Sunday, June 11, 2023

சூத்திரன்: இன்றைய உலகில் யாவருக்கும் பொருந்தும் பெயர்ச்சொல்!


மரபணு ஆய்வின் வழியாக பல உண்மைகள் வெளிவந்தபிறகும், அக்கால சமூகங்களைப் பற்றிய பல செய்திகள் வெளிவந்தபிறகும், இன்னும் சூத்திரன் என்ற பெயர் சொல்லை தவறான கண்ணோட்டத்தில் பயன்படுத்துவோர் உள்ளனர்! 😞

உண்மையில், இது ஆழமான பொருள் கொண்ட சொல்லாகும். சில சமூகங்களை மட்டும் குறிக்காது. இச்சொல்லை இதன் உண்மையான பொருளில் பயன்படுத்தினால், இன்று, அனைவரையுமே குறிக்கும்! ☺️

இந்த ஆரியச்சொல்லின் பொருள்: எப்போதும் கவலையில் / வருத்தத்தில் இருப்பவன்.

கீதோபதேச நிகழ்வின் தொடக்கத்தில், பெருங்கவலையுடன் இருக்கும் அர்ஜுனனை பார்த்து, "ஏன் சூத்திரனை போலிருக்கிறாய்?" என்று திரு கண்ணபிரான் கேட்கிறார், அதாவது, "ஏன் கவலையுள்ளவனாய் இருக்கிறாய்?" என்பது பொருளாகும்.

🔸 கவலை, வருத்தம், துயரம்... போன்ற உணர்ச்சிகள் எதனால் தோன்றுகின்றன?

பற்றுகளினால்.

🔸 ஏன் பற்றுகள் தோன்றுகின்றன?

மனதை சலிக்கவிடுவதால்.

🔸 ஏன் மனதை சலிக்கவிடுகிறோம்?

நம் கண் முன்னே விரியும் உலக காட்சியை உண்மையென்று நம்புவதால்.

இவ்வகையில், மனதை சலிக்கவிடும் நாம் அனைவருமே சூத்திரர்கள்தாம்!! 😀

🔸 அடுத்து, மனதை சலிக்கவிடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

அக்காலத்திற்கேற்ற பதில்: நமக்கேற்ற மெய்யாசிரியரை அணுகி, அவருக்கு பணிவிடைகள் செய்துகொண்டு, அவர் அறிவுருத்தும் பயிற்சியை பயின்றுகொண்டு, அவராக நம்மை வெளியேற்றும்வரை அவருடன் இருக்கவேண்டும்.

இதையே, சூத்திரர்கள் மற்ற பிரிவினருக்கு பணிவிடை செய்யவேண்டும் என்று திரித்துவிட்டனர்!!

🔸 இறுதியாக, எதற்காக இப்படிப்பட்ட சொல்லை உருவாக்கியிருப்பார்கள் என்று பார்ப்போம்.

உதயகீதம் திரைப்படத்தில் இடம்பெற்ற தேங்காய் நகைசுவை காட்சியை நினைவுகூறுவோம். "ஒர்ரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்கெல்லாம் தேங்காய் இல்லீங்களா? சாமிக்கு உடைக்கிறமாதிரி." என்று கவுண்டமணி கேட்க, அதற்கு அந்த கடைக்காரர், திடுக்கிட்டு, "ஒர்ரு ரூபாய்க்கு தேங்காயா? ஏன்யா நீ இவ்ளோ நாளா உள்ள இருந்திட்டு வந்தயா?" என்று திருப்பிக்கேட்பார். மூன்று ரூபாய்க்கு குறைவாக தேங்காய் கிடைக்காது என்பது பரவலான அறிவான பின்னரும், ஒருவர் குறைத்துக்கேட்கிறார் என்றால் அவர் நாட்டுநடப்பு அறியாதவராகிறார். ஏளனத்தையும் பட்டப்பெயரையும் சம்பாதிக்கிறார்.

இங்ஙனமே, அன்று, "காண்பவை யாவும் பொய். காண்பவனே மெய்.", "நாம் அழியும் உடலல்ல", "எதையும் செய்வது நாமல்ல" போன்ற மெய்யறிவு பரவலாக இருந்திருக்கவேண்டும். எதையும் செய்வது நாமல்லவெனில், எதையும் செய்யும் அன்னைக்கே இன்பமும் துன்பமும் என்றாகிறது. எனில், எதைப் பற்றியும் நாம் கவலை கொள்வது தவறு என்றாகிறது. பரவலாக அனைவரிடமும் இருந்த இவ்வறிவு ஒரு சிலரிடம் மட்டுமில்லாமல் போகும்போது, அவர்களை "சூத்திரன்" (கவலை கொள்பவன் / மெய்யறிவு இல்லாதவன்) என்று ஏளனமாக அழைத்திருக்கவேண்டும். அவர்களை மெய்யாசிரியர்களிடம் சென்று, தங்கியிருந்து, பணிவிடை செய்து, மெய்யறிவு பெற அறிவுறுத்தி இருக்கவேண்டும். காலப்போக்கில் ஏளனம் என்பது அருவருப்பாகவும், மெய்யாசிரியர் என்பது மேல்தட்டு மக்களாகவும் மாறியிருக்கவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌼🌼🌼🌼🌼

No comments:

Post a Comment