Wednesday, August 23, 2023

7 கன்னியர் - சிறு விளக்கம்


தேவாரப் பாடல் பெற்ற திருக்கடம்பந்துறை (குளித்தலை) திரு கடம்பங்காட்டு அப்பர் (கடம்பவனநாதர்) திருக்கோயிலின் கருவறை பின்புற சுவற்றில் 7 கன்னியர் புடைப்புச்சிற்பமாக இருப்பதைக் காணலாம். இதற்கு அத்திருக்கோயிலின் புனைவுக்கதை கூறும் விளக்கம்: கருவறை உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமானை வணங்கியவர்களுள் 7 கன்னியரும் அடங்குவராம். அதை குறிக்கவே 7 கன்னியரின் உருவம் புடைப்பாக செதுக்கப்பட்டுள்ளதாம். 🤦🏽🤦🏽

("புகை நமக்கு பகை", "குடி குடியை கெடுக்கும்" என்று அச்சிடுவது போன்று, இதுபோன்ற பிட்டுகளுடன், "தல புருடாக்கள் அன்பர்களுக்கும், இந்து சமயத்திற்கும் கேடு" என்று அச்சிடவேண்டும். அல்லது, திரைப்படங்களுக்கு தரச்சான்றிதழ் வழங்குவது போன்று, இவைகளுக்கும் வழங்கவேண்டும். எ.கா.: "அனைவருக்கும் பொருந்தும்", "வயது வந்தவர்களுக்கு மட்டும்", "மனநலம் பாதிக்கக்கூடும்"... 👊🏽👊🏽👊🏽)

கடம்பந்துறை கோயில் உயிருள்ள திருக்கோயிலாகும். அதாவது, இங்குள்ள கருவறை உடையவரின் கீழே ஒரு பெருமான் திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி) இருக்கிறாரென்பது பொருளாகும். அவரது நிலையை குறிக்கும் இறையுருவங்கள்தாம் கருவறையிலிருக்கும்:

🌷 சிவலிங்கம்

- சீரான தண்டுப்பகுதி - உள்ளபொருளாய் சமைந்துள்ள பெருமானின் நிலை என்றும் மாறாதது

- சற்றே வளைந்துள்ள உச்சிப்பகுதி - பெருமானின் நிலை முடிவற்றது

🌷 7 கன்னியர்

"7 கன்னியர்" என்றவுடன் பிராம்மி, வாராகி... என்ற ஆரியப் பெயர்வரிசையை நாம் நினைவுகூறும்படி கைங்கரியம் செய்திருக்கிறார்கள். இவ்விடத்தில், இது தவறாகும்!

இங்கு, 7 கன்னியர் எனில் நிணநீர், குருதி, தசை, கொழுப்பு, எலும்பு, எலும்புச் சோறு மற்றும் வெண்ணீர் ஆகும்.

அதாவது, 7 கன்னியர் = நமது உடல்!!

எனில், 7 கன்னியரின் புடைப்பிலிருந்து நாம் எய்தக்கூடிய முடிவுகள்:

🔸 உடையவரின் கீழேயிருக்கும் பெருமான் உடலுடன் உள்ளேயிறங்கி இருக்கலாம்.

(திரு சதாசிவ பிரம்மேந்திரப் பெருமானும் உடலுடன் திருநீற்றுக் குழிக்குள் இறங்கினாரென்பதை இங்கு நினைவுகூறலாம்.)

🔸 அல்லது, அப்பெருமான் இன்றும் உடல் தாங்கியிருக்கலாம்.

(வள்ளிமலை திருப்பணியின்போது, மலைப்பாதையில், ஓரிடத்திலிருந்த கற்பலகையை நகர்த்திப் பார்த்தபோது, உள்ளே 4 (அல்லது, 5) பெருமான்கள் எலும்புந்தோலுமாக, திருநீற்றுநிலையில் இருப்பதைக் கண்டு திரு கிருபானந்த வாரியாரும், அவருடனிருந்த இன்னொருவரும் மயங்கி விழுந்த நிகழ்வை இங்கு நினைவுகூறலாம்.)

🔸 அல்லது, உடலென்பது மேற்கண்ட 7 பொருட்களால் ஆனது என்ற கூற்றை வையகத்திற்கு வழங்கியது அப்பெருமானாக இருக்கலாம்! அவரது பங்களிப்பை வையகம் மறவாதிருக்க, 7 கன்னியர் புடைப்பை கருவறையில் வைத்திருக்கிறார்கள் என்று கொள்ளலாம்.

oOo

சில திருக்கோயில்களில், உடையவருக்கு பின்புறம் அம்மையப்பர் திருவுருவை செதுக்கியிருப்பார்கள். இதற்கு "அவ்விடத்தில் திரு அகத்தியப் பெருமானுக்கு இறைவன் திருமணக்காட்சியை காட்டியருளினார்" என்றொரு கதையை புனைந்திருப்பார்கள்.

திருமணக்காட்சி, திருக்கயிலாயக்காட்சி, சூழ்ச்சியில்லாக்காட்சி என பல பெயர்களில் அழைக்கப்படும் அக்காட்சியில் காண்பானும் (அப்பன் - நாம்) உண்டு, காட்சியும் (அம்மை - நம்மை தவிர மீதமனைத்தும்) உண்டு. உடலல்லாத நம்மை உடலாக காணும் சூழ்ச்சி (அன்னை மாயை / மாயோன்) மட்டுமிருக்காது. இப்போது, வையகம் என்ற திரைப்படத்திற்குள் நாமிருப்பது போன்று தோன்றுகிறது. திருக்கயிலாயக்காட்சியில், நாம் ஒரு புறமும் (அப்பன்), காட்சி ஒரு புறமும் (அம்மை) தோன்றும். இதையே அம்மையப்பராக உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வுருவகம் இருக்கும் திருக்கோயில்களில் உறையும் பெருமான்கள் (கருவறை உடையவர்களுக்கு கீழே திருநீற்று நிலையிலிருப்பவர்கள்) அத்தகைய காட்சியை கண்டுகொண்டிருக்கிறார்கள் என்பது பொருளாகும்.

oOo

சென்னை திருவேற்காட்டிலுள்ள திரு வேற்காட்டீசர் திருக்கோயிலின் கருவறையில் அம்மையப்பருடன் பிள்ளையாரையும் காணலாம்.

திருக்கயிலாயக்காட்சியில் காண்பான் (அப்பன்) காட்சியுடன் (அம்மை), காணும் அறிவும் (பிள்ளையார்) உடனிருக்கிறது என்பது அங்கு உறையும் பெருமானின் கருத்து என்று கொள்ளலாம்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment