Sunday, August 27, 2023

திரு பண்ணாரி அம்மன் என்ற திருப்பெயருக்குள் புதைந்திருக்கும் பொருட்கள்!! 🌺🙏🏽🙇🏽‍♂️


🔸 பண்ணாரி - பண் + ஆரி

🔸 ஆரி - ஆர் -> ஆரி - அருமை, மேன்மை, சிறப்பு, அழகு.

🔸 பண் - இசை, நரம்பு இசைக்கருவி, கூத்து, குதிரைக்கலனை (Saddle), ஒப்பனை, விலங்கு செல்லும் வழி, கப்பலின் இடப்பக்கம், தொண்டு, நீர் நிலை.

இனி, இவற்றை இணைத்துப் பார்ப்போம்.

🌷 இசை + அருமை / மேன்மை / சிறப்பு / அழகு + அம்மன் - அருமையான இசையை வெளிப்படுத்தும் அம்மன்.

இசையென்பது எதை குறிக்கிறது? நம் மனதில் தோன்றும் எண்ணங்களை! நாம் காணும் காட்சிகளை!!

🌷 நரம்பு இசைக்கருவி + அருமை... + அம்மன் - அருமையான நரம்பு இசைக்கருவியை மீட்டும் அம்மன்.

எது அப்படிப்பட்ட கருவி? நமதுடல்!!

🌷 கூத்து + அருமை... + அம்மன் - அருமையான கூத்தாடும் அம்மன்.

எது அப்படிப்பட்ட கூத்து? நமது வாழ்க்கை; நாம் வாழும் இவ்வையகம்!!

🌷 ஒப்பனை + அருமை... + அம்மன் - அருமையான ஒப்பனையாகிய அம்மன்.

எது அப்படிப்பட்ட ஒப்பனை? நமது உடல்தானது!

யாருக்கு அப்படிப்பட்ட ஒப்பனை? நமக்கு. 

உடலை ஆதனுக்கு (ஆரியத்தில், ஆன்மா) போர்த்திய போர்வையாகவும் கொள்வார்கள்; ஆதனுக்கு அணிவிக்கப்பட்ட அணிகலனாகவும் (ஒப்பனை) கொள்வார்கள்.

🌷 விலங்கு செல்லும் வழி + அருமை... + அம்மன் - விலங்கு செல்லும் அருமையான வழியாகிய அம்மன்.

எந்த விலங்கு? நமது மனமெனும் விலங்கு!! மனம் செல்லும் வழி. மனம் போன போக்கு. மனமடங்கினால் அப்பன். மனம் வெளிப்பட்டால் அன்னை.

🌷 கப்பலின் இடப்பக்கம் + அருமை... + அம்மன் - கப்பலின் இடப்பக்கமாகிய அருமையான அம்மன்.

எனில், வலப்பக்கம் அப்பனுடையதாகிறது. இடப்பக்கம் + வலப்பக்கம் = அம்மையப்பர் = கப்பல். எனில், கப்பல் எதை குறிக்கிறது? நாமே அந்த கப்பல்!! அசைவற்ற நமது தன்மையுணர்வு அப்பனாகும். அசையும் நமது மனம் & உடல் அம்மையாகும்.

🌷 தொண்டு + அருமை... + அம்மன் - அருமையாக தொண்டாற்றும் அம்மன்.

திரு விசாலாட்சி அன்னை எவற்றையெல்லாம் திரு விசுவநாதருக்கு உணவாக பரிமாறுகிறாரோ அவற்றையெல்லாம் "அப்பனுக்கு அம்மை ஆற்றும் தொண்டு" என்று கொண்டால் நமக்கு கிடைப்பது "அருமையாக தொண்டாற்றும் பண்ணாரி அம்மன்"!!

எவற்றையெல்லாம் அன்னை பரிமாறுகிறார்? அல்லது, எவற்றையெல்லாம் பரிமாறும் தொண்டு புரிகிறார்? எண்ணங்கள் மற்றும் ஐம்புலன்களின் வழியே கிடைக்கும் நுகர்ச்சிகளே (ஆரியத்தில், அனுபவங்கள்) அன்னை நமக்கு பரிமாறும் உணவாகும். இதுவே அவர் நமக்கு ஆற்றும் சிறந்த தொண்டுமாகும்.

🌷 நீர்நிலை + அருமை... + அம்மன் - அருமையான நீர் நிலையாகிய அம்மன்.

அசைவற்ற உள்ளபொருளை (இறைவனை) மலையாகவும், அசையும் மற்றனைத்தையும் (அன்னையை) நீர்நிலையாகவும் கொள்வது மரபாகும். எ.கா.: திருக்கயிலாய மலை & மானசரோவர் நீர்நிலை.

அசையும் தன்மையை தவிர, நீர்நிலையின் இன்னொரு தன்மை: எதிரொளிப்பு (ஆரியத்தில், பிரதிபலிப்பு)!

நமக்கு கிடைத்திருக்கும் உடல், நம் கண்முன்னே விரியும் வையகம் என யாவும் நமது எதிரொளிப்பாகும். அதாவது, முற்பிறவிகளின் வினைப்பயன்களாகும். எதற்கு இப்படிப்பட்ட எதிரொளிப்பு?

இதற்கு பகவான் திரு இரமண மாமுனிவர் கொடுக்கும் பதில்: காண்பான் என்றொருவன் இருப்பதை உணர்வதற்காக!!

oOo

🌸 பண்ணாரி அம்மன் திருக்கோயில் ஓர் உயிருள்ள கோயிலாகும். கருவறையின் கீழே ஒரு பெருமான் திருநீற்று நிலையிலிருக்கிறார்.

🌸 அப்படியொருவர் இருக்கிறாரென்பதை குறிப்பதற்காக வைக்கப்பட்ட அடையாளச் சின்னம்தான் பண்ணாரி அம்மன் எனும் திருவுருவமாகும். 

🌸 இறை-உயிர்-தளை (ஆரியத்தில், பசு-பதி-பாசம்) பற்றிய அப்பெருமானின் கண்ணோக்கத்தை பண்ணாரி அம்மன் எனும் திருவுருவாக வடித்துள்ளனரென்று கொள்ளலாம். 

🌸 அல்லது, அந்த திருவிடம் (ஆரியத்தில், சமாதியிடம்) அம்மன் வழிபாட்டினரிடம் சென்றுவிட்டதால், அவர்களது நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு ஒரு திருவுருவை வடித்து வைத்துள்ளனரென்றும் கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment