Thursday, July 8, 2021

அழுதால் இறைவனை அடையமுடியுமா?

யானேபொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே

-- திரு மாணிக்கவாசகப் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️, #8.5.90

மரபுவழி பொருள்: நான் வஞ்சம் நிறைந்தவன். என் மனமும் தூய்மையானதல்ல. என் அன்பும் போலியாகும். நான் தீய செயல்களை செய்கின்றவனாலும், உன்னை நினைத்து மனம் உருகி அழுதால், உன்னை அடைய முடியும்.

(அதாவது, பொய்மையால் இறைவனை அடைய முடியாது. உண்மையான அன்பினால்தான் (பத்திமையால்) அடையமுடியும்.)

oOOo

"வினையேன்" என்பதற்கு "தீவினைகள் புரிபவன்" என்று பொருள் கொள்வதை விட "நான் எழுதுகிறேன்", "நான் படிக்கிறேன்", "நான் பேசுகிறேன்" என்று வினைகளை "தான் புரிவதாக எண்ணுகிறவன்" என்று பொருள் கொள்வது சரியாகவிருக்கும். இதற்கு காரணம், உடலல்லாத நம்மை நாம் உடலென்று தவறாக எண்ணுவதுதான் காரணம். எப்போது இது சரியாகும்?

அழுதால் சரியாகும் என்று குறிப்புக் கொடுக்கிறார் பெருமான். எவ்வாறு அழுதால்? வினையேன் அழுதால். இதற்கு, "தீவினைகளைப் புரிபவனான நான் அழுது அரற்றினால்" என்று பொருள் கொள்வதை விட, "வினைகளை நான் புரிவதாகக் கருதும் எனது தவறான எண்ணத்தை விட்டொழித்தால்" என்று பொருள் கொள்வது சிறப்பாகும்.

வேறு வழியேயின்றி ஒரு பொருளை யாருக்காவது கொடுக்க நேர்ந்தால் என்ன சொல்கிறோம்? அழுதோம் என்கிறோம். (எ.கா.: இப்பத்தான் அவனுக்கு தண்டம் அழுதுட்டு வர்றேன்). இது போன்று, "நான் வினை புரிகிறேன்" என்ற தவறான எண்ணத்தை (வினையேன்) விட்டொழித்தால் (அழுதால்) இறையுணர்வைப் பெறலாம்!!

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி!! 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment