Monday, February 7, 2022

திருக்குறள் #610 (மடியின்மை): மடியிலா மன்னவன் யார்? அடியளந்தான் அளந்ததென்ன?


மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

-- திருக்குறள் #610 (மடியின்மை)

பொருள்: சோம்பலில்லா மன்னவன் முயன்றால், அன்று திரு குறள் பெருமாள் (வாமனர்) மூன்று அடிகளால் அளந்த பரப்பு யாவற்றையும் வெல்லலாம்.

மேலோட்டமாகப் பார்த்தால் அரசாட்சி பற்றி திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதியிருப்பதாகத் தோன்றும். ஆனால், இக்குறள் மெய்யியலைப் பற்றியதாகும்!

முதலில், "குறளன் அளந்த 3 அடிகளின்" உட்பொருளைப் பற்றி பார்ப்போம் (திருவிறக்கக் கதையை, தயவு செய்து, இணையத்தில் தேடி படித்துக்கொள்ளவும்).

மெய்யறிவாளரிடமிருந்து (இந்திரன்) வெளிப்படும் அறிவுரையே (உபேந்திரன் - வாமனர்) குறள் (குள்ள) பெருமாளாகும்!! பகவான் திரு ரமண மாமுனிவரிடமிருந்து 🌺🙏🏽🙇🏽‍♂️ வெளிப்பட்ட "நான் யார்?" என்பது மிகச்சிறந்த குறளனாகும். தொடக்கத்தில், இந்த அறிவுரையை ஏற்க மனமெனும் அசுரகுரு தடைபோடும். மனதை ஒதுக்கி, இவ்வறிவுரையை ஏற்றுக்கொண்டு, விடாது சிந்திக்கத் தொடங்கினால் நனவு, கனவு, தூக்கம் (குறளன் அளந்த 3 அடிகள்) என்று எல்லா நிலைகளையும் அந்த சிந்தனை நிறைத்துவிடும். இறுதியில், மீதமிருக்கும் நமது தனித்துவத்தையும் (நான் இன்னார்) விட்டுவிடுவோம் (மகாபலியின் தலை மீது குறள் பெருமாள் கால் வைத்தது).

அடுத்து, மன்னவன் என்ற சொல்லைப் பார்ப்போம்.

மன்னவன் எனில் நிலத்தின் தலைவன். நிலம் எனில் நமதுடல். மண்ணில் விளைந்த பொருட்களை உண்டு பெருகியதால் நமதுடலும் மண் என்ற கணக்கில் சேர்கிறது. இந்த உடலென்னும் மண்ணின் தலைவன் நாமே!

இப்போது மீண்டும் பொருள் காண்போம்: மண் என்றழைக்கப்படும் உடலின் தலைவனாகிய நாம், சோம்பலின்றி விடாது முயற்சித்தால், நனவு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளையும் வெல்லலாம்.

வென்றால்? நான்காவது நிலையாகிய நிலைபேற்றினை (சிவநிலையை) அடையலாம்.

சோம்பலின்றி விடாது எந்த செயலை முயற்சித்தால் சிவநிலையை அடையலாம்?

தில்லை கூத்தப்பெருமானின் தூக்கிய இடதுகாலும், திருவாலங்காட்டு இரத்தின சபாபதி பெருமானின் மேல்நோக்கிய இடதுகாலும், உடையவரை நோக்கி அமர வைக்கப் பட்டிருக்கும் சிவன்காளையும் உணர்த்தும் தன்னாட்டமாகும்!!

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️

இறுதியாக, இந்த குறளுக்கு சமமான பகவானின் பாடல்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சிபோல்
விட்டிடாது உன்னலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

பொருள்: இடைவிட்டுச் செய்யப்படும் தன்னாட்டப் பயிற்சியைவிட, ஆற்றின் நீரோட்டத்தைப் போன்று, உருக்கிய நெய்யின் வீழ்ச்சியைப் போன்று, இடைவிடாது செய்யப்படும் தன்னாட்டப் பயிற்சியே சிறந்ததாகும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment