Showing posts with label திருமால். Show all posts
Showing posts with label திருமால். Show all posts

Sunday, February 11, 2024

திருவீழிமிழலைப் பெருமானின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெயர் விளக்கம் & அத்திருக்கோயில் புனைவு கதைகளின் உட்பொருள்


🌷 தொன்மையான நிலப்பகுதியிலுள்ள பழமையான திருக்கோயில்
🌷 மூவர் பெருமக்களாலும் பாடல் பெற்ற திருக்கோயில் (23 பதிகங்கள்!!)
🌷 அப்பர் பெருமானும், காழியூர் பிள்ளையாரும் பெருமானிடமிருந்து படிக்காசு பெற்று, பஞ்சம் போக்கிய திருக்கோயில்
🌷 சுந்தரமூர்த்தி நாயனார் பொன் அணிகலன் பெற்ற திருக்கோயில்
🌷 பெருமிழலைக் குறும்ப நாயனார் பிறந்து, இறைத்தொண்டு புரிந்த ஊர்

oOo

புனைவு #1: கருவறையிலுள்ள இறைச்சின்னத்திற்கு பின்னால் அம்மையப்பர் சிலைகள் உள்ளன. இதற்கு, "அகத்தியப் பெருமானுக்கு இறைவன் திருமணக்காட்சியை காட்டியருளிய இடம்" என்று புனைந்திருப்பார்கள்.


புனைவு #2: திருமால் தனது கண்ணை பறித்து, மலராக கருதி, இறைவனை வழிபட்டு, திகிரியை (அசுரத்தில், சக்கிரம்) பெற்ற இடம்.

oOo

🌷 பெருமானின் திருநெறியத்தமிழ் பெயர்: வீழிமிழலைப் பெருமான்.

> வீழி + மிழலை + பெருமான் = வீழிச்செடிகள் + மழலைச்சொல் + மெய்யறிவாளர்.

அதாவது, இறைச்சின்னத்தின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், வீழிச்செடிகள் நிறைந்த பகுதியிலிருப்பவர்; ஒரு குழந்தை பேசுவதைப்போன்று பேசுபவர். அல்லது, குழந்தைத்தனமாக நடந்துகொள்பவர்.

🌷 பெருமானின் அசுரப்பெயர்: நேத்திரார்ப்பணேசுவரர்.

> நேத்திரம் + அர்ப்பணம் + ஈசுவரர் = கண் + [பிறிதொருவருக்கு] உரியதாகக் கொடுத்தல் + மெய்யறிவாளர்.

புனைவுக்கதை #2-ன் படி, இங்கு, பெருமாள் தனது கண்ணை பறித்து இறைவனுக்கு கொடுத்திருக்கிறார். எனில், "இறைசின்னத்தின் கீழிருப்பது பெருமாளா?" என்ற கேள்வியெழும்!

உண்மை என்னவெனில், மனம் இயங்கும் வரை நாமனைவரும் பெருமாள்களே! மனமழிந்தால் சிவமாவோம். இவ்விதிக்கு ஒருவரும் விலக்கல்ல. கருவறையின் கீழேயிருக்கும் பெருமானும் இதற்கு விலக்கல்ல.

அவர் உடல் தாங்கியிருந்த காலத்தில், மனமும் இயங்கிக் கொண்டிருந்த வேளையில், அவரும் பெருமாளாகிறார். மெய்யறிவில் நிலைபெறுவதற்காக வெகுவாக போராடியிருக்கிறார். எல்லா பற்றுகளையும் விட்டுள்ளார். இதை, "999 மலர்கள் (பற்றுகள்) கொண்டு வழிபாடு நடத்தினார்" என்று பதிவு செய்துள்ளனர்! இறுதியாக, புறமுகப் பார்வையை விட்டுள்ளார். இதை, "கண்ணை பறித்து இறைவனுக்கு படைத்தார்" என்று பதிவு செய்துள்ளனர்!

புறமுகப் பார்வையை விடுதலென்பது அகமுகப் பார்வையை இறுகப் பற்றுதலுக்கு சமம். அகமுகப் பார்வையென்பது தான் எனும் தன்மையுணர்வாய் நிற்றலாகும்.

இங்கு, பகவான் திரு இரமண மாமுனிவரின் 2 பொன்மொழிகளை நினைவு கூர்வது பொருத்தமாகவிருக்கும்:

🌷 தானாயிருத்தலே தன்னையறிதலாம்
🌷 தன்னை விடாதிருத்தல் மெய்யறிவு. அந்நியத்தை நாடாதிருத்தல் பற்றின்மை. இரண்டும் ஒன்றே.

> அந்நியத்தை நாடாதிருத்தல் = புறமுகப் பார்வையை விட்டுவிடுதல் = கண்ணை பறித்துக் கொடுத்தல்!

புறமுகப் பார்வை இருந்தவரை அவர் பெருமாளாகிறார். அகமுகமாய் நிலைபெற்றவுடன் அவர் அகத்தியாராகிறார். (எல்லா மெய்யறிவாளர்களும் அகத்தியர்களே!)

தற்போது, வையகத்தினுள் நாமிருப்பதாக உணர்கிறோம். நிலைபேறு அடைந்த பின், எதுவும் தோன்றாமலிருக்கலாம். அல்லது, ஒரு திரையரங்கிலிருப்பது போன்று, நாம் ஒரு புறமும், வையகக்காட்சி இன்னொரு புறமும் தோன்றிக் கொண்டிருக்கலாம். இத்தகைய காட்சியே மிழலைப் பெருமானுக்கு கிட்டியுள்ளது.

> காண்பான் ஒரு புறம் & காட்சி ஒரு புறம்
> காண்பான் & காட்சி = அப்பன் & அம்மை
> அம்மையப்பர் = திருமணக்காட்சி

மேற்கண்ட நிலையில் மிழலைப் பெருமான் இருக்கிறார் என்பதை நமக்குணர்த்தவே அம்மையப்பர் சிலையை இறைசின்னத்தின் பின்னே வைத்துள்ளனர். மேலும், "அகத்தியருக்கு திருமணக்காட்சி கிட்டிய திருவிடம்" என்றும் பதிவுசெய்து வைத்துள்ளனர்.

இப்போது நாம் காணும் காட்சியில் சூழ்ச்சி நிறைந்துள்ளது. நமதுண்மையை நாம் உணர வெகுவாக போராடவேண்டியுள்ளது. ஆனால், திருமணக்காட்சியில் சூழ்ச்சியே இருக்காது. எனவே, அதை நல்ல காட்சியென்று அழைத்துள்ளனர்.

> திருமணக்காட்சி = நல்ல காட்சி
> நல்ல + காட்சி = அசுரத்தில், சு + தரிசனம் = சுதர்சனம்!

காட்சி என்பது இடைவிடாது மாறிக்கொண்டேயிருக்கும். இதையுணர்த்துவதற்காக, திகிரி (அசுரத்தில், சக்கிரம்) என்று பதிவு செய்துள்ளனர். திகிரி சுழன்று கொண்டேயிருக்கும்.

🌷 சுதர்சன சக்கிரம் = நல்ல காட்சி = திருமணக்காட்சி!!

🌷 அகத்தியர் திருமணக்காட்சியை காணுதல் = பெருமாள் சுதர்சன சக்கிரத்தை பெறுதல்!!!

(எதற்காக ஒரே செய்தியை சொல்லும் இரண்டு புனைவுக் கதைகளை, ஒரு திருக்கோயிலில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள்?... விடையை உங்களது சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.)

oOo

திருமணக்காட்சியின் வேறு பெயர்கள்:

🌷 திருக்கயிலாயக் காட்சி
🌷 சூழ்ச்சியில்லாக் காட்சி (இது திரு மணிவாசகப் பெருமானின் படைப்பு)
🌷 கூடம் (அசுரத்தில், சபை - இரத்தின சபை, பொற்சபை...)
🌷 கண்கூடாகக் காணுதல்

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻