🌷 தீபாவளி - திரு கண்ண பெருமான் மெய்யறிவு அடைந்த திருநாள்.
🌷 "நான் இவ்வுடல்" என்ற எண்ணமே நரகாசுரன். இதையுணர்ந்து, அவ்வெண்ணத்தை விட்டொழித்தலே விடுதலையாகும் (தீபாவளியாகும்).
🌷 தமிழ்நாட்டில் தீபாவளி அறிமுகப்படுத்தப்பட்டது திருமலை நாயக்கரின் ஆட்சிப் பொழுதில் (பொ.ஆ. 1623-59). அதற்கு முன்னர், இங்கு, கொண்டாடப்படவில்லை.
🌷 நாம மதத் திருவிழாக்களில், தீபாவளி மட்டுமே மெய்யறிவை போற்றும். மற்றவை... தூற்றும்! (எ.கா.: கண்ணன் பிறந்தநாளன்று வரையப்படும் கண்ணனின் காலடிச்சுவடுகள் - வெண்ணெய் திருடிய கண்ணன் - மெய்யறிவை திருடிய மனம்!) இதையுணர்ந்து கொள்ள ஒரு சிறிய எடுத்துக்காட்டு:
🔸 திருநெறி திருக்கோயில்களில் திருநீறு தருவார்கள். நாம விகாரைகளில் நீர் தருவார்கள்.
🔸 திருநீறு - திண்பொருள் - நிலைபேறு.
நீர் - நீர்மப்பொருள் - அலைபேறு.
🔸 நிலைபேறு - மனதை அழி. பற்றுகளை அறு. பிறவியறு.
🔸 அலைபேறு - மனதை அலைய விடு. பற்றுகளை சேர்த்துக்கொள். பிறவியெடு.
🌷 மொத்த நாம மதமே மெய்யறிவுக்கு எதிரானதாக இருந்தும், அவர்களுக்கேற்ற தெலுங்கு நாயக்க மன்னர்களின் ஆட்சி நடந்தும், ஏன் மெய்யறிவை போற்றும் தீபாவளியை அறிமுகப்படுத்தினார்கள்?
ஏனெனில், இது மெய்யறிவுத் திருமண்ணாகும்!
அப்போது, 300 ஆண்டுகளுக்கு மேலாக தமிழரல்லாதோர் ஆட்சி நடந்தும், ஊராட்சி அமைப்புகளுக்குள் அசுரர்கள் வெகுவாக நுழைந்திருந்தும், வளங்கொழிக்கும் தொழில்கள் தெலுங்கர்களிடம் சென்றதால் வருமானம் சரிந்திருந்தும், தொல் தமிழரிடம் பண்பாடு சரிந்திருக்கவில்லை! கொள்கைகள் நீர்த்துப் போகவில்லை!! அவ்வளவு உரமேறிய திருமண்ணாக விளங்கியது தமிழ் திருநிலம்!!!
("முதலில், நமது இனத்தவரான கண்ண பெருமானை வைத்து, நம்மை நிலை நிறுத்திக் கொள்வோம். நமது 'கொள்கைகளை' பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்பது நாமாசுரர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கவேண்டும். 😏)
🌷 திருவிழா முடிவாகிவிட்டது. மன்னரின் ஆதரவும் கிடைத்துவிட்டது. பட்டாசு, புதுத்துணி, இனிப்பு என்று மக்களை கவரும் நுட்பங்களும் சேர்த்தாகிவிட்டது. ஆனாலும், "மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?" என்ற ஐயம் இருந்திருக்கிறது. எனவே, "கங்கையில் குளித்தீரா?" என்ற திருநெறியின் கூறு ஒன்றை சேர்க்கிறார்கள்!
கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) = மெய்யறிவு பெற்றீரா?
குளிர்ந்த கங்கை நீரில், முதன் முதலாக முழுகும் போது, ஓரிரு நொடிகளுக்கு உடல் மரத்துப்போகும். ஆனால், நான் எனும் நமது தன்மையுணர்வு மரத்துப்போகாமல் விழிப்புடனிருக்கும். இது, "நாம் உடலல்ல" என்ற உண்மையை உணருவதற்கு ஓர் எளிய வழியாகும்.
🌷 நமது விளக்கீடு திருவிழாவைப் போன்று, தீபாவளியின் போது வடவர்கள் இல்லந்தோறும் விளக்கேற்றுவார்கள்.
விளக்கீடின் போது, திருவண்ணாமலையின் முகட்டில் (அசுரத்தில், உச்சியில்) விளக்கேற்றுவார்கள். அதைக் கண்டதும், சுற்றுப்புறங்களிலுள்ள மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றுவார்கள். இக்காட்சியை திருவண்ணாமலை மீதிருந்து கண்டால், விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதில் மனதை பறிகொடுத்த வடவர்கள், விளக்கிடுதலை அவர்களது தீபாவளியோடு இணைத்துக் கொண்டார்கள். ஆனால், இது தவறாகும்!
🙏🏽 கண்ண பெருமான் உணர்ந்த பேருண்மை: நான் இவ்வுடல் என்ற எண்ணமே நரகம். அதை விட்டொழித்தலே விடுதலை.
🙏🏽 திரு இடைக்காடர் உணர்ந்த பேருண்மை: உயிரிகள் பல்வேறு வகையாக தோன்றினாலும், எண்ணற்றவையாக தோன்றினாலும், அவர்களுக்குள் இருக்கும் நான் என்ற தன்மையுணர்வு ஒன்றுதான். (எரியும் விளக்குகள் பல்வேறு வகையாக இருந்தாலும், எண்ணற்றவையாக இருந்தாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான்.)
இரண்டு பேருண்மைகளும் ஒன்றல்ல. இரண்டையும் இணைப்பது சரியல்ல.
oOo
தமிழர்கள், ஒரு பெருமான் மெய்யறிவு பெற்ற திருநாளை கொண்டாட வேண்டுமெனில், அது திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருநாளாகத்தான் இருக்கவேண்டும். அப்பெருமான் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், மூன்றாவது அகவையில் அவர் மெய்யறிவு பெற்றிருக்காவிட்டால்... திருநெறியத் தமிழரது மொழியும், சமயமும், வாழ்வியலும், வரலாறும் & அருமைப் பெருமைகளும் என்றோ வடவர்களால் மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கும்!
இதையுணர்ந்ததால்தான், திரு வள்ளற்பெருமான், தனது வழிகாட்டி நூலாக திருவாசகத்தை கொண்டிருந்தாலும், தனது மெய்யாயராக திருவாதவூர் அடிகளாரை கொள்ளாமல், திரு சீர்காழி பிள்ளையாரை கொண்டார்.
oOo
தமிழர்களுக்கு தீபாவளி என்பது திரு காழியூர் பிள்ளையாரின் திருநாள் எனில், வையகத்திற்கு... பகவான் திரு இரமண மாமுனிவரின் திருநாளாகும்!
கடந்த ஒரு நூற்றாண்டில், வையகம் முழுவதும், பிறவிப் பெருங்கடல் நீந்தியோரை அணுக முடிந்தால், அவர்கள் அனைவரிடமும் "பகவான்" என்ற ஒரு பொது கூறு (factor) இருக்கும். இனிவரும் நாட்களில், "பகவானின்றி கிட்டாது வீடுபேறு" என்று கூறுமளவிற்கு அவரது திருச்சொற்கள், மெய்யியலுக்கு இன்றியமையாததாக இருக்கும்.
தொன்று தொட்டு, வையகம் முழுவதும் எண்ணற்ற பெருமான்கள் அவ்வப்போது தோன்றி, நல்வழி காட்டியிருந்தாலும், குறுகிய கண்ணோட்டம் கொண்ட நரகாசுரக்கூட்டங்களால் மீண்டும் மீண்டும் இவ்வையகம் குப்பைத்தொட்டியாகிவிடும்! இம்முறை அத்தகைய கூட்டங்களிடமிருந்து நம்மை காக்கவும், அக்கூட்டங்களின் வேரறுக்கவும், இனி எவரும் எப்போதும் "மீகாமன் இல்லா மாகாற்று அலைகலம்"- ஆகாமலும் காக்கப்போவது பகவானிடமிருந்து வெளிப்பட்ட திருச்சொற்களாகும்!
இத்தகைய பெருமான் நம் மண்ணில் பிறந்து, தென்தமிழை விரும்பி, தூய தமிழில் இரண்டன்மை (அசுரத்தில், அத்துவைதம்) பற்றிய நூலில்லை என்ற குறையை போக்கி, மெய்யியல் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, பலரையும் கரையேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது...
தெக்கணமும் அதிற்சிறந்த நற்றமிழ்நாடே
என்றும் செம்பொருள் விரும்பும் திருநாடு
... என்பதற்கு இன்னொரு சான்றாகும்!
oOOo
தமிழே நிறைமொழி, மறைமொழி & இறைமொழி! 🙏🏽💪🏽
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
No comments:
Post a Comment