Thursday, November 15, 2018

நரகாசுரன் என்பது யார் / என்ன? (தீபாவளி திருநாளின் உண்மை பொருள்)




நரகாசுரன் ஒருவருக்கு பெரும் பாட்டனாராம்! 😛
இன்னொருவருக்கு மாமனிதராம்!! 😜
(1)

அந்நிய & தேசவிரோத சக்திகளின் பொரைகளுக்காக தம் முன்னோர்களின் அரிய செல்வங்களின் மேல் சாணி வீசும் இந்தக் கருங்காலி இனம் இன்னமும் புற்றீசல் போல் பெருகுவது எதனால்?

நமது அறியாமையால் தான்!!

தம்முள் ஆழ்ந்து அரிய பெரும் முத்துக்களை வெளிக்கொணர்ந்த நம் முன்னோர்கள், அவற்றை அப்படியே விட்டுச் சென்றால் தொலைத்து விடுவோம் என்று, கதை என்னும் தங்க உலோகத்தில் அழகுற பதித்து ஆபரணங்களாக விட்டுச் சென்றனர். சுயநலம், பேராசை, உழைப்பின்மை, அநியாயம் போன்ற குணங்களால் அவ்வாபரணங்கள் பொலிவிழந்து, புரூடா என்னும் வகையறாக்களுடன் சேர்க்கப்பட்டுவிட்டன. 😔

🌺🌺🌺

#தீபாவளி என்பது மனிதராயிருந்த கிருஷ்ணர், பகவான் ஸ்ரீகிருஷ்ணராக மாறிய நாள். 🌸🙏 அதாவது. #ஸ்ரீகிருஷ்ணர் மெய்யறிவு பெற்ற (ஞானமடைந்த) நாள். புத்த பகவான் மெய்யறிவு பெற்ற நாளை புத்த பூர்ணிமா என்று கொண்டாடப்படுவது போன்றதுதான் இந்த தீபாவளியும். புத்த பகவானை ஒரு ஞானியாக பார்க்க வைத்தனர். ஆனால், ஸ்ரீகிருஷ்ணரை ஒரு கடவுளாக பார்க்கப் பழக்கிவிட்டனர். மேலும், ஸ்ரீகிருஷ்ணர் பெரும் புகழ் பெற்றவராகத் திகழ்ந்ததால், அவரது வரலாற்றினுள் தத்துவம், ஆன்மிகம், வரலாறு என பலவற்றையும் சேர்த்துவிட்டனர். அவரவர் சொல்ல வந்ததையும் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னதாக தள்ளிவிட்டனர். இதனால் தான் இவ்வளவு குழப்பங்களும் & அறியாமையும் நம்மிடம் வேர்விட்டுள்ளன.

சாதாரணமாக, நரகாசூரன் எனில் "நரகம் போன்ற இந்த உடல்" என்று பொருள் கொள்வோம். இது தவறு. நம் உடலோ அல்லது நம் உடலைச் சுற்றி அமைவனவோ நரகமல்ல. அல்லது, "இந்த உடலில் இயங்கும் மனம்" என்று பொருள் கொள்வோம். இதுவும் தவறே. "நானாவித எண்ணங்களின் தொகுப்பே மனம்." என்று அருளியிருக்கிறார் #பகவான் #ஸ்ரீரமணர்.

பின்னர், எது நரகாசூரன் எனில் "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணமேயாகும்!! அனைத்து துன்பங்களுக்கும் இதுவே காரணம். மனம் என்கிற எண்ணக் கூட்டத்திற்கு இதுவே அடித்தளம். இவ்வெண்ணம் அழிய - நரகாசூரன் அழிய - மேகங்கள் அகல பகலவன் வெளிப்படுவது போல் மெய்யறிவு (ஞானம்) வெளிப்படும். இச்சமயம் எல்லையில்லா பெருமகிழ்ச்சி (ஆனந்தம்) ஏற்படும். இதுவே தீபாவளி.

இந்த மெய்யறிவைப் போராடிப் பெற்றிருக்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். இதோடு நிற்காமல், "இவ்வளவு தான் மெய்யறிவு" என்று உலகுக்கும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். 👌 ஆகையால் தான் இன்று வரை பெரிதும் புகழப்படுகிறார். அவரது வாழ்வில் நடந்த மற்ற நிகழ்வுகளை விட, அவர் மெய்யறிவு பெற்ற நாளும், அவர் வெளிப்படுத்திய மெய்யறிவின் தன்மையும் இன்று வரை தீபாவளி திருநாள் என்ற வடிவில் நினைவு கூறப்படுகிறது.

🌺🌺🌺

இனி, தீபாவளி கதைக்குள் நுழைவோம் (#காஞ்சி #சங்கராச்சார்யார் #ஸ்ரீசந்திரசேகரேந்திர #சரசுவதி சுவாமிகள் 🙏 சொல்லிய கதையை எடுத்துக் கொண்டுள்ளேன்)

#பன்றி #அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும், பூமித்தாய்க்கும் பிறந்தவர் நரகாசூரன் என்று கதை ஆரம்பிக்கும். பன்றியின் பல் பட்ட இடம் #பிராக்ஜோதிஸ்பூர் - இன்றைய கவுகாத்தி, அஸ்ஸாம். இது ஒரு புவியியல் நிகழ்வைக் குறிக்கும். நம் பாரத துணைக்கண்டம், ஆசிய கண்டத்தோடு மோதியதன் விளைவாக இமயமலை உருவானது. அப்படி முதன்முதலாக மோதி உயர்ந்த பகுதியே இந்த பிராக்ஜோதிஸ்பூர். எத்தனையோ இலட்சம் வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வை, நரகாசூரன் கதையில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். (இது நமக்கு பிரமிப்பைத் தராது. 😏 ஏனெனில், யார் தலையிலும் ஆப்பிள் விழவில்லை. 😀 யாரும் பிறந்த மேனியாக குளியல் தொட்டியிலிருந்து எழுந்து "யுரேகா! யுரேகா!!" என்று கத்திக் கொண்டு ஓடவில்லை. 😁)

நம் உடல் உணவிலிருந்து பிறந்தது (ஆரியத்தில் உணவை #ஆகாரம் என்பர். ஆகாரம் - ஆ + காரம். ஆ - பசு - சீவன். காரம் - உடல். ஆகாரம் - சீவனின் உடலாக மாறுவது.). உணவு பூமியிலிருந்து பிறந்தது (தாவரங்கள் அல்லது தாவரங்களை உண்ட விலங்குகள்). ஆக, நம் உடல் பூமியின் அம்சமாகிறது. இந்த உடலை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் உயிர் (சீவன்) பரமனின் (மகாவிஷ்ணுவின்) அம்சமாகிறது. இவ்விரண்டையும் இணைப்பது "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம் (பாலைவன மதங்களில் #முதல் #பாவம் (#First #Sin) என்றழைக்கப்படுவதும் இது தான் (2)). உயிர் உடலுக்குள் குடியேறியவுடன் இந்த எண்ணம் தோன்றிவிடும் (இவ்வெண்ணமே மனதின் ஆணிவேர்). ஆகையால், இவ்வெண்ணம் உயிருக்கும், உடலுக்கும் பிறந்த பிள்ளை என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

உடலின் மூலம் வரும் பல்வேறு இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சீவன், ஒரு சமயத்தில், அது செய்த நல்வினைகளின் பயனால் தகுந்த மெய்யாசிரியரைப் பெறும் (ஆசிரியர் என்பவர் மனிதராகவோ, சொற்றொடராகவோ, சொல்லாகவோ, குறியீடாகாவோ, நிகழ்வாகவோ, நினைவாகவோ இருக்கலாம்). தான் சிறைபட்டிருப்பதை உணரும். சிறையிலிருந்து விடுபடப் போராடும். போராட ஆற்றல் தேவை. இதைத் தான் ஸ்ரீகிருஷ்ணர் சத்தியபாமாவின் துணையோடு நரகாசூரனுடன் போரிட்டார் என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

எவ்வாறு எவ்வளவு துரத்தினாலும் மாலை வெயிலால் ஏற்படும் நம் நிழலை நம்மால் பிடிக்க முடியாதோ, அவ்வாறே எவ்வளவு போரிட்டாலும் சீவனால் "நான் இவ்வுடல்" என்ற எண்ணெத்தை அழிக்க முடியாது. ஒரு சமயத்தில் தன் இயலாமையை உணரவும் செய்யும். அச்சமயம் திருவருள் துணைபுரியும். இதற்கு முன்னர் தான் கேட்டிருந்த / படித்திருந்த தனது மெய்யாசிரியரின் அறிவுரை நினைவுக்கு வரும். மாலை வெயில் நிழலை பிடிக்க தான் செய்ய வேண்டியதெல்லாம் தனது கையை தன் மேல் வைப்பதே என்று உணரும். "நான் இவ்வுடல்" என்ற எண்ணெத்தை அழிக்க தான் செய்ய வேண்டியதெல்லாம் தன் கவன ஆற்றலை தன் மீதே திருப்பி தானாய் இருப்பதே என்பதை உணர்ந்து, அதன் படி செய்து, மெய்யறிவு பெற்று அமைதியுறும் (பாலைவன மதங்கள் இதை #RIP - #Rest #in #Peace என்றழைக்கின்றன (2)). இவ்வாறு ஒரு நினைவால் மனமழிந்து, மெய்யறிவு ஏற்படுவதைத் தான், ஸ்ரீகிருஷ்ணர் (சீவன்) காயமுற்று ஓய்ந்து போக, சத்தியபாமா (நினைவு) நரகாசூரனை வீழ்த்தினார் என்று உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

(இந்த விளக்கம் தீபாவளி கதைக்கு மட்டுமே பொருந்தும். மற்றொரு கதையை இதோடு இணைத்துப் பார்க்கக் கூடாது. (எ.கா.: ஸ்ரீகிருஷ்ணரும், ஸ்ரீபலராமரும் சேர்ந்து கம்சனைக் கொல்லுதல்.) மெய்யறிவு பெறுதல் என்ற நிகழ்வை ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதமாக உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உணர்ந்ததை கதைகளாக, பாடல்களாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும். ஒன்றோடு மற்றொன்றை இணைத்துப் பார்த்துக் குழப்பிக் கொள்ளலாகாது.)

மனமழிந்த பின் நம்மைப் பற்றிய புதிய தெளிவும், உடன் பெரு மகிழ்ச்சியும் வெளிப்படும். இதன் பின்னர் பேரமைதி குடிகொள்ளும். "எல்லாம் எம்பெருமானின் திருநடனம்" என்ற வரியின் உண்மை உணரப்படும். அவ்வளவே. இந்தக் கதையில் வருவது போன்று, நரகாசூரன் தனது தாய் சத்யபாமாவிடம் தனது இறப்பைக் கொண்டாடச் சொல்லி கோரிக்கை விடுத்தது போல எதுவும் நடக்காது. தீயவனும் திருந்துவான்; திருந்தவேண்டும்; அப்படி திருந்த மற்றவர்கள் வாய்ப்பளிக்க வேண்டும்; ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என்று உலகம் மேம்பட வேண்டி அப்படி எழுதியிருக்கிறார்கள்.

🌺🌺🌺

ஸ்ரீகிருஷ்ணரின் மெய்யறிவு நிகழ்வோடு, நமது #கார்த்திகை தீபத்திருநாளையும் சேர்த்துக் கொண்டனர் வடக்கத்தியர்கள். நமது கார்த்திகை பெருவிழா அவ்வளவு சிறப்பு பெற்றதும், பொருள் பொதிந்ததுமாகும்.

விஜயநகரப் பேரரசின் பிரதிநிதிகளாக இங்கு வந்து சேர்ந்த நாயக்க மன்னர்களில் புகழ் பெற்றவரான #திருமலை #நாயக்கர் காலத்தில் தான் தமிழகத்தில் தீபாவளி அறிமுகப்படுத்தப்பட்டது.

🌺🌺🌺

தீபாவளியன்று கடைபிடிக்கப்படும் இன்னொரு பாரம்பரியம்: தெரிந்தவரைக் சந்தித்தால், "#கங்கையில் #குளித்துவிட்டீரா?" (#கங்கா #ஸ்நானம் #ஆச்சா ?) என்று கேட்பது.

இதன் பொருள்: மெய்யறிவு பெற்றீரா?

உண்மையான கங்கை நீரில் மூழ்குவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மனமழிந்து, மெய்யறிவு பெற்றவுடன், நம்மைப் பற்றிய புதிய தெளிவும், உடன் பெருமகிழ்ச்சியும் வெளிப்படும் என்று பார்த்தோம். இந்த மகிழ்ச்சியின் போது நமது உச்சந்தலையிலுள்ள #பிட்டியூட்டரி #சுரப்பி அபரிமிதமாக சுரக்கும். இந்த நீரே கங்கை நீர். இந்நீர் நம் உடலிலுள்ள மற்ற சுரப்பிகளை நன்றாக இயக்கவைக்கும். அனைத்துச் சுரப்பிகளும் நன்றாக இயங்கினால் உடலியக்கம் சீராகும்; மேம்படும். இதனாலும் ஒரு குதூகலம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். (இவற்றை சிவபெருமான் கண்மூடி தவமிருப்பது போன்ற உருவத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். கண்மூடி தவமிருக்கும் சிவன் - மெய்யறிவில் நிலைபெற்றிருக்கும் மெய்யறிவாளரைக் (ஞானியை) குறிக்கும். எ. கா.: பகவான் ஸ்ரீரமணர். சிவனின் உருவத்தில் இருப்பவை, ஒரு ஞானியிடம் காணப்படும் குணங்களாகும்.)

இவ்வளவு விரிவாக கேட்கவியலாது என்பதாலும், நேரடியாக "மெய்யறிவு பெற்றீரா?" என்று கேட்பது நாகரீகமன்று என்பதாலும், மெய்யறிவு கிடைக்கப் பெற்றவுடன் ஏற்படும் விளைவைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். 👌

🌺🌺🌺

"ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்த 
ஞானம் விரைவினில் எய்துவாய்'' - எனத் 
தேனி லினிய குரலிலே - கண்ணன் 
செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டை 
ஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன் 
ஏகி மறைந்தது கண்டிலேன்; - அறி 
வான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன் 
ஆட லுலகென நான் கண்டேன்!

மகாகவிஞர் பாரதியார் 🙏

யான் அற்று இயல்வது தேரின் எது அது
தான் நல்தவம் என்றான் உந்தீபற
தானாம் ரமணேசன் உந்தீபற

பகவான் ஸ்ரீரமணர் 🌸🙏

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

🌺🌺🌺

குறிப்புக்கள்:

1. அசுரன் என்றால் மாமனிதன் என்று அரிய பொருள் கண்டுபிடித்த இந்த புண்ணாக்கு கருங்காலிகள், சூரசம்ஹார திருவிழாவோடு தொடர்புடைய சூரனுக்கு என்ன பொருள் சொல்வார்கள்? மகாகுடிகாரன் என்றா? 😂😂

#அசுரன் என்பது அசு (உயிர்) + ர (ஆசை / பற்று) என்று ஆரியத்தில் பிரியும். எனில், உயிரற்ற உலகின் மேல் பற்று வைத்திருக்கின்ற அல்லது மெய்யறிவு பெறாத சீவன்.

#சூரன் என்பது சூ (தந்தை) + ர (ஆசை / பற்று) என்று ஆரியத்தில் பிரியும். எனில், உயிரற்ற உலகின் மேல் பற்று ஏற்படக் காரணமானவை அல்லது பற்றைத் தோற்றுவிப்பவை. எது நம்மை பற்று வைக்கத் தூண்டுகிறது? ஆணவம், கர்வம் என்று பொதுவாக பதில் சொல்வார்கள். சரியான பதில்: "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இந்த ஆணி வேரிலிருந்து தான் அனைத்து மலங்களும் தோன்றி, இதிலேயே நிலை பெற்று, பல்கிப் பெருகுகின்றன.

2. பாலைவன மதங்கள் எல்லாம் நம்மிடம் இருந்துதான் உருவானவை. ஒருவர் வந்து தெரிந்து கொண்டு போனார். இன்னொருவர் இருந்த இடத்தில் பெரிய சிவாலயமே இருந்தது. இவர்களைப் பின்பற்றியவர்கள் மூடர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் அமைந்துவிட்டதால் "சமயங்களாக" (சமயம் - நல்ல வேளை; சமைதல் - பக்குவம் அடைதல்; சமைத்தல் - உண்பதற்கு ஏற்றவாறு மாற்றுதல்) வளராமல் "மதங்களாக" (வெறி) வளர்ந்துவிட்டன. "ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு திருமணத்தை செய்" என்பது "ஆயிரம் பொய்களை சொல்லி ஒரு திருமணத்தை செய்" என்று திரிந்தது போல் நமது பேருண்மைகள் இந்த மதங்களில் உருத்தெரியாமல் கொடூரமாய் திரிந்து போய்விட்டன.

posted from Bloggeroid

No comments:

Post a Comment