Friday, January 21, 2022

பெருமாளின் திருவிறக்கங்கள் - மெய்யியல் அடிப்படையில்


மனிதனுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது - செய்தி.

அவ்வளவுதான்! "நமது முன்னோர்கள் இதை என்றோ உணர்ந்திருந்தனர். இதனால்தான் பன்றியையும் மனிதனையும் இணைத்து பன்றிப்பெருமாளை உருவாக்கியிருந்தனர்." என்ற வகையில் எழுதத் தொடங்கிவிட்டனர்!

பன்றியின் இதயத்திற்கும் பன்றிப் பெருமாளுக்கும் எந்த தொடர்புமில்லை. பெருமாளின் திருவிறக்கங்கள் யாவும் மெய்யறிவைப் பற்றியது:

🌷 மெய்யறிவு பெறுவதற்காக மாமுனிவர்கள் பயன்படுத்திய நுட்பங்கள்
🌷 அல்லது, அவர்கள் அறிவுருத்திய நுட்பங்கள்
🌷 அல்லது, பயணிக்கும் வழியில் அவர்களுக்கு கிடைத்த துய்ப்புகள்

இனி, திருவிறக்கங்களை மிகவும் சுருக்கமாக பார்க்கலாம்:

1. மீன் திருவிறக்கம்

உடலென்னும் கடலுக்குள் ஆழ்தல். அதாவது, தனக்குள் தேடுதல்.

2. ஆமைத் திருவிறக்கம் - புலனடக்கம்.

புலன்களை அடக்கி, மூச்சுப் பயிற்சி செய்து கொண்டு (உட்செல்லும் உயிர்வளி - தேவன், வெளியேறும் கரியமிலம் - அசுரன்), மெய்யாசிரியரின் அறிவுரையை (மந்தார மலை) சிந்தித்துக் (கடைந்து) கொண்டிருந்தால் முதலில் நஞ்சில் (பல காலமாக, பல பிறவிகளாக நம்முள் சேர்ந்துள்ள பதிவுகள்) தொடங்கி, இறுதியில் "நாமே உள்ளபொருள்" என்ற மெய்யறிவில் (நப்பின்னை - இலக்குமி) முடியும்.

3. பன்றித் திருவிறக்கம்

மீன் திருவிறக்க கதையில் வரும் கடலை மண்ணாகவும், மீனை பன்றியாகவும் மாற்றிக்கொண்டு, உடன் மோப்ப ஆற்றலையும் சேர்த்துக்கொண்டால் பன்றித் திருவிறக்க கதை கிடைத்துவிடும்! ஏன் மோப்ப ஆற்றல்? இதற்கு பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பதிலளிக்கிறார்: இருப்பு என்ற ஒன்றில்லாமல் இருக்கிறேன் என்ற உணர்வு தோன்றுமா? 

ஆகையால், இருக்கிறேன் என்ற உணர்வைக் கொண்டு நமதிருப்பை மோப்பம் பிடிக்கவேண்டும்.

4. கோளரி (சிங்கம்) திருவிறக்கம்

இந்த கதைக்கு திருக்கடவூர் தலவரலாறுதான் அடிப்படை. இரண்டையும் இணைத்துப் பார்த்தால் எளிதில் புரிந்துகொள்ளலாம். நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் (பிரகலாதன் வெளிபடுத்தும் குணங்கள்), நமது தன்மையுணர்வை விடாது இறுகப்பிடிக்கவேண்டும் (மார்க்கண்டேய மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ சிவலிங்கத்தை இறுகப்பிடித்தது போன்று). ஒரு சமயத்தில், நமக்குள்ளிருந்து ஒரு தெளிவு பிறக்கும்^; உலக காட்சி விலகிவிடும்; நாம் யாரென்பது தெளிவாகிவிடும்.

^ (மார்க்கண்டேயர் கதையில், சிவபெருமான் சிவலிங்கத்திலிருந்து வெளிப்படுவார்; பிரகலாதன் கதையில், கோளரிப் பெருமாள் தூணிலிருந்து வெளிப்படுவார்)

5. குறளன் (வாமனர்) திருவிறக்கம் - மெய்யறிவாளரிடமிருந்து (இந்திரன்) வெளிப்படும் அறிவுரை (உபேந்திரன்). 

பகவானிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" என்பது மிகச்சிறந்த குறளனாகும். இந்த அறிவுரையை ஏற்க மனமெனும் அசுரகுரு தொடக்கத்தில் தடைபோடும். மனதை ஒதுக்கி, இவ்வறிவுரையை ஏற்றுக்கொண்டு, விடாது சிந்திக்கத் தொடங்கினால் நனவு, கனவு, தூக்கம் (குறளன் அளந்த 3 அடிகள்) என்று எல்லா நிலைகளையும் அந்த சிந்தனை நிறைத்துவிடும். இறுதியில், மீதமிருக்கும் நமது தனித்துவத்தையும் (நான் இன்னார்) விட்டுவிடுவோம் (மகாபலியின் தலை மீது குறள் பெருமாள் கால் வைத்தது).

6. பரசுராமர் திருவிறக்கம் - பற்றறுத்தல்.

மற்ற திருவிறக்கங்கள் யாவும் அவற்றில் வரும் முகமை கதாபாத்திரங்களைக் கொண்டு பெயரிடப்பட்டிருக்கும். இந்த திருவிறக்கம் மட்டும் கதாநாயகர் கையில் வைத்திருக்கும் ஆயுதத்தின் பெயரைக்கொண்டு தொடங்கும். ஏனெனில், பரசு குறிக்கும் பற்றறுத்தல் இறுதி நிலையான நிலைபேற்றை வழங்கவல்லதாகும்!

"கோட்டைக்குள் எத்தனை எதிரிகள் இருந்தாலென்ன? வெளியே வர வர, வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், கோட்டை நம் வசமாகும்." என்று அருளியிருக்கிறார் பகவான். இந்த சொற்றொடரை உருவகப்படுத்தினால் நமக்கு கிடைப்பது பரசு (பற்றறுத்தல்) எனும் ஆயுதம் கொண்டு பல்லாயிரம் மன்னர்களை (எண்ணங்களை) கொன்று குவித்த ராமர் - பரசுராமர்.

எண்ணங்களை எவ்வாறு வெட்டிச் சாய்ப்பது? "ஒவ்வொரு எண்ணம் கிளம்பும் போதும் அதை பின்பற்றி செல்லாமல், 'இந்த எண்ணம் யாருக்கு தோன்றியது?' என்று கவனித்தால், மனம் மீண்டும் தனது பிறப்பிடத்திற்கு திரும்பிவிடும். எழுந்த எண்ணமும் கவனிப்பாரின்மையால் அடங்கிவிடும்." என்பது பகவானது வாக்கு. அதாவது, எண்ணங்களை பற்றிக் கொள்ளாமலிருக்கவேண்டும்.

7. இராமர் திருவிறக்கம்

வரலாறும் மெய்யியலும் பின்னிப் பிணைந்துள்ள கதை. மெய்யியல் அடிப்படையில் இராவணன் என்பது ஐம்புலன்களையும், ஐங்கருவிகளையும் கொண்டியங்கும் நிலையற்ற மனமாகும் (மனதுடன் உடல் உலகக்காட்சிகளையும் இணைத்துக் கொள்ளலாம்). இந்த மனதை அழித்தால் நாம் இழந்த நமது குளுமையை (சீதை, Coolness) மீண்டும் பெறலாம்.

மனதை எவ்வாறு அழிப்பது? மனமென்றால் என்னவென்று ஆராய்ந்து, அதன் இயல்பை அறிந்துகொள்வதே அதை அழிப்பதாகும். மனமழிந்த பின் - மெய்யறிவு கிடைத்த பின் - நமக்கு கிடைப்பது குளுமை மட்டுமே. வேறெதுவும் புதிதாக கிடைத்துவிடாது. எதுவும் நம்மை விட்டகலாது. ஆனால், இப்போது எதுவும் நம்மை பாதிக்காது.

8 & 9. பலராமர் & கண்ணன் திருவிறக்கங்கள்

கண்ணபிரான் திருவிறக்கத்தை தனியாக அணுகமுடியும். ஆனால், பலராம திருவிறக்கத்தை தனியாக அணுகமுடியாது. பிரானோடு இணைத்துத்தான் பொருள் காணமுடியும்.

மீன், பன்றி & பலராம திருவிறக்கங்கள் ஒன்றுதாம். மீனில், கடலுக்குள் மீன் ஆழ்ந்து செல்லும். பன்றியில், மண்ணை பன்றி நோண்டும். பலராமரில், மண்ணை பலராமர் உழுவார் (பண்படுத்துவார்).

மீன் & பன்றி கதைகளில், அவைகளே மெய்யறிவைப் பெற்றுவரும் (மீன் - திருமறைகள், பன்றி - அன்னை பூமா). இங்கு, பலராமருக்கு பின்னர் கண்ணன் (மெய்யறிவு) தோன்றுவார்.

பகவான் போன்ற ஒரு சில மெய்யறிவாளர்களே, மெய்யறிவு பெற்றது முதல், உலகக் காட்சியினால் (மாயையால்) பாதிப்படையாமல் இருந்துவிடுகின்றனர். பலருக்கு பெரும் போராட்டம்தான்! இந்த போராட்டத்தையே பலராமரும் கண்ணபிரானும் இணைந்து கம்சனோடு (உலகக் காட்சியோடு) மோதி வீழ்த்தினர் என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

(கண்ணபிரானின் கதைக்குள் பல செய்திகளை பதிவு செய்துள்ளனர். இந்த ஒரு திருவிறக்கத்தை ஆழ்ந்து கற்றுணர்ந்தாலே போதுமானதாகும்.)

10. கல்கித் திருவிறக்கம்

இந்த திருவிறக்கத்தை இரு விதமாக அணுகலாம்: இனி தோன்றப்போகும் நுட்பம் மற்றும் விடா முயற்சி.

🌷 விடா முயற்சி

வெற்றிவாகை சூடி, கோலோச்சிக் கொண்டிருக்கும் எந்த கொடூரனும் அவ்வளவு எளிதில் தோல்வியடைய விரும்புவதில்லை. இவ்வாறே இவ்வளவு நாள் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் மாயையும் எளிதில் விலகிச்சென்றுவிடாது. விலகவேண்டிய சமயம் வரும்போது இன்னும் பல மடங்கு பலங்கொண்டு நம்மை தாக்கும். முதலில், நாம் விரும்பியதை, மதிப்பதை தாக்கும். இறுதியில், நமக்கேற்றவாறு உலகை மாற்றிக்கொடுப்பதாகக் கூட மன்றாடும். எதற்கும் சலையாமல், தோன்றும் காட்சிகளை ஒதுக்கித் தள்ளி (கல்கிப் பெருமாளின் கையிலிருக்கும் வாள்), விடாமுயற்சியுடன் (வெண்குதிரை) நமது தன்மையுணர்வை பற்றிக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், வேறு வழியில்லாமல் மாயை மாயமாகும் (உலகக் காட்சிகள் நீங்கிவிடும்).

🌷 இனி தோன்றப்போகும் நுட்பம்

தில்லை கூத்தபிரானின் தூக்கிய இடது பாதம், திருவாலங்காடு இரத்தின சபாபதி பெருமானின் மேல் நோக்கிய இடதுகால், மூலவரை நோக்கியிருக்கும் சிவன்காளை மற்றும் பகவானின் "நான் யார்?" ஆகிய இவை யாவும் உணர்த்தும் தன்னாட்டம் என்ற எளிமையான, சிறப்பான & மேன்மையான நுட்பத்தை விட மேலானதொரு நுட்பம் இனி தோன்றுமா என்று தெரியவில்லை. அப்படி தோன்றி உலகம் செம்மையானால் நல்லதே!

"திரும்பி அகந்தனை தினம் அகக்கண் காண்
தெரியும் என்றனை என் அருணாசலா!!"

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment