Monday, October 22, 2018

மகரிஷி வாய்மொழி: வேலை தடையல்ல. அந்த வேலையைச் "செய்கிறவன் நான்" என்ற எண்ணமே தடை!!



🔥 வேலை தடையல்ல. அந்த வேலையைச் "செய்கிறவன் நான்" என்ற எண்ணமே தடை.

🔥 எந்த வேலையும் உனதல்ல என்ற எண்ணம் எப்போதும் உன் கவனத்திலிருந்தால் அதுவே போதும். இதை நினைவுப்படுத்திக் கொள்ள முதலில் முயற்சி தேவை. பின்னர், இது இயல்பாகவும் இடைவிடாதுமிருக்கும். வேலையும் நடந்து கொண்டிக்கும். உனது மன அமைதிக்கும் குறைவிருக்காது.

🔥 "வேலை செய்வது யார்?" என்று ஆராய்ந்து உன் உண்மை இயல்பை நினைவிற் கொள்; #வேலை தானே நடக்கும்; உன்னைக் கட்டுப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயலவேண்டாம். உன் முயற்சியே தளை.

🔥 ஆத்மாவைக் கவனிப்பதே வேலையை கவனிப்பதாகும்.

-- பகவான் ஸ்ரீரமணர், #மகரிஷி #வாய்மொழி 🌸🙏

எங்கேயோ, எப்போதோ, யாரோ என்று குழப்பாமல் இங்கேயே, இப்போதே, நீயே என்று தெளிவு தருபவை தான் #உபதேசங்கள் (உப - அருகில்). இன்றைய காலத்தில் (இனி வரும் காலங்களிலும்), இதற்குப் பொருத்தமானவை பகவானின் அறிவுரைகள் மட்டுமே.

அகம், புறம் என இரண்டு படகுகளில் ஒரே நேரத்தில் பயணம் செய்ய வேண்டியக் கட்டாயத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு (அதாவது, நம்மைப் போன்று நிலைபேற்றை "அடைய" முயலுபவர்களுக்கு 😀), பகவானின் இந்த அறிவுரைகள் படிக்கும் போதே மன ஆறுதல், நிம்மதி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 😍 தெளிவையும் கொடுக்கும். இவற்றைப் பற்றி சிந்திக்கும் முன்னர், நமக்குத் தேவையான அடிப்படை அறிவு: நம்முடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் முதல் அண்டவெளியில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் வரை அனைத்தையும் நடத்துவது இறைவனின் ஆற்றலே (இறைவனும் இறைவனின் ஆற்றலும் வேறுவேறல்ல).

இந்த அடிப்படை உண்மையை நாம் மறந்து விடுவதாலேயே அனைத்து துன்பங்களுக்கும் உள்ளாகிறோம். நம் மனதில் எண்ணங்களைத் தோற்றுவித்து, அதற்கு செயல் வடிவம் கொடுக்க வைத்து, தேவையான மாற்றங்களை நிகழ்த்திக் கொள்வது வரை அனைத்தையும் நடத்துவது இறைவனே. எனில்,

▶ அனைத்து வேலைகளும் யாருடையவை? இறைவனுடையது. நமதல்ல.
▶ அனைத்து வேலைகளைச் செய்வது யார்? இறைவனே. நாமல்ல.
▶ எல்லாம் அவர் செயல் எனில், நம் பணி என்ன? ஆத்மாவைக் கவனிப்பதே. நம் கவன ஆற்றலை (மனதை) நமது தன்மையுணர்வின் (ஆன்மாவின்) மீது வைத்திருப்பதே.

மனதை ஒன்றின் மீது செலுத்திக் கொண்டு, இன்னொரு வேலையை எப்படி செய்ய முடியும் என்ற கேள்வி எழலாம். இதற்கு பகவான் கொடுத்த பதில், "ஒரு நடிகனைப் போல". எந்த வேடம் போட்டுக் கொண்டு நடித்தாலும், தான் ஒரு நடிகன் என்பதை ஒரு நடிகன் மறந்து விடுவதில்லை. இவ்வாறே, எதில் ஈடுபட்டாலும், நமது உண்மையை நாம் மறக்காமல் இருக்க முடியும். மறக்காமல் இருந்தாலே போதும். இது மட்டுமே நமக்கு சாத்தியமும் கூட.

அடுத்து, நாம் செய்யும் வேலைகள் எதிர்வினைகளை உருவாக்காதா? பற்றில் முடியாதா? என பல கேள்விகள் எழலாம். பிறவியிலிருந்தே மெய்யறிவில் திளைத்த #சுக #மகரிஷி 🙏 பிற்காலத்தில் குழந்தைப் பெற்றுக்கொண்டார். இஸ்ரவேலிலிருந்து தப்பி, காஷ்மீரம் வந்து, சாலிவாகன மன்னரின் சபையில் அங்கம் வகித்த #ஞானி #யேசு -வும் 🙏, மன்னரின் அறிவுறுத்தலின் படி, தனது பணிப்பெண் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டார். மகரிஷி #அஷ்டாவக்கிரரின்🙏 வழிகாட்டுதலின் படி மெய்யறிவு பெற்ற மன்னர் #ஜனகர் 🙏 ஆட்சிக்கட்டிலிலே தொடர்ந்து வீற்றிருந்தார். #கொங்கணவச் #சித்தரின் 🙏 (#திருமலைப் #பெருமாள்) வாழ்வில் வரும் #வாசுகி #அம்மையாரும் 🙏, இறைச்சி வியாபாரியும் 🙏 மெய்யறிவு பெற்றிருந்தாலும் இல்லறத்தில் இருந்தவர்கள். இறைச்சித் தொழில், இல்லறம், அரச பதவி, உடலுறவு - பற்றை பெருகச் செய்ய இவற்றை விட வேறென்ன வேண்டும்? எதையும் "நான் செய்கிறேன்" என்ற எண்ணத்துடன் செய்தால் தான் பற்று ஏற்படும். தன்மையுணர்வில் நிற்கும் போது நாம் சாட்சி மாத்திரமே. விளைவுகள் நம்மை பாதிக்காது. இங்ஙனமே இந்த மகான்கள் வாழ்ந்தார்கள்.


இறுதியாக, வேலை என்ற சொல்லைப் பற்றி சற்று பார்ப்போம்.

வேலை ஒலியை விழுங்கியெழ விளங்கி ஓங்கும் வியப்பினதால் (பெரிய புராணம்)

வேலை உலகில் பிறக்கும் வேலை ஒழிந்தோமில்லை (திருவரங்கக்கலம்பகம்)

மேலுள்ள 2 பாடல் வரிகளிலும் வரும் வேலை என்னும் சொல் கடலைக் குறிக்கிறது ("கடல் எழுப்பும் ஒலியை", "கடல் சூழ்ந்த உலகில்"). தேவார மூவர் இச்சொல்லை கடல் என்ற பொருளிலேயே பயன்படுத்தியுள்ளனர். இது தவிர இச்சொல்லுக்கு கானல்நீர், கடற்கரை மற்றும் சில பொருள்களும் உண்டு (இங்கு கடல், கடற்கரை & கானல் நீர் ஆகிய மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளேன்). இந்த மூன்று பொருள்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை உண்டு - நிலையற்ற தன்மை. கடலின் மேற்பரப்பு சலித்துக் கொண்டேயிருக்கும். கானல் நீர் காட்சி தெளிவாக இல்லாமல் ஆடிக் கொண்டே இருக்கும். கடற்கரையின் மேற்பரப்பு மாறிக்கொண்டே இருக்கும். இவற்றிற்கெல்லாம் காரணம் காற்றாகும் (கடற்கரை காற்றாலும் அலைகளாலும் மாறுகின்றது. அலைகள் உருவாவதற்கு காரணமும் காற்றே). இது போன்றே இவ்வுலகிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன (உருவாக்குவது, உருமாற்றுவது & அழிப்பது என அனைத்தும் மாற்றங்களே). இதற்குக் காரணம் காற்று பூதத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரிகளின் மனமாகும். ஆக, வேலை எனில் மாற்றம், மாற்றுவது, மாறுவது என்று பொருள் கொள்ளலாம்.

என்ன மாறுகிறது? ஆற்றல் மாறுகிறது. வே என்ற எழுத்தின் பொருள் வெப்பம் / எரி. இன்று, பரங்கி அழிவியலின் (நமது அறிவியலே அறிவியல். உலகக் கொள்ளையர்களான பரங்கியரது அறிவியல் அழிவியலாகும். ✊👊👊💪) கோட்பாடுகளில் ஒன்று: ஆற்றல் அழியாதது. ஒன்றிலிருந்து இன்னொன்றாக உருமாற்றம் மட்டுமே ஆகும். இது எங்கிருந்து அந்த திருடர்களுக்கு கிடைத்திருக்கும்? நம்மிடமிருந்து தான். இதை அன்றே உணர்ந்ததால் தான், வெப்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேலை என்ற சொல்லை உருவாக்கினார்கள் நம் முன்னோர்கள். 💪

🌺🌻🏵

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன் கடன் அடியேனையுந் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே.    

-- அப்பர் பெருமான், தேவாரம் 5.19.9 🌸🙏


ஓர் உயிரி இவ்வுலகில் எங்ஙனம் வாழவேண்டும் என்பதை நம் திருத்தலங்களில் கருவறை முன் நிறுவப்பட்டிருக்கும் #சிவன்காளை வடிவில் வடித்திருப்பர் நம் மூதாதையர். அதை நம் உள்ளம் கவரும் பாடலாக வடித்திருக்கிறார் நாவின் அரசர். 😍

🌺🌻🏵

posted from Bloggeroid

1 comment: