Showing posts with label கெளதமர். Show all posts
Showing posts with label கெளதமர். Show all posts

Saturday, November 5, 2022

ஏன் சிவபெருமானை பித்தன், நஞ்சுண்டேசுவரர் & தியாகராஜர் என்றழைக்கிறோம்?


(இவ்விடுகையின் அடிப்படை சிவபெருமான் நஞ்சுண்ட கதையாகும். தயவு செய்து, அக்கதையை இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

சிவபெருமான் நஞ்சுண்டார் என்பது புனைவுக் கதையாகும். அனைவராலும் பேருண்மைகளை புரிந்து கொண்டு, உள்வாங்கி, பலருக்கும் கடத்தமுடியாது. ஆனால், அனைவராலும் கதைகளை கேட்டு, காலத்திற்கும் மனதில் பதியவைத்து, பலருக்கும் கடத்தமுடியும். இந்த நோக்கத்தில்தான் பேருண்மைகள் புனைவுக் கதைகளாக்கப்பட்டன. கதைகளை கேட்ட பிறகு, அவற்றில் மறைந்திருக்கும் உண்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டுமேயன்றி, அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது.

oOo

🔸 பாற்கடல் - நமதுடல்
🔸 வாசுகி பாம்பு - நமது மூச்சுக்காற்று
🔸 தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
🔸 அசுரர்கள் - நாம் வெளியேற்றும் கரியமிலம்
🔸 பாற்கடலைக் கடைதல் - வடக்கிருத்தல். இந்த உருவகக்கதையில் மூச்சுப் பயிற்சியை அடிப்படையாகக் கொண்ட யோக முறை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அனைத்து முறைகளுக்கும் பொருந்தும்.
🔸 கடைதலின் போது (வடக்கிருத்தலின் போது) வெளிவரும் நஞ்சு...

இதற்கு, பெரும்பாலானோர் கொடுக்கும் விளக்கம்: எண்ணற்ற பிறவிகளாக நம்முள் பதிவாகியிருக்கும் எண்ணப் பதிவுகள், அவரவர் விதிப்படி கிடைக்க வேண்டிய பேறுகள் (சித்திகள்), பல தரப்பட்ட அறிவு என யாவும்.

இது தவறாகும்! இவை வடக்கிருத்தலின்போது ஒருவருக்குள்ளிருந்து (பாற்கடலிலிருந்து) வெளிவருபவை. மெய்யறிவாளரால் (சிவனால்) உட்கொள்ளப்படுபவை அல்ல. எனில், சிவபெருமான் அருந்தும் நஞ்சு எதைக் குறிக்கிறது?

oOo

முதலில் நாம் நினைவில் கொள்ளவேண்டியது: இந்த புனைவுக் கதை அன்னை வழிபாட்டினருடையது!

(நஞ்சுண்ட இறைவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்து அன்னை காப்பாற்றினார் என்பதுவரை அன்னை வழிபாட்டினரின் கதையாகும். அதற்கு பின்னர் அன்னை நப்பின்னை (நல்ல பின்னே - இலக்குமி) வெளிப்பட்டார் என்ற பகுதி வைணவர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகும். வைணவ பதிப்பின் பொருள் முற்றிலும் வேறாகும்.)

அம்மன் வழிபாட்டினருக்கு காணப்படும் உலகமே பெரிதாகும். உலகைக் காண உடலும் மனதும் வேண்டும். எனவே, இவர்கள் மனதை போற்றுவார்கள்.

அப்பன் (சிவன்) வழிபாட்டினருக்கு உலகமென்பது பொய். இவர்கள் மனதை அழித்து, தன்மையுணர்வில் (மெய்யறிவில்) நிலைத்திட முயற்சிப்பார்கள்.

மனதும் மெய்யறிவும் ஒன்றுக்கொன்று எதிரானது. மெய்யறிவு பெற்றவர்கள் உலக வாழ்க்கையிலிருந்து விலகிவிடுவார்கள்; அல்லது, முனைப்பற்று இருப்பார்கள். பொருளாதாரத்திற்கு இவர்கள் பயன்படமாட்டார்கள். எனவே, அன்னை வழிபாட்டினர்...

- மெய்யறிவை "நஞ்சு" என்றும்,
- மெய்யறிவில் திளைப்பதை "பித்துப் பிடித்தல்" என்றும்,
- மெய்யறிவாளரை "பித்தன்" என்றும் அழைத்தனர்!! 🙏🏽

தன்னையுணர்தல் = மெய்யறிவு அடைதல் = நஞ்சுண்ணுதல்.

நஞ்சுண்டேசுவரர் = மெய்யறிவாளர். 🙏🏽

oOo

ஒருவரை பாம்பு கடித்தவுடன் என்ன செய்கிறோம்? கடிபட்ட இடத்திற்கருகில் கட்டுப்போட்டு, நஞ்சு பரவாமல் தடுக்க முயற்சிக்கிறோம். இது போன்று, பாற்கடல் எனும் நமதுடலில் தோன்றிய மெய்யறிவு எனும் நஞ்சில் மெய்யறிவாளர் முழுமையாக நிலைபெறுவதற்கு முன்னர், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) சென்று, மெய்யறிவாளரிடம் மீதமிருக்கும் ஏதாவதொரு பற்றை பயன்படுத்தி, அவரை காப்பாற்றிவிடுகிறாராம்! அதாவது, ஜிஎஸ்டி-சூழ் உலகிற்குள் திரும்பவும் தள்ளிவிடுகிறாராம்! 😊

இதை "சிவபெருமானின் கழுத்தை அன்னை இறுக்கிப் பிடித்து, நஞ்சு பரவாமல் காத்தார்" என்று உருவகப்படுத்தியுள்ளனர். 🙏🏽

oOo

உண்மையில், அன்னை மாயை (அல்லது, மாயக்கண்ணன்) என்ன முயற்சி (*) செய்தாலும், மெய்யறிவாளர் விட்டுக்கொடுத்தால் மட்டுமே, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் வந்து சிக்குவார். விட்டுக் கொடுப்பதையும், "என்ன, இன்னும் சிறிது ஆட்டம் போடவேண்டும். அவ்வளவுதானே? போட்டுக்கொள்." என்று சிரித்துக்கொண்டே விட்டுக்கொடுப்பார்.

அன்னைக்காக தன் நிலையிலிருந்து இறங்கிவந்து, மீண்டும் உடல்-உலக சிறைக்குள் சிக்குவதால், மெய்யறிவாளர் "தியாகராஜர்" ஆகிறார்!! 🙏🏽

(* - அச்சுறுத்துதல் (காளி), அவாவை தோற்றுவித்தல் (சிவகாமி / வெண்ணைத் திருடி கண்ணன்) என்று பல தில்லுமுல்லு வேலைகளைச் செய்து மெய்யறிவாளரை உலகிற்குள் இழுத்து, தனது ஆட்டத்தை தொடர்வதைவிட, தானே ஆட்டத்தை ஆடமுடியாதா? முடியாது!

இந்த ஒரு கேள்வியை சரியாக புரிந்துகொண்டால், நமது முன்னோர்கள் ஏன் சிவத்தையே உள்ளபொருளாக கொண்டனர் என்பது விளங்கும்.)

oOo

அம்மன் வழிபாட்டினர் அப்பனை "பித்தன்" என்றழைத்துள்ளனர். அப்பன் வழிபாட்டினர் அன்னையை "பேய்" என்றழைத்துள்ளனர் (பேயோடாடி - பேயோடு + ஆடி - இறைவனின் திருப்பெயர்களில் ஒன்று). இவ்வாறு அழைப்பது அவரவர் கண்ணோக்கில் சரிதான் என்பதால், இருவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எவ்வளவு மேன்மையான மெய்யியல் சூழல் நிலவியிருந்தால் இவையெல்லாம் நிகழ்ந்திருக்கமுடியும்! 😌

வடக்கிலிருந்தும் வெளியிலிருந்தும் நஞ்சும், சாக்கடையும் வந்து கலக்காமல் போயிருந்தால்... தரமற்ற போலிகளின் கையில் மெய்யியல் சிக்காமல் போயிருந்தால்... 😍

oOo

இறுதியாக...

"நஞ்சுண்டேசுவரர்" என்ற பெயரை கேட்டவுடன் நமக்கு நினைவுக்கு வருவது கர்நாடகத்திலுள்ள திரு நஞ்சுண்டேசுவரர் திருக்கோயிலாகும்.

நஞ்சு, உண்ட ஆகிய சொற்கள் தமிழ் சொற்களாகும். கன்னட சொற்களல்ல. எனில், அந்த கோயில் யாருடையது? அக்கோயில் கருவறை உருவான காலத்தில் அங்கு யார் வாழ்ந்தார்கள்? கருவறையின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் திரு கெளதம மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ யாராக இருந்திருப்பார்? நஞ்சுண்டேசுவரர் என்ற அழகான, பொருள் பொதிந்த பெயர் பயன்பாட்டிலிருக்கும் போது "ஸ்ரீ கண்டேசுவரர்" என்ற ஆரியப்பெயர் எதற்காக சூட்டப்பட்டு, பரவலாக்கப்படுகிறது?

மற்ற மொழிகள் பேசப்படும் பகுதிகளில் உறைவிடம் கொண்டுள்ள பெருமான்களுக்கு சூட்டப்பட்ட திருப்பெயர்கள் மறைக்கப்பட்டு, இன்று, ஆரியப் பெயர்கள் மட்டும் நிலைத்திருக்க, தமிழகத்தில் மட்டும் நிறைமொழிப் பெயர்கள் எவ்வாறு இன்றுவரை தாக்குப் பிடிக்கின்றன? 💪🏽

என்றும் வாய்மையே வெல்லும்! 🙏🏽

oOOo

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Wednesday, November 9, 2016

சென்னை வியாசர்பாடி இரவீஸ்வரர் திருக்கோயில்

இந்த இடுகையுடன் இணைக்கப்பட்டிருக்கும் படங்கள் சென்னை #வியாசர்பாடி #இரவீஸ்வரர் கோயிலினுடையது.

பாடி எனில் ஆநிரைகளை பாதுகாப்போர் / மேய்ப்போர் வாழ்ந்த இடம். ஆநிரைகளாகிய ஜீவன்கள் தறிகெட்டுச் செல்லாமல் இருக்க, பேருண்மைகளைத் திரட்டியும், பகுத்தும் (வியாசம்), போதித்தும் வந்த மகரிஷி வியாசரும் (#கிருஷ்ண #த்வைபாயனர் - தீவில் இருந்த/பிறந்த கருப்பர்) அவரது மாணவர்களும் மற்றும் அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவர்களும் வாழ்ந்த பகுதி என்பதால் இவ்விடத்திற்கு வியாசர்பாடி என்று பெயர்.

வியாசரின் காலம் மகாபாரத காலம். துவாபர யுகத்தின் இறுதி. சுமார் 5100 வருடங்களுக்கு முன்னர்.

"இது என்ன புதுக்கதை? #வியாசர் எப்போது இங்கு வந்தார்?" என்று கேட்போருக்கு ...

🔥 #வியாசர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர் என்பது அவரது பெயரிலேயே உள்ளது.

🔥 வியாசரின் மகன் #சுகபிரம்ம மகரிஷியின்  (இவர் பிறவி-ஞானி) சமாதி தலம் தான் #சேலம் #சுகவனேஸ்வரர் திருக்கோயில்.

🔥 வியாசருக்கு மூத்தோரான #வால்மீகி, #வசிஷ்டர் மற்றும் #விஸ்வாமித்திர மகரிஷிகளின் சமாதி தலங்கள் முறையே சென்னை #திருவான்மியூரிலுள்ள #மருந்தீச்சுரம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள #திட்டை #வசிட்டேச்சுரம் மற்றும் #வேதாரண்யம் எனும் திருமறைக்காட்டிலுள்ள #திருமறைக்காடர் ஆலயங்கள் ஆகும்.

🔥 இராமனின் மகன்களான லவ, குசர்கள் வளர்ந்த இடம் சென்னை #கோயம்பேடு (#லவகுசபுரி).

(தொண்டைமான் இளந்திரையன் ஆட்சி செய்ததால் மட்டுமல்லாது, தொன்மையான பகுதி என்ற காரணத்தினாலும் வியாசர்பாடி அடங்கிய சென்னைக்கு #தொண்டை #மண்டலம் என்று பெயரிட்டிருக்கலாம் என்பது என் கருத்து.)

🔥 இராம சகோதரர்களின் தந்தையாகிய மகரிஷி #ரிஷ்யசிருங்கரின் (தசரதர் வளர்த்தவர் மட்டுமே) சமாதி தலம் இருப்பது #சிருங்கேரியில். விஸ்வாமித்திர மகரிஷியின் மகளாகிய சகுந்தலையை வளர்த்த மகரிஷி #கௌதமரின் சமாதி தலம் மைசூரூவிற்கு அருகிலுள்ள #நஞ்சன்கூடு #நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். ஆரியர் வருவதற்கு முன்னரும், அவர்கள் வடக்கை ஆக்ரமித்த பின்னரும் இப்பகுதிகளெல்லாம் நம்மிடமேயிருந்தன.

இப்படி இந்து சமயத்தின் பெரும் ரிஷிகளெல்லாம் தமிழகத்தில் குடிகொண்டிருக்க, மகரிஷி வியாசர், தான் குடியிருக்க வியாசர்பாடியைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பென்ன?

(இந்நேரம் இந்த இடுகையை படிப்போர் ஓர் பேருண்மையை உணர்ந்திக்க வேண்டும். "இம்மகரிஷிகள் அனைவரும் தமிழரே" என்பதே அது. எனில், அவர்கள் உணர்ந்து உரைத்த, வகுத்துக் கொடுத்த பேருண்மைகளின் தொகுப்பான, உலகிலுள்ள அனைத்து மதங்களின் தாயாகிய, இந்து சமயம் தமிழனுடையதே. காரணமில்லாமல், ஆரியர்கள் ரஷ்யாவிலிருந்து இங்கு வரவில்லை. நம்மிடம் அத்தனை ஆன்மிக & லௌகிக செல்வங்கள் இருந்தன. வரும் போது காட்டுமிராண்டிகளாக இருந்தாலும், நம்மால், நம்மிடமிருந்த விஷயங்களால் பக்குவமடைந்தனர். நமதை தமதாக்கினர். கோஹினூர் வைரம் இங்கிலாந்தில் இருக்கிறது என்பதற்காக,  அது இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்ற உண்மை மாறிவிடுமா? அது போல் தான், இந்து சமயமும். எல்லாம் ஆரியத்தில் இருக்கிறது என்பதற்காக, அவர்களுடையதாகிவிடுமா?  ஆனால், இன்று நம் செல்வங்களை நாமே எள்ளி நகையாட முக்கிய காரணம் நம் சுயநல, நயவஞ்சக, துரோக, அந்நிய கைகூலிகளான, கருங்காலி திராவிட அரசியல் வியாதிகளே காரணம். 😤😠😡)

ஒரு காலத்தில் புகழ் பெற்ற பகுதியாக இருந்திருக்கும் வியாசர்பாடியின் இன்றைய நிலை...

😔 மூலவர் (வியாச பகவானின் சமாதியின் மேலிருக்கும் அடையாளம் - லிங்கம்) இன்று தரை மட்டத்திலிருந்து 2 அடிகள் கீழேயுள்ளது. ஒரு காலத்தில் தரைமட்டத்திலிருந்து 15 அடிகள் மேலிருந்ததாம். கருவறையின் சுற்றுப்புர சுவரை பார்த்தாலே தெரியும். அதன் இடுப்புபகுதி வரை புதைந்துள்ளது. இது எத்தனையாவது முறைக் கட்டபட்ட கருவறை என்று தெரியவில்லை. மூலவரைக் காண தெற்குபுரமாக உள்ளே நுழைவது என்பது விஜயநகர காலத்துப் பாணியாகும். அன்று கடைசியாக திருத்தியமைக்கப்பட்ட வடிவமைப்பின் மேலேயே மீண்டும் மீண்டும் கட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

🙁 அன்று இப்பூமியில் வழிப்பாட்டுத் தலங்களில் மூலவர் மட்டுமே இருந்தார். மற்ற அனைத்தும் (நந்தி, அம்மன், கோஷ்ட தேவதைகள்) பின்னாளில் சேர்க்கப்பட்டவை. அப்படி சேர்க்கக்கூட இடமில்லாத அளவிற்கு ஆக்ரமிப்புகள். பெயருக்கு கோஷ்ட தேவதைகள். இப்படி ஸ்தாபிப்பதற்கு பதில் அவைகளை எடுத்துவிடலாம். மூலவர் மட்டுமே போதும். வணங்கப்படவேண்டியவர் அவர் ஒருவர் மட்டுமே.

😡 மண்டபம் கட்ட தலமரத்தை வெட்டி விட்டார்கள் புண்ணியவான்கள். தலமரம் கமிஷன் கொடுக்குமா? மண்டபம் கட்டினால் கமிஷன் கிடைக்குமே. கட்ட, பராமரிக்க, இடித்துவிட்டு மீண்டும் கட்ட என்று வாழையடி வாழையாக "தொழிலு" கிடைக்குமே.

😞 இன்றைய நிலையில், ஒரு சாமான்ய பக்தனால் முடிந்தது கோயிலுக்குச் சென்றுவருவது, கருவறை விளக்கெரியத் தேவையான பொருட்களை வாங்கித் தருவது, தரிசனம் செய்து வைக்கும் கடைசி தலைமுறை குருக்களுக்கு தட்சிணை கொடுப்பது, இந்நிலை மாற மீண்டும் ஞானசம்பந்த பெருமான் அவதரிக்க இறைவனை வேண்டுவது மற்றும் முடிந்தால் கோயிலை சுத்தம் செய்வது மட்டுமே.

🙏 எக்காரணம் கொண்டும் தயவு செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தாதீர்கள். கருங்காலி அரசியல்வியாதிகளும், அரசாங்கமும் தின்று ஏப்பம் விட்டது போக, ஒரு பகுதி நம் எதிரிகளுக்கே போகிறது. சொந்தக்காசில் சூன்யம் ஏன் வைத்துக் கொள்ளவேண்டும்? 😕

🔯 திருச்சிற்றம்பலம் 🕉