Showing posts with label பிரம்ம கபாலம். Show all posts
Showing posts with label பிரம்ம கபாலம். Show all posts

Wednesday, May 13, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #17



முக்கோணம் ஆக முளைத்தமலை முண்டகன்மால் 
அக்கோடு நாகம் அணிந்தமலை - திக்கோடு 
துன்னுமலை தன்னைத் துதிக்கும்அடி யார்உளத்தில் 
மன்னுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #17

🔸முண்டகன்மால் அக்கோடு நாகம் அணிந்தமலை - நான்முகன், மாயோன், சங்குமணிகள் மற்றும் பாம்புகளை அணிந்த மலை.

- நான்முகன் எனில் நான்முகனிடமிருந்து பறிக்கப்பட்ட ஒரு தலை - பிரம்மகபாலம். சிவபெருமானின் கையிலிருப்பது. எவ்வளவு போட்டாலும் நிறையாது! எவ்வளவு எண்ணங்களைப் போட்டாலும், எத்தனை பிறவிகளாகப் போட்டாலும் நிறையாது. அதாவது, வாழ்வு முடிவற்றது!! 

இதை முடிவுக்கு கொண்டு வர - கபாலத்தை நிரப்ப - ஒரே வழிதான் உண்டு: புறமுகமாகச் சென்று கொண்டேயிருக்கும் கவன ஆற்றலை நம் மீதே - தான் என்ற இருப்புணர்வின் மீது - திருப்புவது ஒன்றே வழி! இதைத்தான் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 தன்னாட்டம் (ஆத்மவிசாரம்) என்றழைத்தார்!! இதைத்தான் திரு அன்னபூரணி அன்னையாக 🌺🙏🏽 வடிவமைத்தனர்!!! அன்னையின் கையிலுள்ள கரண்டியிலிருக்கும் உணவு சிவபரம்பொருளுக்கானது - "நீயே அது!" என்பது. தன் மீதே கவனத்தை திருப்புவது!! தன்னாட்டம் எனப்படுவது!!! இப்பேருண்மையை காசி மாநகரிலிருந்த பெரியோர்கள் முதலில் உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எனவே தான், தாம் உணர்ந்த பேருண்மைக்கு அன்னபூரணி என்ற வடிவத்தை கொடுத்து, காசி மாநகரின் அன்னையாக்கி இருக்கிறார்கள்.

(அன்னபூரணி - பல்லாயிரம் பிறவிகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் வாழ்வு என்னும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதால் தன்னாட்ட எண்ணத்தை "பூர்த்தி செய்யும் உணவு" என்றனர்! உணவு+பூர்த்தி - அன்னம்+பூரணம் - அன்னபூரணி!!)

- மாயோன் எனில் மாயை - இல்லாததைக் குறிக்கும். திருமால் என்ற பெயரிலுள்ள மால் என்ற சொல்லின் சரியான பொருள் குழப்பம்!! இல்லாத உலகை இருப்பது போல் காட்டி நம்மைக் குழப்புவது என்று பொருள். மாயையை தன்னுடலாகவே கொண்டிருக்கிறார் எம்பெருமான்.

🔸திக்கோடு துன்னுமலை - எல்லா திசைகளிலும் பரவியுள்ள மலை

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்