Showing posts with label வைசியன். Show all posts
Showing posts with label வைசியன். Show all posts

Monday, December 11, 2023

வருணாசிரமம் - இன்றைய இட ஒதுக்கீட்டிற்கு சமமான சொல்!!


திருமறைகளை பற்றிய அக்காலக் கட்டுப்பாடுகளை, அண்மையில், மீண்டும் கேட்க நேர்ந்தது:

🔸 பிராமணன் - திருமறைகளை பார்க்கலாம், படிக்கலாம் & கேட்கலாம்.

🔸 சத்திரியன் - திருமறைகளை பார்க்கலாம் & கேட்கலாம். படிக்கக்கூடாது.

🔸 வைசியன் - திருமறைகளை கேட்கலாம். பார்க்கவோ, படிக்கவோக் கூடாது.

🔸 சூத்திரன் - திருமறைகளை பார்க்கவோ, கேட்கவோ, படிக்கவோக் கூடாது.

தன்னையுணர்ந்த எந்த மெய்யறிவாளரும், மேற்கண்ட கட்டுப்பாடுகளை வகுத்திருக்கமாட்டார். அப்படி வகுத்திருந்தால் அதன் உட்பொருள் வேறாக இருக்கும்.

திருமறைகள் என்பது பகவான் திரு இரமண மாமுனிவர், திரு ஒளவையார், திருவள்ளுவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து படைப்பை பற்றியும், படைத்தவனை பற்றியும் வெளிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாகும்.

திருமறைகள் = படைத்தவன் & படைப்பு.

படைத்தவன் (அப்பன்) = படைப்பு (அம்மை).

எனில், திருமறைகள் = படைத்தவன் என்று கொள்ளலாம். அல்லது, திருமறைகள் = படைப்பு என்றும் கொள்ளலாம். படைப்பு என்ற பொருளைக் கொண்டு சிந்தித்தால்... மலைக்க வைக்கின்றது!!!

oOo

மேற்கண்ட கட்டுப்பாடுகளிலுள்ள "திருமறைகள்" என்ற சொல்லுக்கு பதிலாக, "படைப்பு" என்ற சொல்லை பொருத்திப் பார்ப்போம்:

🔸 பிராமணன் - படைப்பை பார்க்கலாம். அது பற்றி படிக்கலாம் & கேட்கலாம்.

முதலில், பிராமணர் என்போர் யார்? இன்று, யாரை நாம் பிராமணரென்று கருதுகிறோமோ, அந்த அசுரர்கள் அல்லர். பகவான், வள்ளலார், தாயுமானவர், பட்டிணத்தார், ஒளவையார், திருஞானசம்பந்தர், காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் போன்ற மெய்யறிவாளர்கள்.

பிரம்மம் = உள்ளபொருள்.
பிராமணர் = உள்ளபொருளை உணர்ந்தவர்கள் / உள்ளபொருளாய் உள்ளவர்கள்.

படைப்பினால் பாதிப்படையமாட்டார்கள். எனவே, இவர்கள் படைப்பை பார்க்கலாம், வரும் செய்திகளை கேட்கலாம். அது பற்றி ஆராயலாம் (படிக்கலாம்). அப்படி இவர்கள் ஆராய்ந்ததினால்தான் ஆத்திச்சூடி, திருக்குறள் போன்ற பொன்னான வழிகாட்டி நூல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

🔸 சத்திரியன் - படைப்பை பார்க்கலாம். அது பற்றி கேட்கலாம். அதை படிக்கக்கூடாது.

சத்திரியர் எனில் அரசர்கள் என்று பொருள் கொள்வதை விட, மறவர்கள் என்று பொருள் கொள்வது சிறப்பாகவிருக்கும்.

இவர்கள் மேற்கண்ட மெய்யறிவாளர்களுக்கு அடுத்த நிலையிலுள்ளவர்கள். "காண்பவை யாவும் பொய். காண்பவனே மெய்." என்ற அறிவை படிப்பறிவாக மட்டும் அறிந்தவர்கள். நிலைபேற்றினை அடைய போராடுபவர்கள் (எனவே, மறவர்கள்). மெய்யறிவாளர்களின் நிலையறிந்து, அவர்களுக்கு உதவுபவர்கள்; அவர்களது நிலையறியாத கூட்டத்திடமிருந்து அவர்களை காப்பவர்கள். (இதுவே, "மெய்யறிவாளரை மறவன் காக்கவேண்டும்" என்ற விதியின் உட்பொருளாகும்.)

இவர்கள் படைப்பைப் பற்றி அறிந்தவர்கள் என்பதாலும், நல்ல மனஉறுதி கொண்டவர்கள் என்பதாலும், இவர்கள் படைப்பை பார்க்கலாம்; வரும் செய்திகளுக்கு காதுகொடுக்கலாம். ஆனால், ஆராயக்கூடாது (படிக்கக்கூடாது). முழுகிணறும் தாண்டிய மெய்யறிவாளர்களே ஆராயவேண்டும். இவர்கள் ஆராய்ந்தால் மீண்டும் பிறவி சுழற்சிக்குள் சிக்கிக்கொள்வார்கள்; தவறுகளும் விளையும் (இவர்கள் திருக்குறள் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்?).

🔸 வைசியன் - படைப்பை பற்றி கேட்கலாம். அதை பார்க்கவோ, அது பற்றி படிக்கவோக் கூடாது.

இங்கு, வைசியன் எனில் "பயிர் செய்பவர்" என்று பொருள் கொள்ளவேண்டும்.

எதை பயிர் செய்பவர்? வினைகளை பயிர் செய்பவர். வினைகளை பயிர் செய்தால் என்ன விளையும்? பற்றுகள், தளைகள், பிறவிகள்... அதாவது, மறவர்களைப் போன்று மனக்கட்டுப்பாடு இவர்களிடமிருக்காது; எளிதில் வினைப்பயன்களை சேர்த்துக்கொண்டு, பிறவி சுழற்சிக்குள் போய்விடுவர். எனவே, மறவர்களை விட கூடுதலான கட்டுப்பாடுகள் இவர்களுக்கு அறிவுருத்தப்பட்டன.

வைசியன் எனில் வணிகன் என்பது எல்லோரும் அறிந்த பொருளாகும். வணிகன் என்பவர் யார்? ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுபவர். தன்னிலையை விட்டுக்கொடுத்து பிறவிகளை பெறுவதால், இவர்களுக்கு வணிகர்கள் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

🔸 சூத்திரன் - படைப்பை பார்க்கவோ, அது பற்றி கேட்கவோ, அதை படிக்கவோக் கூடாது.

சூத்திரன் எனில் "எப்போதும் கவலையில் இருப்பவன்" என்பது பொருளாகும். மனம், உடல் & வையகம் ஆகியவை உண்மையென்று கருதுவதால் இப்பிரிவினருக்கு கவலை ஏற்படுகிறது. இதை போக்க என்ன செய்யவேண்டும்?

"காய்ச்சல் நீங்கும்வரை இன்னின்ன உணவுகளை உட்கொள்ளாதே" என்று மருத்துவர் அறிவுறுத்துவது போன்று, இவர்களுக்கு "காண்பவை யாவும் பொய்" என்ற அறிவு சிறிதளவேணும் தோன்றும்வரை, "படைப்பை பார்க்காதே, அதிலிருந்து வரும் செய்திகளை கேட்காதே மற்றும் அதை ஆராயாதே" என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

சில சமயம், குறைவான மதிப்பெண்கள் பெரும் மாணவர்களை, நல்ல மதிப்பெண்கள் பெரும் மாணவர்களோடு அமர வைத்து, வகுப்பை மேம்படுத்த ஆயர்கள் (ஆசிரியர் - கா(ஆ)ரியம்) முயற்சிப்பதை பார்த்திருக்கலாம். இது போன்று, தன்னை உடலாக மட்டும் கருதும் இப்பிரிவினரை, தெளிந்த அறிவு பெற்ற பிற பிரிவினரோடு சேர்ந்து வாழ்ந்து, மேம்பட அறிவுறுத்தியிருக்கிறார்கள். (இவ்வறிவுரை காலப்போக்கில் திரிந்து, இப்பிரிவினர் மற்றவர்களுக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றாகிவிட்டது!)

oOo

பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் பிறவாநிலையை அடையவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பரந்த மனப்பான்மை கொண்டவர்களால் உருவாக்கப்பட்ட இக்கட்டமைப்பு, காலப்போக்கில், குறுகிய மனப்பான்மை கொண்டவர்களின் கைகளுக்கு சென்றதால், தலைகீழாக, நேரெதிராக திரிக்கப்பட்டு, இன்றைய இட ஒதுக்கீடு எனும் கேட்டிற்க்கு வித்தாகிவிட்டது!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻