Tuesday, January 17, 2023

"படம்பக்கப் பெருமான்" & "கண்கூடு" - சிறுவிளக்கம்


மிக மிக பழமையான திருவிடமான திருவொற்றியூரில் (சென்னை) குடிகொண்டிருக்கும் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர்களிலொன்று "படம்பக்கப் பெருமான்" ஆகும். இந்த அருமையான தமிழ் பெயரின் பொருள்: படத்தின் பக்கமிருக்கும் பெருமான்.

எந்த படத்தின் பக்கம்? வையகம் (உலகம்) எனும் திரைப்படத்தின் பக்கம்.

திரையரங்கில் நாம் ஒருபுறம் அமர்ந்திருக்க, எதிர்புறத்திலுள்ள திரையில் காட்சிகள் தெரிவதுபோன்று, அவருக்கு வையகம் தோன்றுகிறதென்பது பொருளாகும். இப்படி தோன்றும் காட்சிக்கு திருக்கயிலாயக் காட்சியென்று பெயர்.

இக்காட்சியில் காண்பான் (அப்பன்) உண்டு; காட்சியும் (அம்மை) உண்டு. ஆனால், காட்சியில் பொய்தன்மையில்லை (மனம் / மாயை). அதாவது, தோன்றும் காட்சி "காட்சிமட்டுமே & உண்மையல்ல" என்ற அறிவுமிருக்கும். தற்போது நமக்கு தோன்றும் வையகக் காட்சியை பொய்யென்றால் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும். இதுவே, திருக்கயிலாயக் காட்சியின்போது, காட்சியை உண்மையென்றால் ஏற்றுக்கொள்ளமாட்டோம்! ஏன்? மீண்டும் மேற்கண்ட பதில்தான்: காட்சியின் தன்மை அப்படிப்பட்டதாகும்! 😊

திருக்கயிலாயக் காட்சிக்கு அன்னைத் தமிழில் ஓர் அருமையான பெயருண்டு: கண்கூடு!!

ஒன்று கண்கூடாகத் தெரிகிறது எனில் பொய்யின் கலப்பில்லாமல், உண்மை தெளிவாகப் புரிகிறதென்பது பொருளாகும். இப்பொருளை மேற்கண்ட திருக்கயிலாயக் காட்சியிலிருந்து எடுத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். எப்படியென்று பார்ப்போம்.

ஒரு தொலைநோக்கி வழியாக காண்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். ஒரு முனையிலிருந்து நாம் பார்த்துக்கொண்டிருப்போம். இன்னொரு முனையில் காட்சி தெரியும். இடையிலுள்ள தொலைநோக்கியின் உட்புறப் பகுதிகளும் தெரியும். இதே போன்றொரு அமைப்பு திருக்கயிலாயக் காட்சியின்போது தெரியும். ஒருபுறம் காணும் நாம், இன்னொருபுறம் காட்சி, இடையில் நம் கண்கள் அமைந்திருக்கும் மண்டையோட்டின் உட்பகுதி (கண்கூடு) தெரியும். இப்போது, தெள்ளத்தெளிவாக,

- நாம் உடலல்ல என்பதை உணர்வோம்
- நாம் என்றுமே நாமாகத்தான் இருந்துள்ளோம் என்பதை உணர்வோம்
- நாம் தேடியது நம்மையே என்பதை உணர்வோம்
- தோன்றும் காட்சி காட்சிமாத்திரமே - உண்மையல்ல - என்பதையும் உணர்வோம்

மொத்தத்தில், உண்மை உண்மையாகவும், பொய் பொய்யாகவும் தோன்றும். மாற்றி கருதுவதற்கு வாய்ப்பேயில்லை. இதற்கு கண்கள் அமைந்திருக்கும் கூடுகளே ஏதுவாவதால், பொய்யின் கலப்பின்றி உண்மை தெள்ளத்தெளிவாக புலப்படும் சூழ்நிலைக்கு "கண்கூடு" என்று பெயரிட்டுள்ளனர் நம் முன்னோர். 

முதன்முதலில் இந்த காட்சியைக் கண்டு மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியவர் ஒரு மெய்யறிவாளராகத்தான் (சிவன்) இருக்கமுடியும். அதை ஆராய்ந்து உறுதிசெய்த மற்றவர்களும் மெய்யறிவாளர்களாகவோ அல்லது உள்ளபொருளை பற்றிய அறிவுடைய ஆன்றோராகத்தான் இருக்கமுடியும். "கண்கூடு" என்ற சொல் மட்டுமல்ல; அன்னைத்தமிழின் மொத்த அடித்தளமும் இப்படித்தான் போடப்பட்டிருக்கிறது. இதனால்தான் முதல் சங்கத்தில் சிவபெருமான், முருகர், அகத்தியர் (எல்லோரும் மெய்யறிவாளர்களே) இடம்பெற்றிருந்தனர் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

oOo

🌷 திருக்கயிலாயம் செல்லும் வழியிலுள்ள ஒரு குளத்தில் மூழ்கி, திருவையாற்றிலுள்ள உப்பங்கோட்டை பிள்ளை குளத்தில் (அப்பர் குட்டை) வெளிப்பட்டவுடன், திரு அப்பர் பெருமானுக்கு 🌺🙏🏽🙇🏽‍♂️ இறைவன் திருக்கயிலாயக் காட்சி கொடுத்தாரென்று படித்திருப்போம். அதாவது, மேற்கண்டவாறு வையகக் காட்சியை "கண்கூடாக" பார்த்திருக்கிறார் என்பது பொருளாகும்.

🌷 சில திருக்கோயில்களில், கருவறையினுள்ளே பின்புற சுவற்றில், (உடையவருக்கு பின்புறம்) அம்மையப்பர் திருவுருவை புடைப்பாகவோ அல்லது பாவையாகவோ (சிலையாகவோ) காணலாம். இதன் பொருள் யாதெனில், அக்கருவறையிலுள்ள உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் திருக்கயிலாயக் காட்சியை காணும் பேறு பெற்றவரென்பதாகும்.

🌷 சொக்கர் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பெற்றவரும், பெரும் புகழ்பெற்றவருமான திரு சுந்தரானந்த பெருமானும் 🌺🙏🏽🙇🏽‍♂️ (மதுரையிலுள்ள திரு சுந்தரேசுவரர் எனும் உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருப்பவர்) ஒரு படம்பக்கப் பெருமானாவார். தன் வாழ்நாளின் இறுதிவரை வையகக் காட்சியை "கண்கூடாக" காணும் பேறுபெற்றவராக இருந்திருக்கிறார்.

oOo

ஆழமான பொருள்கொண்டதும், சிந்திக்க எளிமையானதும், நம்மை செம்மையாக்கக்கூடியதுமான "படம்பக்கப் பெருமான்" போன்ற தமிழ் திருப்பெயர்களை பயன்படுத்தி பயன்பெறுவோம். பன்னெடுங்காலமாக நம் முன்னோர்கள் பாடுபட்டுச் சேர்த்த விலைமதிப்பற்ற முத்துக்களைக் காப்போம்.

சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌷🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment