Wednesday, April 29, 2020

சித்திரை திருவாதிரை - ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் திரு ராமானுஜர் பிறந்தநாள்!!

(https://m.dinamalar.com/temple_detail.php?id=104700)

💥 அது என்ன ஆதிசேஷன் அவதாரம்?

பாரம்பரிய விளக்கம்: பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் பாம்பணை ராமானுஜராக உருவெடுத்து வந்து வைணவத்தை நிலைநாட்டியது!! 🥴

ஆதிசேஷன் ஐம்பூதங்களைக் குறிக்கும். அதில் படுத்திருக்கும் பெருமாள் உயிரைக் குறிக்கிறார். அதாவது, இவ்வண்டம் உயிராலும் உயிரற்றவையாலும் ஆனது என்று பொருள். நமது மனம், உடல் முதற்கொண்டு இவ்வண்டத்தில் காணப்படும் அனைத்து உயிரற்ற பொருள்களும் ஆதிசேஷனின் - ஐம்பூதங்களின் - அவதாரங்கள் தான்!! ராமானுஜர் மட்டுமல்ல. பின்னர் ஏன் அவரை மட்டும் தனியாக குறிப்பிட்டார்கள்?

மனிதர்களில் 3 வகை: அகம் சார்ந்தவர்கள், புறம் சார்ந்தவர்கள் மற்றும் அகம்-புறம் சார்ந்தவர்கள்.

அகம் மட்டும் சார்ந்தவர்கள் உணர்வுப்பூர்வமாக இருப்பார்கள். ஆன்மிகம், கலை போன்றவைகளை மட்டும் விரும்புவார்கள். புறம் மட்டும் சார்ந்தவர்கள் உலகியலில் ஆர்வமாக இருப்பார்கள். பொருள் ஈட்டுவது, சொத்து சேர்ப்பது, வேலைகளில் குறியாக இருப்பது போன்றவை தான் இவர்களுக்கு முக்கியம். இரண்டும் சார்ந்தவர்கள் கலவையாக இருப்பார்கள். அகம் மட்டும் சார்ந்தவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாக இருந்தாலும், பொருளீட்ட தெரியாதவர்கள். இருப்பதையும் கரைத்து விடுவார்கள். புறம் மட்டும் சார்ந்தவர்கள் உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் பெற்றிருப்பார்கள். கெட்டிக்காரர்கள். ஆனால், ரசனை இல்லாதவர்கள்; பழகுவதற்கு இனிமையானவர்கள் அல்லர்.

ஒரு எடுத்துக்காட்டு. ஒரு அமெரிக்க பங்கு சந்தை வியாபாரியும் அவரது மனைவியும், ஒரு முழுநிலவன்று கடற்கரைக்குச் சென்றார்களாம். நிலவின் அழகில் மயங்கிய மனைவி, "அந்த நிலவு எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள்!!" என்றாளாம். அதற்கு அந்த வியாபாரி, "அது அழகாக இருந்து என்ன பயன்? அதை வாங்கவோ விற்கவோ முடியாதல்லவா?" என்றானாம்!! 😁 இவர் தான் புறம் மட்டும் சார்ந்தவர். இப்படிப்பட்டவராகத் தான் ராமானுஜர் இருந்திருப்பார். தனது மதத்திற்கு ஆள் சேர்த்தல், மதத்தை நிலை நிறுத்துதல், மேம்படுத்துதல் & பரப்புதல், எதிர் சமயத்தை (சைவத்தை) கண்காணித்தல், ஆராய்தல் & தாக்குதல் போன்றவற்றில் மிக குறியாக இருந்திருப்பார்.

இன்னொரு எடுத்துக்காட்டு. #பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 அகம் மட்டும் சார்ந்தவர். சின்னசுவாமி என்றழைக்கப்பட்ட அவரது இளைய சகோதரர் புறம் மட்டும் சார்ந்தவர். ஆசிரம வளர்ச்சி (கட்டிடங்கள், பொருளாதாரம்...) & பாதுகாப்பு இவை மட்டும்தான் அவருக்கு முக்கியம். ஆனாலும், இவர் இல்லையெனில் திரு ரமணாசிரமம் இன்றிருக்கும் நிலையில் இருந்திருக்காது. இது போன்று, ராமானுஜர் தோன்றாமல் போயிருந்தால் வைணவம் நிலை பெற்றிருக்காது என்று எடுத்துக் கொள்ளலாம்.

(ராமானுஜர் செய்த பணிகளால் மட்டும் வைணவம் நிலைத்து விடவில்லை. பின்னர் வந்த மன்னர்கள் வைணவர்களாக அமைந்துவிட்டதே மிக முக்கிய காரணம். சோழப் பேரரசு மட்டும் இன்னும் மூன்று நூற்றாண்டுகள் வலுவாகத் தொடர்ந்திருந்தால், சைவத்தின், தமிழகத்தின், நம் நாட்டின் தலையெழுத்தே வேறு!! 😍)

💥 திருவனந்தபுரத்திலிருந்து ராமானுஜரை கருடன் தூக்கிவந்து திருக்குறுங்குடிக்கு அருகிலுள்ள திருப்பரிவட்டப்பாறை மேல் கிடத்தியது

வைணவத்தில் கருடன் அறிவைக் குறிக்கும். திருவனந்தபுரத்தில் இருக்கும் போது ராமானுஜர் உணர்ச்சிவயப்பட்டு, மூலவர் திரு அனந்தபத்மநாப பெருமாளுக்கு (அகத்திய மாமுனிவரின் சமாதி 🌺🙏🏽) தனது முறைப்படி பூசைகளை நடத்த நினைத்திருப்பார் / முயற்சித்திருப்பார் / துடித்திருப்பார். பின்னர், ஏதோ காரணத்தால், பொங்கிய உணர்ச்சி அடங்கியிருக்கும் (அல்லது, அடக்கிக்கொண்டிருப்பார்). உணர்ச்சி வயப்படும் போது அறிவு வேலை செய்யாது. உணர்ச்சிக் கொந்தளிப்பு அடங்கியபின் அறிவு வேலை செய்ய ஆரம்பித்திருக்கும். இது தனது இடமல்ல / வேலையல்ல என்றுணர்ந்து, மீண்டும் உணர்ச்சிவயப்படாமல், கவனமாக திருக்குறுங்குடி திரும்பியிருப்பார் (கவனமாக = அறிவுடன்; கருடன் தூக்கி வந்தது என்பது இதுவே). வரும் வழியிலுள்ள பரிவட்டப்பாறையில் அமர்ந்து நடந்தவற்றை நினைத்துப் பார்த்திருப்பார். தவமியற்றி இருப்பார்.

💥 பெருமாளே வடுகநம்பியாக வந்து சேவை செய்தது

அண்ணாமலை சுவாமிகளின் 🌺🙏🏽 வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு என்று நினைவு. நீச்சல் தெரியாத இவர், ஒரு நாள் அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள குளத்தில் குளிக்கும் போது மூழ்க ஆரம்பித்தார். அப்போது ஒரு நபர் குளத்தில் குதித்து, இவரைக் காப்பாற்றி கரைக்கு இழுத்து வந்து விட்டு விட்டுச் சென்றார். பின்னர், தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆசிரமம் திரும்பினார். அப்போது, அங்கு அமர்ந்திருந்த பகவான் உதிர்த்த புன்னகை மற்றும் அவரது பார்வை, "ஓ! இவர் தான் நம்மை காப்பாற்றியிருக்கிறார்!!" என்ற உண்மையை உணர்த்தியது. பெருமாள் வடுகநம்பியாக வந்து சேவை செய்ததும் இது போன்று ராமானுஜர் உள்ளுணர்வால் உணர்ந்த ஒன்றாகத்தான் இருக்கும். இதை, "பெருமாளே வடுகநம்பி உருவத்தில் வந்து..." என்று மிகைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். 😏

ராமானுஜரின் வரலாறு வரல் ஆறல்ல. அவரை சூப்பர்மேனாக காட்ட, ஆச்சார்யார் ஆதிசங்கரர் 🌺🙏🏽 மற்றும் திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽 வரலாறுகளிலிருந்து நிகழ்வுகள் சேர்த்து, நடந்தவையெல்லாம் மிகைப்படுத்தி உருவாக்கப்பட்ட வரலாற்று புதினம்!! நடந்தவற்றை நடந்தவாறே பதிவு செய்தால் போதும். இந்த புவியில் பிறந்து, நியாயமாக வாழ்ந்து, தனது கடமைகளை சரிவர செய்து, வடக்கிருந்து, பிறவிப் பெருங்கடல் தாண்டும் மனிதர்கள் எல்லோருமே சூப்பர்மேன்கள் தான்!!

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment