Sunday, October 2, 2022

திருச்செந்தூர் கருவறையின் பின்புறமுள்ள ஐந்து இலிங்கத் திருமேனி 🌺🙏🏽🙇🏽‍♂️ - தெரிந்த செய்தி. தெரியாத பொருள்.


மேலுள்ள படத்துடன் சுற்றிவரும் தொன்ம வழி செய்தி:

இந்த ஐந்து இலிங்க திருவுருவம் திருச்செந்தூர் கருவறையின் பின்புறமுள்ளது. இத்திருவுருவை வணங்கிய பின்னரே முருகப்பெருமான் சூரபதுமனை அழிக்கப் புறப்பட்டார்.

இதன் உட்பொருள்:

திரு செந்திலாண்டவர் எனப்படும் திருச்செந்தூர் மூலவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் மாமுனிவர், வடக்கிருந்து மெய்யறிவு பெறுவதற்கு முன்னர் இந்த ஐந்து இலிங்கத் திருவுருவை வழிபட்டார்.

🌷 முருகப்பெருமான் - மாமுனிவர்
🌷 சூரசம்ஹாரம் - மெய்யறிவு பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவும்
🌷 தெய்வானை - மெய்யறிவு
🌷 யானை முகாசுரன் - நமது நினைவுகள்
🌷 கோளரி (சிங்க) முகாசுரன் - நமது முயற்சி
🌷 சூரபதுமன் - நமது செருக்கு / "நான் இன்னார்" எனும் பொய்யறிவு

oOo

அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி

மேலுள்ள பாடல் வரி திருச்செந்தூர் கந்த சஷ்டி கவசத்தில் இடம்பெறுகிறது.

🌷 அமரர் - இறப்பற்ற பரம்பொருளாகிய நாமே! நமதுடல்தான் பிறந்திருக்கிறது. இறப்பதும் அதுதான். நாம் பிறக்கவில்லை. இறப்பும் நமக்கில்லை.

🌷 இடர் - உடலல்லாத நம்மை உடலாகக் காண்கிறோம். நிலையான பொருளாகிய நம்மை நிலையற்றதாக உணர்கிறோம். நிலையற்ற உலகை நிலையானதாக காண்கிறோம். இந்த தவறுகள்தாம் நாம் படும் அனைத்து இடர்களுக்கும் அடிப்படையாகின்றன.

🌷 அமரம் - திருப்புதல் / திரும்புதல். வெளிப்புறமாக செல்லும் நோக்கத்தை தன் மீது - தனது தன்மையுணர்வின் மீது - திருப்புதல் / திரும்புதல். இது எப்போது நடக்கும்?

இறையருள் (இறைவனும் மெய்யாசிரியரும் வேறுவேறல்லர்), முன்வினைப்பயன், நம் முயற்சி என அனைத்தும் கூடியிருக்கும் ஒரு சமயத்தில், நமக்குள்ளிருந்து ஒரு தெளிவு / அறிவு (குமரன்) தோன்றி, நமதுண்மையை நமக்கு உணரவைக்கும். அதுவரை புறமுகமாகவிருந்த நமது கண்ணோக்கம் அகமுகமாக நம் மீது திரும்பும் (அமரம்). இவ்வாறு "அமரம் புரிந்த" (கண்ணோக்கத்தை திருப்பிய) "குமரனடியை" (உள்ளிருந்து வெளிப்பட்ட அறிவை) இறுகப் பற்றிக்கொண்டிருத்தலே ("நெஞ்சே குறி") நிலைபேறாகும்!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment