Monday, March 14, 2022

கோவிலில் விளக்கேற்றுதல் = தன்னலமற்று வாழ்தல்!!



ஒரு திருக்கோயிலில் விளக்கேற்றுகையில் விளக்கேற்றும் பெண்ணின் கூந்தலில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சிசிடிவி-யில் பதிவாகியுள்ள அந்த காட்சிகளை, விழிப்புணர்விற்காக பகிர்கிறேன் பேர்வழியென்று, பின்வரும் குறிப்புடன் பகிர்ந்துள்ளார்கள்:

தலைவிரி கோலமாக கோயிலுக்கு வரக்கூடாது என்பது இதற்காகத்தான் என்பது இப்போதாவது புரிகிறதா?

ஒரு வேளை, துப்பட்டாவோ சேலையோ தீ பிடித்திருந்தால், "துப்பட்டா / சேலை அணிந்து வரக்கூடாது என்பது இப்போதாவது புரிகிறதா?" என்பார்களோ?

விளக்கேற்றுவதன் உட்பொருள் தெரிந்திருந்தால் இந்த விபத்தே நடந்திருக்காது!

🌷 விளக்கு நமதுடலுக்கு சமம். எரியும் நெருப்பு நமதுயிருக்கு சமம்.

🌷 ஒரு விளக்கு எரிவதால் அதற்கெந்த பயனுமில்லை. மற்றவர்களுக்குத்தான் பயன் கிடைக்கும். விளக்கேற்றுதல் எனில் தன்னலமற்று வாழ்தலாகும்.

🌷 அக்காலத்தில் மொத்த ஊரும் திருத்தலங்களில் இருந்தே இயங்கின. எனவே, "கோவிலில் விளக்கேற்று" எனில் "தன்னலமற்று ஊருக்காக உழை" என்று பொருள்.

🌷 எவ்வளவு போராடினாலும் சிலருக்கு ஒன்றுமே கிட்டாது. இப்பிறவியில் நமது கொடுப்பினை அவ்வளவுதான் என்பதையுணர்ந்து அடங்கும் முதிர்ச்சியும் இருக்காது. அத்தகைய மனிதர்களின் ஆற்றலை மடை திருப்பிவிடும் நுட்பம்தான் "கோவிலில் விளக்கேற்றுதல்" ஆகும்.

🌷 எத்தனை விளக்குகளை ஏற்றினாலும், வகை வகையாக ஏற்றினாலும், எப்போது ஏற்றினாலும் அவற்றின் உண்மைப் பொருள் மேற்கண்ட ஒன்றுதான்!

இந்த உண்மை தெரிந்திருந்தால் அந்த பெண் விளக்கேற்றியிருப்பாரா? அல்லது, எத்தனை பேர் விளக்கேற்றிவிடப்போகிறார்கள் (அதாவது, தன்னலமற்று வாழ்ந்துவிடப்போகிறார்கள்)? 😊

oOo

அந்த பெண் உள்ளே வரும்போது 2 விளக்குகளைக் கொண்டுவருகிறார். இறையுருவங்களுக்கு முன் நின்று, வலது கையிலுள்ள விளக்கை அரைகுறையாக சுற்றுகிறார். இந்த செய்கையும், பொருள் புரியாமல் பூசாரிகளை பின்பற்றுவதால் விளைந்துள்ளது.

இறையுருவின் முன், தனது தட்டிலுள்ள விளக்கை, பூசாரி சுற்றுவது நமக்காக! இறைவனுக்காக அல்ல!!

o 1 சுற்று - அனைத்தும் நீயே
o 3 சுற்றுகள் - நனவு, கனவு, தூக்கம் ஆகிய 3 நிலைகளிலும் மாறாமலிருக்கும் பொருள் நீயே

ஓர் அடியாராக திருக்கோவிலுக்குள் நுழைந்த பின்னர், "எப்போதும் மாறாமலிருக்கும் பொருள் நாமே" என்ற பேருண்மையை உணர முயற்சிக்க வேண்டுமேயன்றி, பூசாரியின் செய்கையை நகலெடுப்பதால் எந்த பயனுமில்லை.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment