Saturday, November 5, 2022

ஏன் சிவபெருமானை பித்தன், நஞ்சுண்டேசுவரர் & தியாகராஜர் என்றழைக்கிறோம்?


(இவ்விடுகையின் அடிப்படை சிவபெருமான் நஞ்சுண்ட கதையாகும். தயவு செய்து, அக்கதையை இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

சிவபெருமான் நஞ்சுண்டார் என்பது புனைவுக் கதையாகும். அனைவராலும் பேருண்மைகளை புரிந்து கொண்டு, உள்வாங்கி, பலருக்கும் கடத்தமுடியாது. ஆனால், அனைவராலும் கதைகளை கேட்டு, காலத்திற்கும் மனதில் பதியவைத்து, பலருக்கும் கடத்தமுடியும். இந்த நோக்கத்தில்தான் பேருண்மைகள் புனைவுக் கதைகளாக்கப்பட்டன. கதைகளை கேட்ட பிறகு, அவற்றில் மறைந்திருக்கும் உண்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டுமேயன்றி, அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.

oOo

🔸 பாற்கடல் - நமதுடல்
🔸 வாசுகி பாம்பு - நமது மூச்சுக்காற்று
🔸 தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🔸 அசுரர்கள் - நாம் வெளியேற்றும் கரியமிலம்
🔸 பாற்கடலைக் கடைதல் - வடக்கிருத்தல். இந்த உருவகக்கதையில் மூச்சுப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட யோக முறை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அனைத்து முறைகளுக்கும் பொருந்தும்.
🔸 கடைதலின் போது (வடக்கிருத்தலின் போது) வெளிவரும் நஞ்சு...

இதற்கு, பெரும்பாலானோர் கொடுக்கும் விளக்கம்: எண்ணற்ற பிறவிகளாக நம்முள் பதிவாகியிருக்கும் எண்ணப் பதிவுகள், அவரவர் விதிப்படி கிடைக்க வேண்டிய பேறுகள் (சித்திகள்), பல தரப்பட்ட அறிவு என யாவும்.

இது தவறாகும்! இவை வடக்கிருத்தலின்போது ஒருவருக்குள்ளிருந்து (பாற்கடலிலிருந்து) வெளிவருபவை. மெய்யறிவாளரால் (சிவனால்) உட்கொள்ளப்படுபவை அல்ல. எனில், சிவபெருமான் அருந்தும் நஞ்சு எதைக் குறிக்கிறது?

oOo

முதலில் நாம் நினைவில் கொள்ளவேண்டியது: இந்த புனைவுக் கதை அன்னை வழிபாட்டினருடையது!

(நஞ்சுண்ட இறைவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்து அன்னை காப்பாற்றினார் என்பதுவரை அன்னை வழிபாட்டினரின் கதையாகும். அதற்கு பின்னர் அன்னை நப்பின்னை (நல்ல பின்னே - இலக்குமி) வெளிப்பட்டார் என்ற பகுதி வைணவர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகும். வைணவ பதிப்பின் பொருள் முற்றிலும் வேறாகும்.)

அம்மன் வழிபாட்டினருக்கு காணப்படும் உலகமே பெரிதாகும். உலகைக் காண உடலும் மனதும் வேண்டும். எனவே, இவர்கள் மனதை போற்றுவார்கள்.

அப்பன் (சிவன்) வழிபாட்டினருக்கு உலகமென்பது பொய். இவர்கள் மனதை அழித்து, தன்மையுணர்வில் (மெய்யறிவில்) நிலைத்திட முயற்சிப்பார்கள்.

மனதும் மெய்யறிவும் ஒன்றுக்கொன்று எதிரானது. மெய்யறிவு பெற்றவர்கள் உலக வாழ்க்கையிலிருந்து விலகிவிடுவார்கள்; அல்லது, முனைப்பற்று இருப்பார்கள். பொருளாதாரத்திற்கு இவர்கள் பயன்படமாட்டார்கள். எனவே, அன்னை வழிபாட்டினர்...

- மெய்யறிவை "நஞ்சு" என்றும்,
- மெய்யறிவில் திளைப்பதை "பித்துப் பிடித்தல்" என்றும்,
- மெய்யறிவாளரை "பித்தன்" என்றும் அழைத்தனர்!! 🙏🏽

தன்னையுணர்தல் = மெய்யறிவு அடைதல் = நஞ்சுண்ணுதல்.

நஞ்சுண்டேசுவரர் = மெய்யறிவாளர். 🙏🏽

oOo

ஒருவரை பாம்பு கடித்தவுடன் என்ன செய்கிறோம்? கடிபட்ட இடத்திற்கருகில் கட்டுப்போட்டு, நஞ்சு பரவாமல் தடுக்க முயற்சிக்கிறோம். இது போன்று, பாற்கடல் எனும் நமதுடலில் தோன்றிய மெய்யறிவு எனும் நஞ்சில் மெய்யறிவாளர் முழுமையாக நிலைபெறுவதற்கு முன்னர், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) சென்று, மெய்யறிவாளரிடம் மீதமிருக்கும் ஏதாவதொரு பற்றை பயன்படுத்தி, அவரை காப்பாற்றிவிடுகிறாராம்! அதாவது, ஜிஎஸ்டி-சூழ் உலகிற்குள் திரும்பவும் தள்ளிவிடுகிறாராம்! 😊

இதை "சிவபெருமானின் கழுத்தை அன்னை இறுக்கிப் பிடித்து, நஞ்சு பரவாமல் காத்தார்" என்று உருவகப்படுத்தியுள்ளனர். 🙏🏽

oOo

உண்மையில், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) என்ன முயற்சி (*) செய்தாலும், மெய்யறிவாளர் விட்டுக்கொடுத்தால் மட்டுமே, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் வந்து சிக்குவார். விட்டுக் கொடுப்பதையும், "என்ன, இன்னும் சிறிது ஆட்டம் போடவேண்டும். அவ்வளவுதானே? போட்டுக்கொள்." என்று சிரித்துக்கொண்டே விட்டுக்கொடுப்பார்.

அன்னைக்காக தன் நிலையிலிருந்து இறங்கிவந்து, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் சிக்குவதால், மெய்யறிவாளர் "தியாகராஜர்" ஆகிறார்!! 🙏🏽

(* - அச்சுறுத்துதல் (காளி), அவாவை தோற்றுவித்தல் (சிவகாமி / வெண்ணைத் திருடி கண்ணன்) என்று பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து மெய்யறிவாளரை உலகிற்குள் இழுத்து, தனது ஆட்டத்தை தொடர்வதைவிட, தானே ஆட்டத்தை ஆடமுடியாதா? முடியாது!

இந்த ஒரு கேள்வியை சரியாக புரிந்துகொண்டால், நமது முன்னோர்கள் ஏன் சிவத்தையே உள்ளபொருளாக கொண்டனர் என்பது விளங்கும்.)

oOo

அம்மன் வழிபாட்டினர் அப்பனை "பித்தன்" என்றழைத்துள்ளனர். அப்பன் வழிபாட்டினர் அன்னையை "பேய்" என்றழைத்துள்ளனர் (பேயோடாடி - பேயோடு + ஆடி - இறைவனின் திருப்பெயர்களில் ஒன்று). இவ்வாறு அழைப்பது அவரவர் கண்ணோக்கில் சரிதான் என்பதால், இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எவ்வளவு மேன்மையான மெய்யியல் சூழல் நிலவியிருந்தால் இவையெல்லாம் நிகழ்ந்திருக்கமுடியும்! 😌

வடக்கிலிருந்தும் வெளியிலிருந்தும் நஞ்சும், சாக்கடையும் வந்து கலக்காமல் போயிருந்தால்... தரமற்ற போலிகளின் கையில் மெய்யியல் சிக்காமல் போயிருந்தால்... 😍

oOo

இறுதியாக...

"நஞ்சுண்டேசுவரர்" என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கர்நாடகத்திலுள்ள திரு நஞ்சுண்டேசுவரர் திருக்கோயிலாகும்.

நஞ்சு, உண்ட ஆகிய சொற்கள் தமிழ் சொற்களாகும். கன்னட சொற்களல்ல. எனில், அந்த கோயில் யாருடையது? அக்கோயில் கருவறை உருவான காலத்தில் அங்கு யார் வாழ்ந்தார்கள்? கருவறையின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் திரு கெளதம மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ யாராக இருந்திருப்பார்? நஞ்சுண்டேசுவரர் என்ற அழகான, பொருள் பொதிந்த பெயர் பயன்பாட்டிலிருக்கும் போது "ஸ்ரீ கண்டேசுவரர்" என்ற ஆரியப்பெயர் எதற்காக சூட்டப்பட்டு, பரவலாக்கப்படுகிறது?

மற்ற மொழிகள் பேசப்படும் பகுதிகளில் உறைவிடம் கொண்டுள்ள பெருமான்களுக்கு சூட்டப்பட்ட திருப்பெயர்கள் மறைக்கப்பட்டு, இன்று, ஆரியப் பெயர்கள் மட்டும் நிலைத்திருக்க, தமிழகத்தில் மட்டும் நிறைமொழிப் பெயர்கள் எவ்வாறு இன்றுவரை தாக்குப் பிடிக்கின்றன? 💪🏽

என்றும் வாய்மையே வெல்லும்! 🙏🏽

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment