023

தைப்பூசம் - பாம்புக்காவடி - சிறுவிளக்கம்


காணொளி: கடந்த தைப்பூசத்தன்று திருச்செந்தூர் கடற்கரையில் நடந்த நிகழ்வு. இத்துடன் சுற்றி வந்த உரையை இவ்விடுகையின் கீழே இணைத்துள்ளேன்.

oOo

காலமாற்றத்தால் சடங்குகள் எவ்வளவு தூரம் திரிந்துபோகின்றன என்பதற்கு இந்த பாம்புக்காவடி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்!

பாம்பிற்கும் [கல்] உப்பிற்கும் ஆகாது. பாம்பு நடமாட்டம் மிகுதியாக உள்ள பகுதிகளில் வாழ்வோர், தங்களது வீட்டைச் சுற்றி சரளைக்கற்கள் அல்லது கல்லுப்பு போட்டுவைப்பர். எனில், கல்லுப்பையும் பாம்பையும் சேர்த்து, ஒரே பெட்டியில் கொண்டுவந்து, கடலருகில் வைத்து, திறந்துவிட்டால் என்னவாகும்? அது, "ஆளைவிடுங்கடா, சாமி" என்று தலைதெறிக்க கடலுக்குள் போய்விடும்!

(சுற்றியிருப்பவர்களுக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு.)

> காவடி - உடல்

> பாம்பு - மனம்

> கடல் - வையகம்

> கடலுக்குள் பாம்பை விடுவது - மனமெனும் பாம்பை வையகத்திற்குள் விட்டுவிடுவது

> விட்டுவிட்டால் என்னவாகும்?
நாம் மட்டுமிருப்போம். நாமாக இருப்போம். இதுவே வீடுபேறாகும்.

> மனதை எப்படி விடமுடியும்?

எளிய பதில்: மனதை கண்டுகொள்ளாமல் விட்டால் போதும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதில்: ஒவ்வொரு எண்ணம் எழும்போதும், அதை பின்தொடர்ந்து செல்லாமல், "இந்த எண்ணம் யாருக்கு எழுந்தது?" என்று கேட்டு, நோக்கத்தை தன்மீதே திருப்பி வைத்துக்கொண்டால் போதும். எழுந்த எண்ணம் அடங்கிவிடும்.

oOo

"பாம்பை கடலுக்குள் விடுவது" என்ற சடங்கிற்கு எதிரான சடங்கு "நீர்நிலைகளில் காசை வீசுவது":

> நீர்நிலை (கடல், ஆறு, சில சமயம், கிணறு) - வையகம்

> காசு - மெய்யறிவு / மெய்யறிவுத் தேடல்

> காசை நீர்நிலைக்குள் வீசுவது - மெய்யறிவுத் தேடலை விட்டுவிடுவது அல்லது அடைந்த மெய்யறிவை விட்டுவிடுவது

> விட்டால் என்னவாகும்?
பொருளாதார சிந்தனை முளைக்கும்.

வேடிக்கையாக சொன்னால்: கடவுள் எனும் காசைவிட்டால், காசு எனும் கடவுள் நம்மை பற்றிக்கொள்ளும்!! 😊

oOo

காணொளியுடன் வந்த உரைச் செய்தி:

பால் காவடி , பழக் காவடி, பன்னீர்க் காவடி சர்ப்பக் காவடி என்ற பாடலில் வரும் சர்ப்பக்காவடி 🐍 இதுதான்... அரோகரா 🐓

பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும்.

சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் 41 நாள் விரதம் இருப்பார்கள். அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பு வரும்... அது காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவில் தெரியுமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் ஒரு குறிப்பிட்ட அந்த இன பாம்பை போய் பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு கொண்டு வந்து, அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள். அது வேறு எங்கும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடுமாம். 

அந்த அரிய காட்சி இதோ🙏🙏🙏

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment