Thursday, May 9, 2019

என்றுமுள தென் தமிழ்!! 😍

நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்
என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்

-- #கம்பராமாயணம்

பொருள்: அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினார். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் (என்றுமுள) இனிய/அழகிய (தென்) தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவராகிய அகத்தியன், ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல் வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தார்.

"என்றுமுள" வேண்டிய தமிழ் இன்று? 😔

🥀🍃🍂🍂🍃🥀

ஆங்கிலேயர்களாலும், ஆரியர்களாலும் அழிந்தது போக மீதமிருப்பதை அழிக்க ஒரு பெரும் கருங்காலி கூட்டம் கடினமாக ஊழியம் செய்து கொண்டிருக்கிறது! வள்ளுவத்திற்கு முதலில் சமணச் சாயம் பூசி, தற்போது அதற்கு "இளம் வேதாகமம்" என்று பெயரும் வைத்துவிட்டது. ஆளுடையபிள்ளை முதல் வள்ளற்பெருமான் வரை அன்னைத் தமிழின் இறைத்தன்மையைப் போற்றிய அனைத்து அருளாளர்கள் & உரையாசிரியர்கள் மீதும் சேற்றை தெளித்துவிட்டது. மீதமிருப்பது தொல்காப்பியமும் ஐந்திரமும் மட்டுமே. இவ்விரண்டு நூல்களும் வெகு பழமையானது என்பதால், வள்ளுவத்துக்கு பயன்படுத்திய உத்தியை இங்கு பயன்படுத்த முடியாது என்பதால், இவற்றை மட்டம் தட்டும் ஊழியத்தில் இறங்கிவிடும்.

"#மெய்யின் #இயக்கம் #அகரெமாடு #சிவணும்" என்று தொல்காப்பியத்தில் வருவதாலும், இதே கருத்து அதற்கும் வெகு பழமையான ஐந்திரத்திலும் வருவதாலும் ("#மெய்யொளி #உயிரொலி #சிவணுதல் #இயல்பே"), "#தொல்காப்பியர் ஐந்திரத்திலிருந்து சுட்டவர்; சுய அறிவு கிடையாது." என்று சேறு தெளித்துவிடும். #ஐந்திரம் நமது நூலாக இருந்தாலும் ஆரியரும் அதன் புகழ்பாடுவர். மேலும், "சிவணுதல்" போன்ற சொற்களும் உடைத்தது. இவை போதாதா? ஆரிய, பார்ப்பனிய, ஏதேச்சாதிகார, ஆதிக்க சாதிவெறி கொண்ட, ... என்று பட்டங்கள் கட்டிவிடும்!! 😏

பின்னர், இறைத்தன்மையையும் சுய மதிப்பையும் இழந்த அன்னை தமிழ் ஆசீர்வாதமாய் இருக்கும்!! 🥴

🥀🍃🍂🍂🍃🥀

"மெய்யொளி உயிரொலி சிவணுதல் இயல்பே" - ஒளி போன்ற உடலும், ஒலி போன்ற உயிரும் இணைவது என்பது இயற்கையே என்கிறார் ஐந்திரத்தின் ஆசிரியர் #மயன் (#மாயாசூரன், #தேவசிற்பி, #விஸ்வகர்மா என்பன இவரது மற்ற பெயர்கள். இவர் மாமன்னர் இராவணின் மாமனார் என்பார் மறைந்த திரு. வை. #கணபதி #ஸ்தபதி அவர்கள்.). உடலியக்கத்தைப் பற்றி பேசும் இந்த செய்யுள் வரியை அடிப்படையாகக் கொண்ட தொல்காப்பிய சூத்திரம், "மெய்யின் இயக்கம் அகரெமாடு சிவணும்", தமிழ் எழுத்துக்களைப் பற்றி பேசுகிறது - மெய்யெழுத்துக்கள் தனித்து இயங்காது; உயிரெழுத்துக்களோடு இணைந்தால் தான் இயக்கம் பெறும். இவ்வாறு ஆராய்ந்து கொண்டு உள் சென்றால் இயற்கையன்னையும் தமிழன்னையும் வேறுவேறல்லர் என்பதை உணர்வோம்! 😍 இயற்கையின் இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தமிழை நன்றாக கற்றாலே போதும் என்பதையும் உணர்வோம்!! 🥰 இயற்கையின் இன்னொரு பெயர் இறைவன் என்பதால், இறைவனை உணர - மெய்யறிவு பெற - செய்ய வேண்டியதெல்லாம் "தமிழைக் கசடற கற்றலே" என்பதும் தெளிவாகும்!!! 😌

(#கசடற #கற்றல் என்றவுடன் பெண்டிங்க் / மெக்காலே முறையில் முனைவர் பட்டங்கள் வாங்கி குவிப்பதல்ல! 😁 #கல்வி எனில் கல் + வி = அசையாது + விடாது = நான் என்னும் தன்மையுணர்வை விடாது நாடி, புறம் நாடாது, தன்னை நாடி நிற்றல் = #நிலைபேறு. இப்படி தமிழைக் கற்க வேண்டும்.)

🎉🎇🎆🎆🎇🎊

"மெய்யொளி உயிரொலி... " - இவ்வுலகம் ஒலிஒளியால் ஆனது என்பதை விளக்கவே கூத்தப் பெருமானின் 🌺🙏🏼 மேலிரு கைகளில் டமருகமும் (ஒலி) நெருப்பும் (ஒளி) உள்ளது. இவ்வுருவின் கண்ணாடி பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட பெருமாள் 🌺🙏🏼 உருவில் ஒலியும் ஒளியும் இடமாறியிருக்கும் (சக்கரம் - ஒளி - வலப்புறம்; சங்கு - ஒலி - இடப்புறம்).

🎉🎇🎆🎆🎇🎊

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!

-- #மனோன்மணீயம்

நமது தமிழ்தாய் வாழ்த்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது! அந்நிய சக்திகளின் பொரைகளை உண்டு, வளர்ந்து, அப்போது தான் ஆட்சிக்கு வந்திருந்த கருங்காலி போலி திராவிடவியாதிகளின் செஞ்சோற்றுக் கடனால் இப்பாடல் இடம் பெறாமல் போனது!! 😠

ஒரு பொருளிலிருந்து சிறிது எடுத்தால் அப்பொருள் அளவில், எடையில் குறையச் செய்யும். ஆனால், பரம்பொருளிலிருந்து நாம் வாழும் பேரண்டம் தோன்றிய பின்னரும் பரம்பொருள் சிறிதும் குறையவில்லை (இக்கருத்து இடம் பெற்றிருந்து, மக்களின் சிந்தனையைத் தூண்டியிருந்தால், பலருக்கு தொழில் ஓடியிருக்காதே 😛). இது போலத் தான் நம் தமிழன்னையும். அவரிடமிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளுவ மொழிகள் (பிள்ளைகள்) தோன்றிய பின்னரும் அவரின் அழகு சிறிதும் குறையவில்லை என்கிறார் பாடலாசிரியர் பெ. சுந்தரனார். 😊 மேலும், ஆரியம் போல் வழக்கொழிந்து போகாமல் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறார் என்று வியக்கிறார் ஆசிரியர்!

No comments:

Post a Comment