Thursday, January 27, 2022

பூசை, வேள்வி & தன்னாட்டம்


பூசை: இறைவனைப் போற்றும் பாடல்களைப் பாடிக் கொண்டும், அவரைப் பற்றிய பொருண்மொழிகளை ஓதிக்கொண்டும் பூ & இலைகளை உடையவர் மீது தூவுவார் பூசாரி.


வேள்வி: பொருண்மொழிகளை ஓதிக்கொண்டு, வேள்விக்குழியில் எரியும் நெருப்பிற்குள் அரசமர சுள்ளி முதலான பொருள்களை இடுவார் புங்கவர்.

மேற்கண்ட இரண்டு செயல்களும் ஒரு வகையில் ஒன்றுதாம். அதென்ன வகை? தன்னாட்டம்!

நமக்கு தோன்றும் எண்ணங்களை (பூக்கள் / அரசமர சுள்ளிகள்) நமது தன்மையுணர்விற்கு (மூலவர் / நெருப்பு / உள்ளபொருள்) காணிக்கையாக்கிக் கொண்டு, அவ்வுணர்வை விட்டு விலகாமல் இருப்பதே தன்னாட்டமாகும்.

நமது தன்மையுணர்வு என்றும் மாறாது & அசையாது. இவ்வகையில் கருவறையிலுள்ள உடையவருக்கு சமமாகிறது. அதுவே அனைத்திற்கும் ஒளி கொடுப்பது. அதிலிருந்தே அனைத்தும் தோன்றுகிறது. அதுவே அனைத்தையும் செரிக்கிறது. இவ்வகையில் வேள்விக்குழியில் எரியும் நெருப்பிற்கு சமமாகிறது.

🌷 பூக்கள் = சுள்ளிகள் = எண்ணங்கள்
🌷 உடையவர் = நெருப்பு = தன்மையுணர்வு
🌷 பூசாரி = புங்கவர் = நாம் (நமது தனித்துவம் / அகந்தை)

எவ்வாறு நமக்கு தோன்றும் எண்ணங்களை நமது தன்மையுணர்விற்கு காணிக்கையாக்குவது?

எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பின் தொடர்ந்து சென்று, நிறைவேற்ற எண்ணாமல், நமது தன்மையுணர்வை இறுகப்பற்றிக் கொண்டிருந்தோமென்றால் எழுந்த எண்ணங்கள் அடங்கிவிடும். இப்படி எண்ணங்கள் எழுந்து அடங்குவதை, உடையவர் மீது தூவப்படும் மலர்களுக்கு சமமாக அல்லது வேள்வித்தீயில் போடப்படும் சுள்ளிகளுக்கு சமமாக கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment