Sunday, July 24, 2022

உலக புகழ் பெற்ற சபரிமலை திருக்கோவிலின் 18 படிகள் - சில குறிப்புகள்


மேலுள்ள இணைப்பில், சபரிமலை திருக்கோவிலின் கருவறை திறப்பிற்கு முன்னர், அதன் 18 படிகளுக்கு நடக்கும் பூசையைக் காணலாம். தயவு செய்து, காணொளியை முழுவதுமாகப் பார்த்துவிட்டு இடுகையை தொடரவும். நன்றி. 🙏🏽

oOo

🌷 இக்கோவிலின் நம்பிக்கை "இருமை" ஆகும். அதாவது, படைப்பின் மூலம் இரண்டு பொருள்கள் - அசைவற்றது & அசைவது - என்பது இவர்களது நம்பிக்கையாகும். இதற்கேற்றாற்போல் இருமுடி, ஒவ்வொரு படியிலும் இரு விளக்குகள், அவற்றை ஏற்றுவது இரு பூசாரிகள் என யாவும் இருமையாக உள்ளன. 

🌷 ஆனால், படிகளைக் கடந்து சென்றால் நம் கண்களில் முதலில் தெரிவது "நீயே அது" (தத்வமஸி) என்ற ஆரிய சொற்றொடர். அதாவது, "நீயே உள்ளபொருள்" என்று ஒருமையில் முடித்துவிட்டார்கள்!!

🌷 18 படிகளில் ஏறுவதற்கு தலையாய தகுதி இருமுடியாகும். இருமுடியில் இருக்கவேண்டிய தலையாய பொருள் நெய் தேங்காயாகும்.

🔸 தேங்காய் - மனிதன் (குறிப்பாக, தலை. தலையில்தானே யாவும் இருக்கின்றன & நடைபெறுகின்றன!)

🔸 வெளிப்புறமுள்ள நாறுகள் முழுமையாக நீக்கப்பட்ட தேங்காய் - பற்றுகளை விட்டொழித்த மனிதன்

🔸 தேங்காயினுள் இருக்கும் நீர் - உலகியல் சிந்தனை

🔸 தேங்காயிலிருக்கும் நீரை வெளியேற்றிவிட்டு, நெய் கொண்டு நிரப்புதல் - உலகியல் சிந்தனையை விட்டொழித்து, உள்ளபொருளைப் பற்றி எந்நேரமும் சிந்தித்தல்

🔸 மொத்தத்தில், நெய் தேங்காய் - எந்நேரமும் இறை சிந்தனையில் மூழ்கியிருக்கும் முதிர்ந்த நபர். அதாவது, நெய் தேங்காயை எடுத்துக் கொண்டு 18 படிகளில் ஏறத்தொடங்கும் நபர் இருக்கவேண்டிய நிலை.

🌷 18 படிகள் உணர்த்தும் 36 மெய்ம்மைகள் (தத்துவங்கள்) யாவும் நமதுடலில் இயங்கிக்கொண்டிருப்பவை. எனில், இப்படிகளைக் கொண்ட கட்டுமலை நமதுடலுக்கு சமமாகும். படிகளை கடந்து கருவறையை அடைவதென்பது உடலை தாண்டி, இறைநிலையை அடைவதற்கு சமமாகும். உடலை தாண்டுவதென்பது "நாம் இவ்வுடலல்ல" என்ற உண்மையை உணர்வதற்கு சமமாகும். கருவறையை அடைவதென்பது "நானே உள்ளபொருள்" என்ற மெய்யறிவை பெறுவதற்கு சமமாகும்.

🌷 வழிபாட்டிற்கு பின்னர், நெய் தேங்காயிலுள்ள நெய்யை மூலவரின் முழுக்கிற்கு கொடுப்பதென்பது மெய்யறிவை பெற்ற பின்னர், இறை சிந்தனையையும் விட்டுவிடுவதற்கு சமமாகும். அதாவது, முனைப்பற்று இருத்தல் - வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருப்பதற்கு சமமாகும்.

🌷 மீதமுள்ள தேங்காயை ஆழித்தீயில் இடுவதென்பது மீதமுள்ள வாழ்வை, மேற்சொன்னவாறு, வாழ்ந்து முடித்தலுக்கு சமமாகும். ஆழித்தீ என்பது காலத்திற்கு சமம். எல்லாவற்றையும் அழித்துவிடும். பற்றுகளை விட்டு, உடலை கடந்து, மெய்யறிவில் நிலைபெற்ற பின்னர் உடல் இருந்தாலென்ன? போனாலென்ன?

oOOo

சபரிமலை அண்ணல் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌼🌸🌸

No comments:

Post a Comment