Tuesday, February 15, 2022

அப்பர் பெருமான் புனைந்தது கூத்தபிரானின் அழகையா? அல்லது, அத்திருவுருவம் காட்டும் வழியையா?


குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே!

மிகவும் புகழ்பெற்ற இப்பாடலை மேலோட்டமாக பார்த்தால், கூத்தபிரானின் அழகை, உள்ளம் உருகி, சொற்களால் வடித்திருக்கிறார் அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்று தோன்றும். ஆனால், அருளாளரான பெருமான், அழியக்கூடிய, உயிரற்ற ஒரு சிலையைப் பற்றியா உருகி பாடியிருப்பார்? சற்று பார்ப்போம்.

மேற்கண்ட பாடலில், பிரானின் புருவம், வாய், சடை, வெண்ணீறு & தூக்கிய திருவடி ஆகியவற்றைப் பற்றி பாடியிருக்கிறார். இவற்றில் தூக்கிய திருவடியே முகமையானதாகும்.

தில்லை கூத்தரின் தூக்கிய திருவடி (எடுத்த பொற்பாதம் 🌷), திருவாலங்காடு இரத்தின சபாபதி பெருமானின் மேல் நோக்கிய இடது கால், திருத்தலங்களில் மூலவரை நோக்கி வைக்கப்பட்டிருக்கும் சிவன்காளைகள் ஆகிய இவை உணர்த்தும் நுட்பம் - தன்னாட்டம் - புறமுகமாக செல்லும் நாட்டத்தை நம் தன்மையுணர்வின் மீது திருப்புதல்!

இது மட்டும்தான் நம்மால் இயன்றதாகும். இடைவிடாது, தொடர்ந்து தன்னாட்டம் பழகினால், ஒரு சமயத்தில், நாமே உள்ளபொருள் என்பதையும், அன்னை மாயை / மாயக்கண்ணனால் தோற்றுவிக்கப்படும் உலகம் பொய் என்பதையும் உணர்வோம். இச்சமயத்தில் ஓர் உவகை நம்மிடம் தோன்றும் இதுவே "குமிண் சிரிப்பும் குனித்த புருவமும்" 🌷 உணர்த்துவதாகும்.

இப்போது நம்மைப் பற்றியும், உலகைப் பற்றியும் கிடைத்திருக்கும் அறிவே மெய்யறிவாகும். இதுவே "பால் வெண்ணீறு" 🌷 ஆகும்.

மெய்யறிவு கிடைக்கும்வரை நமது மலவுடலையே உடலாகக் கருதியிருப்போம். கிடைத்த பிறகு, "ஏதேது வந்தாலும், ஏதேது செய்தாலும், ஏதேதில் இன்புற்றிருந்தாலும், ஏதேதும் தானாக வண்ணம், தனித்திருக்கும் ஞானாகாரம் தானே நாம்" (சுவாமி நடனானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️) என்பதை உணர்வோம். அதாவது, தூய அறிவுடல். தூய உடல் - செம்மையான உடல் - செம்மேனி - "பவளம்போல் மேனியிற்" 🌷.

நம்மை சுற்றியிருப்பவை, நமக்கு தோன்றுபவை & அமைபவை ஆகிய அனைத்தும் நமது முன்வினைப்பயன்களே. இவை தாம் நமது பனித்த - துளிர்த்த - வெளிவந்த சடைகள். 🌷 மெய்யறிவு கிடைத்த பின்னரும் எதுவும் மாறிவிடாது. முன்பு காட்சிகள். இப்போது கானல்நீர் காட்சிகள்.

மெய்யறிவில் நிலைபெறுவதற்குத்தான் "இந்த மானிலத்தில் மனித்தப் பிறவி" 🌷 தேவைப்படுகிறது. ஏனைய உயிர்களுக்கு தன்னையறிதல் என்பது வினைப்பயனால் அமைகிறது. மனிதனுக்கு இயற்கையாக அமைகிறது. (ஆனால், அவன் பயன்படுத்திக் கொள்வதில்லை)


மொத்தத்தில், மெய்யறிவு பெறுவதற்கான வழியையும் (எடுத்த பொற்பாதம் - தன்னாட்டம்), பெற்ற பின் ஒரு மெய்யறிவாளரின் நிலையையும் காட்டும் கூத்தபிரானின் திருவடிவை சொற்களால் படம்பிடித்துக் காட்டியுள்ளார் அப்பர் பெருமான். 🙏🏽🙏🏽🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment