Saturday, January 8, 2022

அ. எது இலங்கை? ஆ. எது சிறந்த சித்தரிப்பு? கீதோபதேசமா? அன்னை அன்னபூரணியா?

ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல ...

கோளறு பதிகத்தின் 8வது பாடலில் இந்த வரிகள் இடம் பெறுகின்றன.

இலங்கையை "ஏழு கடல்கள் சூழ்ந்த" என்று குறிப்பிடுகிறார் ஆளுடைய பிள்ளையார் 🌺🙏🏽🙇🏽‍♂️. ஆனால், இலங்கையை 3 கடல்கள்தானே சூழ்ந்துள்ளன! (நுட்பமாக கணக்கிட்டால், இரு கடல்கள்தாம் தேறும்) எனில், எதை இலங்கையென்று குறிப்பிடுகிறார்?

நீரோட்டத்திற்கு இடையேயான பகுதியும் இலங்கை எனப்படும்!

எனில், ஏழு கடல்கள் என்பன எவை? ஏழு தாதுக்கள்! ஏழு தாதுக்களால் ஆன நம் உடல்!!

எனில், கடலெனும் உடல் சூழ்ந்த இலங்கை எது? நாம்தான்!!

இந்த இலங்கையின் அரையன் (தலைவன்) யார்? ஐம்புலன்களையும் ஐங்கருவிகளையும் கொண்ட மனமெனும் இராவணன்! ^

இந்த மனமெனும் இராவணனாலும் தனக்கு எந்த இடரும் நேர்ந்திடாது என்கிறார் பெருமான். ஏனெனில், தான் நிலைபேற்றை அடைந்துவிட்டதால் (உளமே புகுந்த அதனால்).

ஆகையால், உடலெனும் ஆழ்கடலும் நல்லதே என்கிறார். நாம் உடலை சிறை என்கிறோம். ஆனால், நிலைபேற்றை அடைந்துவிட்டால் உடலும் நல்லதே என்கிறார் பெருமான்.

oOo

^ - மெய்யறிவில் நிலைபெறும்வரை மனம்தான் நமக்கு தலைவனாகும் (படம் #1: கீதோபதேசம்). நிலைபெற்ற பின், அது நமக்கு உணவு சமைத்துப் பரிமாறும் அன்னை அன்னபூரணியாகிவிடும் (படம் #2).


🌷 கீதோபதேசம்

நின்று கொண்டிருக்கும் திருமால் இருள் பொருந்திய குழப்பத்தை / மயக்கத்தைக் குறிக்கிறார். மால் எனும் சொல்லிற்கு குழப்பம் / மயக்கம் என்பது பொருள். மாலோனே - மயக்குபவனே. அதாவது, மாயை.

வைணவம் அன்னை வழிபாட்டிலிருந்து தோன்றியதாகும். உடலல்லாத நம்மை உடலாக காணச் (மயக்க) செய்யும் ஆற்றலுக்கு அன்னை வழிபாட்டில் மாயை என்று பெயர். அங்கு பெண்ணானது இங்கு ஆணாகிவிட்டது.

திருமாலின் காலடியிலிருக்கும் அர்ஜுனன் இருளுக்கு எதிரான ஒளியைக் குறிக்கிறார். சுய ஒளி கொண்டது எது? அறிவுப் பொருளாகிய நாமே அது.

தற்போது நம்மை நாம் ஓர் உடலாக காண்கிறோம். காட்சி மாத்திரமேயான உலகை உண்மையென்று கருதுகிறோம். அசைவற்ற நாம் ஓர் இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு செல்வதாக உணர்கிறோம். அசையும் உலகு அசைவற்று நிற்பதாக காண்கிறோம். இதற்கு மயக்கம் என்று பெயர். நம்மைப் பற்றிய உண்மையை நாம் உணரும் வரை இந்நிலை தொடரும். இந்நிலை தொடரும் வரை நம்மை இயக்குவது மாயையாகும். இதனாலேயே நம்மை இயக்கும் மாயையை நிற்பது போன்றும், இயங்குவதாகத் தோன்றும் நம்மை மாயையின் காலடியிலிருப்பது போன்றும் சித்தரித்திருக்கிறார்கள்.



🌷 அடுத்து, அன்னை அன்னபூரணி

ஒரு சமயத்தில், நாம் அழியும் உடலல்ல, அசைவு நமக்கில்லை, இயங்குவது நாமில்லை, காணப்படும் உலகம் காட்சி மாத்திரமே என்பதையெல்லாம் உணர்ந்துவிடுவோம். அதாவது, மெய்யறிவு பெற்று நிலைபெற்றுவிடுவோம். இதன் பிறகு மாயையால் (திருமாலால்) நம்மை ஒன்றும் செய்யமுடியாது. ஆனால், எடுத்த பிறவி முடியும்வரை காட்சிகள் மட்டும் தொடரும். தோன்றும் காட்சிகளை கண்டுகளித்திருப்பதைத் தவிர வேறு பணி நமக்கில்லை. இதை சற்று மாற்றிச் சொல்லவேண்டுமானால்: தானாக சமைந்து வருவதை உண்டு களித்திருப்பதைத் தவிர வேறு பணி நமக்கில்லை!

இவ்வுடல் வழியாக நாம் காணவேண்டிய காட்சிகளை சமைத்துக் கொடுக்கும் மாயையே அன்னை அன்னபூரணி ஆகிறார். மெய்யறிவில் நிலைபெறுவதற்கு முன் மாயையால் இயக்கப்பட்ட நாம், இப்போது, அதே மாயையால் உணவு பரிமாறப்படுகிறோம்!! ☺️

மெய்யறிவு பெறுவதற்கு முன்புள்ள நிலைக்கு பொருந்திய கீதோபதேசம், மெய்யறிவு பெற்ற பின் பொருந்தவில்லை. மெய்யறிவு பெற்ற பின் பொருந்தும் அன்னை அன்னபூரணி, பெறுவதற்கு முன் பொருந்துவாரா? பார்ப்போம்.


மெய்யறிவு பெறுவதற்கு முன்பும் பின்பும் நம்மைப் பற்றிய அறிவு & தோன்றும் காட்சிகளைப் பற்றிய அறிவு ஆகியவற்றைத்தவிர வேறெதுவும் மாறிவிடாது. பெறுவதற்கு முன், அன்னையுடன் சேர்ந்து (காட்சிகளை உண்மையென்று நம்பி) நடனமாடிக் கொண்டிருப்போம் (படம் #4: அம்மையப்பரின் கூத்து). பெற்ற பின், தோன்றும் காட்சிகளை கண்டுகளித்துக் கொண்டிருப்போம். நம் நிலைதான் மாறுகிறதேயன்றி அன்னையின் நிலை மாறுவதில்லை. காட்சிகளை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கிறார். அதாவது, சமைத்து உணவு பரிமாறிக் கொண்டேயிருக்கிறார். அன்னபூரணியாகவே இருக்கிறார்.

இவ்வகையில், கீதோபதேச சித்திரத்தைவிட அன்னை உணவு பரிமாறும் (படம் #2) அல்லது உணவு பரிமாற தயாராக தனியாக அமர்ந்திருக்கும் (படம் #3) சித்திரமே சிறந்ததாகும்.

🌷 கீதோபதேச சித்திரம் மட்டுமல்ல. பின்வரும் வைணவ & அன்னை வழிபாட்டுச் சித்திரங்களும் மெய்யறிவு பெறுவதற்கு முன்னர் மட்டுமே பொருந்தும்:

🔸 கண்ணபிரான் குழலூதுவது போன்றும், ராதை மயக்கத்துடன் அவரை காண்பது போன்ற சித்திரங்கள் (பிரான் - இருள், ராதை - ஒளி)
🔸 கண்ணபிரான் குழலூதுவது போன்றும், பல வகை விலங்குகள் மயக்கத்துடன் அவரை சுற்றியிருப்பது போன்ற சித்திரங்கள் (பிரான் - இருள், விலங்குகள் - உயிர்கள் - ஒளி)
🔸 மொத்தத்தில் மஞ்சள் வேட்டி உடுத்தியுள்ள பெருமாளின் சித்திரங்கள் யாவும்! கருமையான பெருமாளின் மேலுடல் இருளைக் குறிக்கும். அவரது மஞ்சள் கீழாடை ஒளியைக் குறிக்கும். அதாவது, ஒளியைவிட இருள் மேலானது / உயிரைவிட உயிரற்றது மேலானது / அறிவைவிட அறிவற்றது மேலானது என்பது அச்சித்திரங்கள் உணர்த்தும் பொருளாகும்.
🔸 சிவபெருமானுக்கு அன்னை பிச்சையிடுவது போன்ற சித்திரங்கள். இவற்றிலும், அன்னை அரியணையில் அமர்ந்திருக்க, பெருமான் அவரிடம் வந்து பிச்சை பெறுவது போன்ற சித்திரம் என்றைக்குமே பொருந்தாது! கண்ணுக்கெட்டிய தூரம்வரை புவியின் மேற்பரப்பு வளையாமல் காட்சியளிப்பதால், புவி தட்டையானது என்று பரங்கியர்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்ததற்கு சமமாகும்.

oOOo

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment