Monday, September 18, 2023

பிள்ளையார் பிறந்தநாள் / பிள்ளையார் நான்மை / பிள்ளையார் சதுர்த்தி


இன்று பிள்ளையாரின் பிறந்தநாள் - அதாவது, பிள்ளையார் என்ற இறையுருவத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் நம் பெரியவர்களுக்கு தோன்றிய நாள்; அல்லது, அப்படியோர் உருவத்தை உருவாக்கி, அவர்கள் வெளியிட்ட திருநாள்.

🌷 யானைத் திருமேனி - நினைவுகளின் தொகுப்பே நீ!

🌷 பாசம் - பற்றுகளை சேர்த்துக்கொள்வதும் நீயே!

🌷 மழு - பற்றுகளை அறுத்தெறிவதும் நீயே!

🌷 ஒடித்த தந்தம் - உன்னுள்ளிருந்து வெளிப்படும் எண்ணங்களையும் காட்சிகளையும் கொண்டு, உனது மகாபாரதத்தை (உனது வாழ்வை) எழுதுபவனும் நீயே!

🌷 சிவலிங்கம் / இனிப்பு - வீடுபேறும் / மெய்யறிவும் உன்னிடமேயுள்ளது.

🌷 வசதியாக அமர்ந்திருத்தல் - நீ அசையாத பொருள் (காட்சிகள்தாம் அசைகின்றன).

🌷 மடக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் உன் கண்ணோக்கத்தை, அகமுகமாக உன் மீதே (உனது தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டிரு.

🌷 மூஞ்சூறு - பிள்ளையார் ஒளியெனில் மூஞ்சூறு இருளாகும். பிள்ளையார் அறிவெனில் மூஞ்சூறு அறியாமையாகும். எச்சரிக்கையாக இல்லாவிடில், அறியாமை மெய்யறிவை தின்றுவிடும் (மூஞ்சூறு இனிப்பை கொறிப்பது போன்று).

மொத்தத்தில் பிள்ளையாரின் திருவுருவம் தெரிவிப்பது: உன் வாழ்க்கை உன் கையில்!!

வணங்குதல் எனில் இணங்குதலாகும். பிள்ளையாரை வணங்குதல் எனில் அவரது உருவம் உணர்த்தும் கருத்துகளோடு இணங்குதலாகும். அவ்வாறு இணங்கி அமைதியடைதலே பிள்ளையார் வழிபாட்டின் உட்பொருளாகும்!!

oOOo

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

-- ஒளவையார் 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment