Saturday, September 23, 2023

பிள்ளையாரை நீர்நிலையில் கரைத்தல் - உட்பொருள்


பிள்ளையாரின் பிறந்தநாள் எவ்வளவு சிறப்பு பெறுகிறதோ அவ்வளவு சிறப்பு அவரது திருவுருவை கரைக்கும் வினைமுறைக்கும் (ஆரியத்தில், சடங்கு) உண்டு. இது வேறெந்த திருவுருவுக்கும் கிடைக்காத சிறப்பாகும்.

பிள்ளையாரை தனிக்கடவுளாக காணும்போது, அவரது திருவுருவம் உள்ளபொருளை (பரம்பொருளை) குறிக்கும். சிவ குடும்பத்தில் ஒருவராக காணும்போது நமது அறிவை குறிக்கும். இங்கும் நமது அறிவை மட்டும் குறிக்கும்.

🌷 கரைக்கப்படும் நீர்நிலை - நாம் வாழும் இவ்வையகம்.

🌷 கரைக்கப்படும் பிள்ளையார் - பிறப்பு முதல் இறப்பு வரை நாம் சேர்த்து வைத்திருக்கும் யாவும்.

எதையெல்லாம் சேர்த்து வைத்திருக்கிறோம்?

நான் மனிதன்.
நான் ஆண் / பெண்.
இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவன்.
இன்ன படித்திருக்கிறேன்.
இன்ன வேலை / தொழில் செய்கிறேன்.
இன்ன சொத்துகள் சேர்த்திருக்கிறேன்.
இன்ன பதவிகள் வகித்திருக்கிறேன்.
இவர்கள் எனது குடும்பத்தினர்.
இன்ன ஊர்களுக்கு / நாடுகளுக்கு / கோயில்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.
இன்ன திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளேன்.
இன்ன கடவுளை வணங்குகிறேன்.
இவர் எனது மெய்யாசிரியர்.
நான் அருள் பெற்றவன் / தீமையாளன்பிள்ளையார் நான்மை, விநாயகர் சதுர்த்தி, பிள்ளையாரை கரைத்தல்.
...
...

மொத்தத்தில் இவையனைத்தையும் சேர்த்து இரண்டு சொற்களில் அடக்க முடியும்: நான் இன்னார்!

பிறவியின் இறுதியில், அல்லது, பிறவி முடிந்தவுடன் இந்த "இன்னாரை" அப்படியே விட்டுவிடவேண்டும் என்பதே பிள்ளையாரை நீர்நிலையில் கரைக்கும் வினைமுறையின் உட்பொருளாகும்.

ஏன் விடவேண்டும்?

"இன்னார்" என்பதை விட்டாலும், நான் எனும் நமது தன்மையுணர்வை விடமுடியாது. அதுதான் நாம். அதுதான் உள்ளபொருள். அந்நிலையில் அப்படியேயிருத்தலே நிலைபேறு / வீடுபேறு ஆகும். வினைப்பயன்கள் முழுவதும் தீர்ந்திருந்தால் மட்டுமே இந்நிலையில் நீடித்திருக்க முடியும். இல்லையெனில்... கோவிந்தா! மீதமிருக்கும் ஏதாவதொரு பற்றை வைத்து அன்னை மாயை /மாயக்கண்ணன் தனது தில்லாலங்கடி வேலையை செய்து, நம்மை மீண்டும் இந்த ஜிஎஸ்டி-சூழ் வையகத்திற்குள் தள்ளிவிடுவார்.

அப்படி மீண்டும் பிறக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இப்போது நாமிருக்கும் சூழலைவிட மேலான சூழல் கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம். ஒரு வேளை, கீழான சூழலமைந்தால்... தாவரம், புழு, பூச்சி, விலங்கு, பறவை என அஃறிணையாக பிறந்தால், அல்லது, பிச்சையெடுக்கும் பெற்றோருக்கு பிறந்தால், கொடுமையான பெற்றோர் / உடன்பிறந்தோருடன் பிறந்தால், விலைமகளுக்கு பிறந்தால், போக்கற்றவனாக (ஆரியத்தில், திக்கற்றவனாக - அநாதையாக) பிறந்தால், உடல் / மன ஊனத்துடன் பிறந்தால்... மிகவும் வருந்துவோம், துன்பப்படுவோம்.

மறுபிறவி கிடைத்தவுடன் முற்பிறவியின் நினைவுகள் அப்படியே நீங்கிவிடாது. மெல்ல மெல்லவே நீங்கும். ஒரு வேளை, முற்பிறவியில் மனிதனாக பிறந்து, சற்று நல்ல சூழலில் வாழ்ந்துவிட்டு, இப்போது, அதே பகுதியில் குப்பைத்தொட்டியை கிளறும் ஒரு நாய்க்கு மகவாக பிறந்து, முற்பிறவியில் தான் வாழ்ந்த வீட்டை, தன்னுடனிருந்த மக்களை காணும் நிலை ஏற்பட்டால் எப்படியிருக்கும்? 😔

எனவேதான், பிறவி முடியும் தருவாயில், அல்லது, பிறவி முடிந்தவுடன் நமது "பிள்ளையாரை" (நாம் சேர்த்தவற்றை) முழுவதுமாக கரைக்கச் சொல்லி நம் பெரியவர்கள் அறிவுருத்தியுள்ளனர்.

கரைத்தால் மட்டும் போதாது; நிலைபெறவும் தெரிந்திருக்கவேண்டும். இது முடியாதெனில், குறைந்தது, அடுத்த பிறவியில் எப்படிப்பட்ட சூழல் கிடைத்தாலும், அழுது அரற்றாது, அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனமுதிர்ச்சியையாவது வளர்த்துக் கொள்ளவேண்டும். அதாவது, பழைய பிள்ளையாரை கரைத்துவிட்டு, புதிய பிள்ளையாரை, அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், அப்படியே வரவேற்க அணியமாகவேண்டும்! (தயார் - தமிழல்ல)

oOo

... குருவடிவாகி குவலையந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக்கருளி 
கோடாயுதத்தால் கொடுவினை களைந்த ...

அருமையான இவ்வரிகள் "விநாயகர் அகவலில்" இடம் பெற்றுள்ளன. பிள்ளையாரை போற்றிப் பாடுவது போன்று வரிகள் அமைத்து, உண்மையில், தனது மெய்யாசிரியரை போற்றிப் பாடியுள்ளார் ஒளவைப் பாட்டி! 😍

🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment