Monday, July 29, 2024

பிறப்பென்னும் பேதமை நீங்க சிறப்பென்னும் நல்-"இறப்பு" நல்லதே!!


"உயிரோடிருக்கும்போதே ஒரு மனிதர் தனது இறப்பை பற்றி பேசுவது நல்லதல்ல. இறப்பு என்பதே கெட்ட சொல்லாகும்." என்று ஒரு நண்பர் சொல்ல, அவருக்கு நான் கொடுத்த விளக்கங்களை தொகுத்து பின்வரும் இடுகையாக மாற்றியிருக்கிறேன் 🙏🏽:

🌷 பழந்தமிழரைப் பொறுத்தவரை இறப்பென்பது நல்ல நிகழ்வாகும்! இன்றும், திருநெல்வேலிப் பக்கத்தை சேர்ந்த சிலர், ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டால், "என்னலே, நீ இன்னும் சாவலையா?" என்று கேட்டுக் கொள்வார்களாம்!! 😃 "நீ இன்னும் மெய்யறிவு பெறவில்லையா?" என்பது உட்பொருளாகும்.

🌷 "இவ்வையகத்தில் பிறப்பதே இறப்பாகும். தன்மையுணர்வில் நிலைபெறுவதே (வீடுபேறு) உண்மையான பிறப்பாகும்." என்று அருளியிருக்கிறார் பகவான் திரு இரமண மாமுனிவர். எனில், இங்கு இறந்தால்தான் அங்கு பிறக்கமுடியும். இதனடிப்படையில் கேட்கப்படும் கேள்விதான், "நீ இன்னும் சாவலையா?"!

🌷 இறந்து பிறப்பதற்காகவே, அதாவது, தன்மையுணர்வில் நிலைபெறுவதற்காகவே, அதாவது, வடக்கிருப்பதற்காகவே, ஒவ்வொரு ஊருக்கும் வெளியே ஒரு பகுதியை ஒதுக்கியிருந்தனர் நம் முன்னோர்கள். மன்னர் முதல் குடியானவன் வரை அங்கு வடக்கிருந்து, உடல் துறந்தனர் (உயிர் துறக்க அல்ல! உடல் துறக்க!!). அப்படி வடக்கிருந்தோர், தம்முள்ளிருந்து வெளிக்கொணர்ந்த அரிய முத்துகளே திருமறைகளின் ஆரண்யப் பகுதியாகும். (திருமறைகள் முழுவதும் அசுர இனத்தின் உழைப்பல்ல. ஒன்று அசுரத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாலேயே, அது அசுரர்களின் சொத்தாகிவிடாது.)

🌷 வடக்கிருக்கும் நற்செயலை நம்மிடமிருந்து கற்றுக்கொண்ட வடவர்களில் ஒரு பிரிவினரான சமணர்கள், இன்றுவரை, "சல்லேகனை" என்ற பெயரில் அதை கடைபிடித்து வருகின்றனர். (நம்மிடம் உளுத்தறிவு வளர்ந்துவிட்டதாலும், கல், செம்பு, பித்தளை, மரம் என கண்டதையும் வணங்கி, 'மம' மட்டும் சொல்லும் மேலான மடையர்களாகிவிட்டதாலும், அவ்வழக்கத்தை நாம் விட்டுவிட்டோம். 😏)


🌷 இறப்பு ஊர்வலத்தின்போது, தாரைத் தப்பட்டையுடன் ஆடிப்பாடி, வெடிவைத்து, கொண்டாடி மகிழும் ஒரேயினம், வையகத்தில், தமிழினமாகத்தான் இருக்கும்! இது, "பிறவி / வையகம் எனும் சிறையிலிருந்து எங்கள் ஆள் விடுபட்டுவிட்டார்" என்ற பெருமகிழ்ச்சியின் வெளிப்பாடாகும்!

🌷 இறத்தல், இறைவன் ஆகிய இரண்டு சொற்களுமே "இற" என்ற வேரிலிருந்து பிறக்கின்றன. "புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்" என்ற சொற்றொடர் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது (புலவரையும் கடந்த புகழ்...). அதாவது, இற என்ற சொல்லின் அடிப்படை பொருள்: கட.

இறத்தல் - கடத்தல். பிறவிப் பெருங்கடலை கடத்தல்.

🌷 ஓர் இறப்பு நிகழ்வுதான், வேங்கடராமன் என்ற எளிய சிறுவனை, பகவான் திரு இரமண மாமுனிவராக மாற்றியது.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment