Wednesday, January 4, 2023

வைகுண்ட ஏகாதசி - சில சிந்தனைகள்



🌷 வைகுண்ட ஏகாதசி - திரு நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️ உடலிலிருந்து விடுதலை (முக்தி) பெற்ற நாள்.

🌷 மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வாரின் உயிர் வெளியேறியதாக தொன்நம்பிக்கை. இதையுணர்த்தவே திருவரங்கத்து நம்பெருமாள் (விழாத்திருமேனி) பரமபதவாயில் வழியாக கொண்டுவரப்படுகிறார். கருவறை தலைக்கு சமம். பரமபதவாயில் தலையுச்சிக்கு சமம்.

🌷 நம்மாழ்வாரின் விடுதலை நிகழ்வு வெகு சிறப்பாக திருவரங்கத்தில் கொண்டாடப்பட்டாலும், அவர் திருநீற்று நிலையை அடைந்தது ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூரில்தான். எனில், திருவரங்கத்தில் (உடையவருக்கு கீழே) திருநீற்று நிலையிலிருப்பது... 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🌷 முதன்முதலில் திருவரங்கத்தில் நம்மாழ்வாருக்கு விழா எடுத்தது திருமங்கையாழ்வாராவார். ஒரு நாள் விழாவாக தொடங்கப்பட்டது, பின்னர் வந்தவர்களால் 10 நாட்கள், 20 நாட்கள் என விரிவு படுத்தப்பட்டு தற்போதைய நிலையை பிற்காலத்தில் அடைந்தது.

oOo

வைகுண்ட ஏகாதசி என்றதும் "பரமபதவாயில் வழியாக வெளியேறுவது" என்ற படி நம் நினைவுக்கு வரும்படி விழாவை வடிவமைத்திருக்கிறார்கள். இதை இரு வகையாக அணுகலாம்.

🔸 முதலில், நம்மாழ்வாரை வைத்து அணுகுவோம்:

விழாத்திருமேனி பரமபதவாயில் கடக்கும்போது, மண்டையோட்டின் உச்சிப்பகுதி திறந்து, அதன் வழியாக நம்மாழ்வார் வெளியேறினார் என்ற நிகழ்வு நம் நினைவுக்கு வரவேண்டும். நினைவு வருகிறதா?

நம்மாழ்வார் மெய்யறிவு பெற்ற / காட்டிய வழியைப் பற்றி சிந்திப்பது நல்லதா? அல்லது, அவர் வெளியேறிய வகையைப் பற்றி சிந்திப்பது நல்லதா? 

எந்த வகையில் அவர் வெளியேறியிருந்தால் என்ன? 

வேறு வகையில் அவர் வெளியேறியிருந்தால் நிலைபேற்றினை அடைந்திருக்கமாட்டாரா?

வெளியேறும் வகை அவர் கையிலாயிருந்தது? 

உடலைவிட்டு அவர் வெளியேறினாரா? அல்லது, அவரைவிட்டு உடல் விலகியதா?

🔸 அடுத்து, நம்மை வைத்து அணுகுவோம்:

வைகுண்ட ஏகாதசி என்றதும் நம் நினைவுக்கு வருவனவற்றில் ஒன்று, "பரமபதவாயில் வழியாக வெளியேறினால் வைகுண்டம் உறுதியாகக்கிட்டும்" என்ற நம்பிக்கையாகும். அதாவது, நம்மாழ்வாரைப்போன்று நமது மண்டையோட்டின் உச்சி திறந்து, அதன் வழியாக நாம் வெளியேறினால் நிலைபேறு கிட்டும் என்பது பொருளாகும். இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ வரலாற்றில் திரு கணபதி முனி என்றொரு ஆரியக்கவிஞர் இடம்பெறுகிறார். கடுமையாக வடக்கிருந்ததின் விளைவாக மண்டையோடு திறக்கப்பெற்றவர். ஆனால், பிறவி முடியும்போதும் பற்றுகள் மீதமிருந்ததால் அவருக்கு நிலைபேறு கிட்டவில்லை. இது பகவானே சொன்ன செய்தியாகும்.

ஆக, மண்டையோடு திறப்பதினால் பயனில்லை என்பது உறுதியாகிறது. 

oOo

"மண்டையோடு பிளந்து வெளியேறுவது" என்று வடிவமைத்ததைவிட, "உடலெனும் சிறையிலிருந்து வெளியேறுவது" என்று விழாவை வடிவமைத்திருந்தால் சிறப்பாக மட்டுமில்லாமல், பயனுள்ளதாகவும் அமைந்திருக்கும். ஏனெனில், நம்மை பற்றிய மெய்யறிவை பெறுவதென்பது ஒரு படியை கடப்பதற்கு சமமெனில், அதில் நிலைபெறுவதென்பது பத்து படிகளை கடப்பதற்கு சமமாகும்!!

பெருமாளின் திருவிறக்கக் கதைகள் யாவற்றிலும், எதிரியை அவர் தனித்து நின்றே எதிர்கொள்வார் - இரு கதைகளைத் தவிர: நரகாசுரன் & கம்சன். இருவரும் குறிப்பது... "நான் இவ்வுடல்" என்ற எண்ணத்தை! அவ்வளவு கடினமானது இந்த தப்பெண்ணத்தை விடுவதென்பது!

oOOo

யானே என்னை அறியகிலாதே
யானே என் தனதே என்றிருந்தேன்
யானே நீ என் உடைமையும் நீயே
வானே ஏத்தும் எம் வானவர் ஏறே

-- நம்மாழ்வார் 🌺🙏🏽🙇🏽‍♂️

(நம்மாழ்வாரின் இப்பாடலில் இரண்டன்மை (அத்துவைதம்) வெளிப்படுவதாக பகவான் அருளியிருக்கிறார்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment