ஜெய் ஸ்ரீகிருஷ்ணா
ஜெய் ஸ்ரீராமச்சந்திரா
ஜெய் ஸ்ரீலஷ்மிநரசிம்மா
- கொரோனா கிருமியால் இன்று இந்த சொற்றொடர்கள் உலகம் முழுவதுமுள்ள இந்தியர்களிடம் பிரபலமாகிவிட்டது!
இன்று எல்லா தெய்வங்களும் உள்ளபொருளைக் (பரம்பொருளை) குறிப்பதாகக் கொண்டுவிட்டோம். இப்பெயர்களை தற்போது பிரபலபடுத்தியவரும் இந்தப் பொருளில்தான் பயன்படுத்தியிருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால், உண்மையில் இவையனைத்தும் உள்ளபொருளைக் குறிக்கவில்லை!!
அண்டத்தை இரு பொருள்களாக பிரித்தனர் நம் முன்னோர்: உள்ள பொருள் & அல்லாத பொருள்.
🌷 #ஜெய் #ஸ்ரீகிருஷ்ணா - சைவத்தில் உள்ள காளியன்னைக்கு சமமான வைணவ கண்ணபிரான் "அல்லாத பொருளைக்" குறிப்பவர். (மகாபாரத காலத்தில் வாழ்ந்த கண்ணபிரான் 🌺🙏🏽 ஒரு நிறைஞானி. இங்கு இந்த சொற்றொடரில் உள்ள கிருஷ்ணர் என்ற சொல் தத்துவத்தைக் குறிக்கும்.)
🌷 #ஜெய் #ஸ்ரீராமச்சந்திரா - வைணவர்களிடம் மாட்டிக்கொண்டிருந்தாலும் ராமபிரான் உள்ளபொருளைத் தான் குறிக்கிறார். (இராமாயண காவியத்தை, சீதை எனும் மன அமைதியை (குளுமையை) தேடி அலையும் ஆன்மாவின் கதையாக பார்க்கும் போது ராமபிரான் 🌺🙏🏽 உள்ளபொருளாகிறார்.)
🌷 #ஜெய் #ஸ்ரீலஷ்மிநரசிம்மா - திருக்கடவூர் தலவரலாற்றை அடிப்படையாக வைத்து வைணவர்கள் உருவாக்கிய சிங்கப்பெருமாள் உள்ளபொருளைக் குறித்தாலும், இங்கு லட்சுமி அன்னையும் உடன் சேர்வதால், இச்சொற்றொடர் உள்ளபொருளையும் & அல்லாத பொருளையும் குறிக்கிறது.
உள்ளபொருளை உயிர் என்றும், அல்லாத பொருளை மெய் என்றும் வைத்துக் கொண்டால், மேற்கண்ட சொற்றொடர்கள் கீழ்கண்டவாறு மாறும்:
மெய் வெல்லட்டும்!
உயிர் வெல்லட்டும்!!
உயிர்மெய் வெல்லட்டும்!!!
(நம் காது, வாய் போன்ற உறுப்புகளும், மனமும் பழக்கப்படாததால், இச்சொற்றொடர்கள் நம்மைச் சற்று திகைக்க வைக்கும். ஆனால், பழகினால் சரியாகிவிடும் - "வாய்மையே வெல்லும்" & "சத்யமேவ ஜயதே" போன்று. மேலும், இப்படிப் பழகினால் சிந்தனையும் தூண்டப்படும். முட்டாள்தனமும் வளராது.)
உயிர், மெய், உயிர்மெய் - எது முதலில் தோன்றியது? எது பெரியது? எது வலியது? ... எதுவும் ஒன்று என்ற எண்ணிக்கையில் இருக்கும் வரை போட்டி, குழப்பமிருக்காது. இன்னொன்று சேர்ந்துவிட்டால் அவ்வளவு தான். ☺️ இதற்கு பதிலளிக்கிறார் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽:
மும்முதலை எம்மதமும் முற்கொள்ளும் ஓர் முதலே
மும்முதலாய் நிற்கும் என்றும் மும்முதலும் - மும்முதலே
என்னல் அகங்காரம் இருக்குமட்டே யான் கெட்டுத்
தன்னிலையில் நிற்றல் தலை
-- #உள்ளது #நாற்பது, செய்யுள் #3
பொருள்: உயிர், உலகு, கடவுள் என்ற மூன்று பொருட்களையும் எல்லா மதங்களும் முன் வைக்கும். ஒரு பொருளே மூன்று பொருட்களாக தோன்றுகிறது என்று ஒரு மதம் கூறும். இன்னொன்றோ, இந்த மூன்று பொருட்களும் என்றும் அநாதி என்று கூறும். இது போன்ற வாதங்கள் எல்லாம் ஆணவம் என்ற ஒன்று இருக்கும்வரை தான். இவைகளை ஒதுக்கி விட்டு, "நான் இன்னார்" என்ற ஆணவத்தை ஒழித்து, தனது சொரூப நிலையில் (தானே தானாக) நிற்கப் பழகுவதே ஒரு ஆன்ம பயிற்சியாளன் செய்யவேண்டிய தலையாய தவமாகும்!! 🙏🏽
கருணாகர முனி ரமணாரியன் அடிபோற்றி 🌺🙏🏽
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽
No comments:
Post a Comment