அன்னபூரணி என்ற பெயர் கொண்ட உருசியப்பெண், தனது ஆயருடன், அஜ்மீர் (இராஜஸ்தான்) நகரில், தங்களை சுற்றி 9 நெருப்பு மூட்டி, அதற்கிடையே அமர்ந்து, ஞாலம் அமைதியடைவதற்காக கடுமையாக வடக்கிருக்கிறாராம். இதற்கு முன்னர், இதே குறிக்கோளுக்காக, சில வாரங்களுக்கு ஒற்றைக்காலில் நின்று வடக்கிருந்தாராம்.
இவை போன்ற கடுமையான செயல்களால், அவருக்கு புகழ் கிட்டலாம். வசதி, வாய்ப்புகள் & தொல்லைகள் பெருகலாம். வேறெதுவும் நடக்காது!
🌷 ஒற்றைக்காலில் வடக்கிருத்தல்:
அகமென்பது ஒரு கால். புறமென்பது இன்னொரு கால். ஆனாலும், ஒற்றைக்கால் என்பது அகத்தை மட்டுமே குறிக்கும். ஒற்றைக்காலில் நிற்பது, அதாவது, அகத்தில் நிற்பதென்பது தன்மையுணர்வாக மட்டும் இருப்பதாகும்.
🌷 9 நெருப்புகளுக்கிடையே வடக்கிருத்தல்:
9 நெருப்பு = 9 துளைகள் = நமதுடல்!
நம் உடலிலுள்ள துளைகள் வழியாக உள்ளே வரும் ஒவ்வொரு தரவும், நம்மை எப்படியெல்லாம் படுத்துகிறது என்பது எல்லோருக்கும் கண்கூடாகும். எனவே ஒவ்வொரு துளையும் ஒரு நெருப்பாகிறது.
9 நெருப்புக்கு பதிலாக, நண்பகல் வெயிலில், 4 பக்கமும் நெருப்பு மூட்டி, நடுவே அமர்ந்து வடக்கிருந்தால்:
4 நெருப்பு + பகலவன் எனும் நெருப்பு = 5 நெருப்பு = 5 புலன்கள் = நமதுடல்!
இங்கு, துளைகளுக்கு பதிலாக புலன்கள். மற்றபடி, துளைகளுக்கு பார்த்த அதே விளக்கம் புலன்களுக்கும் பொருந்தும்.
5 / 9 நெருப்புக்கிடையே அமர்ந்து வடக்கிருத்தல் = உடலிலிருந்து கொண்டு வடக்கிருத்தல்.
எனில், அன்றாட வாழ்வை வடக்கிருத்தல் போல அணுகுதல். அதாவது, வருவதை வரவிட்டு, போவது போக விட்டு, தன்மையுணர்வை விட்டு விலகாதிருத்தல்.
இவ்வாறிருப்பதாலோ, அல்லது, மேற்கண்டவாறு ஒற்றைக்காலில் நிற்பதாலோ என்ன கிட்டும்? நம்மை பற்றிய அறிவு (மெய்யறிவு) கிட்டும். அதை இறுகப் பற்றினால் வீடுபேறு கிட்டும். அதாவது, நமக்கு அமைதி கிட்டும். ஆனால், ஞாலத்திற்கு அமைதி கிட்டுமா?
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment