Thursday, October 11, 2018

மஹரிஷி வாய்மொழி: உழைப்பும், தன்னை அறிதலும்



ஒருவன் உழைக்கவேண்டியிருக்கற வரையில் தன்னை அறியும் முயற்சியையும் கைவிடக் கூடாது.

-- பகவான் ஸ்ரீரமணர், #மகரிஷி #வாய்மொழி 🌸🙏

இந்த அறிவுரையும், உலக வாழ்க்கையை விட்டு ஒதுங்க முடியாமலும், ஆன்ம வாழ்க்கையில் முழு மூச்சாக ஈடுபடமுடியாமலும், மெய்யறிவைப் பற்றியத் தெளிவு கிடைக்காமலும் போராடும் அன்பர்களுக்காக பகவான் அருளியது.

🌼🏵🌹🌻🌷🌺🌼

அவர் குறிப்பிடும் "தன்னை அறிதல்" என்பது நான் எனும் நமது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொள்வதே (நமது கவன ஆற்றலை அத்தன்மையுணர்வில் கொண்டு போய் மீண்டும் மீண்டும் நிறுத்துவது என்றாலும் இதே பொருள் தான்).

"உழைக்கவேண்டியிருக்கற" என்ற சொற்களின் மூலம் பகவான் குறிப்பிடுவது என்னவெனில் "நாம் உழைக்கின்றோம்" என்ற எண்ணம் (தனியிருப்பு) இருக்கும் வரை என்பதையே. (1) தனியிருப்பு அழிந்த பிறகு உழைப்பு என்று எதுவும் கிடையாது. எல்லாம்...

🙏 அரவனின் முடிவில்லாப் பெருமகிழ்ச்சி கூத்துத்தான் (எல்லாம் இறைவனே)

🙏 பிணக்காட்டில் பேயோடு கூத்தன் தெவிட்டாமல் ஆடும் கூத்துத்தான் (இறைவனும் இறைவியும் ஆடும் கூத்து)

🙏 பெருமானின் பேய்த்தொழிலாட்டி நடத்தும் தொழில் தான் (இறைவன் எனும் அரங்கில் இறைவி ஆடும் ஆட்டம்)

(நம் அருளாளர்கள் 🙏 இவ்வண்டத்தின் இயக்கத்தை உணர்ந்த விதங்கள் 😊)

🌸 தானாம் ரமணேசன் அடி போற்றி 🌸

🌼🏵🌹🌻🌷🌺🌼

குறிப்பு:

1. #உழை என்ற சொல் உழு என்ற சொல்லில் இருந்து வருகிறது. உழு எனில் உட்செலுத்து. இன்று, ஏரை நிலத்தினுள் செலுத்துவது என்ற பொருள் கொண்டுள்ளோம். புழு என்பது உட்புகுந்து செல்லும் உயிரியாகும். முழுகு என்பது நீரினுள் உட்புகுதலாகும். நுழை என்பது ஒன்றினுள் செலுத்துவதாகும். மழை என்பது வளிமண்டலம் புகுந்து வரும் நீராகும்.

இவ்வரிசையில், உழை என்பதும் ஒன்றை மற்றொன்றினுள் செலுத்துவதாகவோ, ஒன்று மற்றொன்றினுள் நுழைவதாகவோ இருக்கலாம். ஆனால், சென்னை பல்கலையின் சொல்லகராதி கொடுக்கும் பொருள் "உட்படுத்து". உட்படுத்துதலோ, உட்புகுதலோ, உட்செலுத்துவதோ எதுவாக இருந்தாலும் இரண்டு பொருட்கள் சம்பந்தப்படுகின்றன. ஒன்று நாம். இன்னொன்று உலகம்.

நாம் என்பது நமது மனதை, நமது தனியிருப்பை, குறிக்கும். மனம் முடிவு செய்ததை உடல் செய்வதால், உடலைக் கருவியாக மட்டுமே கருதியுள்ளனர் நம் முன்னோர்கள். அடுத்தது, உலகம். நம் சமயத்தின் சில பிரிவுகளைத் தவிர மற்றவை உலகைக் கொடியது என்றே உருவகப்படுத்துகின்றன. அன்றே இந்நிலை எனில், இன்று? இப்படிப்பட்ட உலகினுள் புகும் போது தகுந்த எச்சரிக்கையுடன் புக வேண்டுமல்லவா? எனவே தான் பகவானின் அறிவுரை முக்கியத்துவம் பெறுகிறது! 👍

உழை எனில் நமது மனதை உலகின் பால் செலுத்துவது அல்லது உலகினுள் புகுத்துவது / நுழைப்பது அல்லது மாய உலகின் விதிகளுக்கு உட்படுத்துவது என்று எடுத்துக் கொள்ளலாம். எனில், உழைப்பு இல்லாத நேரத்தை நம் முன்னோர்கள் என்னவென்று அழைத்தார்கள்? ஓய்வு. ஒய்வு - ஒழிவு - அழிவு - அமைதி. மனமழிந்து கிடைக்கும் அமைதி.

(இவையெல்லாம், நம் அன்னைத் தமிழ் எவ்வளவு தூரம் ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதையும், நம் முன்னோர்கள் எவ்வளவு தூரம் மெய்யறிவு தாகம் கொண்டவர்களாக இருந்தனர் என்பதையும் காட்டுகின்றன. 😍)

இப்போது பகவானது அறிவுரையை சற்று மாற்றி வாசிப்போம்: ஒருவன் மனதை உலகின்பால் செலுத்த வேண்டியிருக்கிற வரையில், தனது தன்மையுணர்வை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.

🌸 திருச்சிற்றம்பலம் 🌸

posted from Bloggeroid

No comments:

Post a Comment