Showing posts with label விழிமனதுக்கு. Show all posts
Showing posts with label விழிமனதுக்கு. Show all posts

Sunday, June 7, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #38: விழி-மனம் - சிறு விளக்கம்

வேண்டும் அயன்மால் விழிமனத்துக்கு எட்டாமல்
நீண்டு தழல்பிழம்பாய் நின்றமலை - ஆண்ட
கருணைமலை ஒப்புஉரைத்துக் காணஅரி தான
அருணமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #38

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸அயன்மால் விழிமனத்துக்கு

அயன்-மால் என்ற சொற்களை ஆசிரியர் பல இடங்களில் பயன்படுத்துகிறார் (இடைக்காட்டுச் சித்தர் 🌺🙏🏽 உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மையின் சொல்வடிவு அல்லவா?) இப்பாடலில், அவற்றுடன் விழி-மனத்துக்கு என்ற சொற்களை சேர்த்துக் கொள்கிறார். மேலோட்டமாக காண்கையில், நான்முகன் மற்றும் திருமால் ஆகிய இருவரின் பார்வை மற்றும் மனதிற்கு அப்பாற்பட்டவர் என்ற பொருள் கிடைக்கும். ஆனால், உண்மையில், நான்முகனை விழியாகவும், திருமாலை மனதாகவும் கருதி, காட்சிகளுக்கும் எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர் இறைவன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

🔹நான்முகன் - நான்கு திசைகள். படைப்பு என்பது என்ன? நான்கு திசைகளிலிருந்தும் வரும் ஒலியும் ஒளியும் தானே! கூத்தப் பெருமானின் மேலிருகைகளில் உள்ள நெருப்பும், உடுக்கையும் உணர்த்துவது இதைத்தான்.

🔹திருமால் - மால் - குழப்பம் - குழப்புவது - இருப்பதை மறைத்து, இல்லாததை இருப்பது போல் காட்டுவது - மனது - எண்ணங்களால் ஆனது.

🔸ஒப்பு உரைத்துக்காண அரிதான அருணமலை

அருணமலை என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். எல்லாம் அதுவே. எனில், அதற்கு சமமான இன்னொன்று இருக்க முடியுமா? எனவே, எதனுடனும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அரிதான பொருளாகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽