Showing posts with label அடிஇணை. Show all posts
Showing posts with label அடிஇணை. Show all posts

Sunday, May 31, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #33: கனபொருள், அடியினை - சிறு விளக்கம்

கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும்
சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் - பரத்தும்
இகத்தும்அலை வாராமல் என்குருவாய் ஆண்ட
மகத்துமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #33

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

"அக வாழ்க்கையிலும், புற வாழ்க்கையிலும் தடுமாறாமல் இருக்கும் பொருட்டு இரண்டு பொருட்களை என்னிடம் கொடுத்து என்னைக் காப்பாற்றினார் பெருமதிப்பிற்குரிய எனது மெய்யாசிரியர் குகைநமச்சிவாயர் 🌺🙏🏽" என்கிறார் குரு நமச்சிவாயர் 🌺🙏🏽. அவை என்ன பொருட்கள்?

🔸சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் - தலையில் திருவடிகளை வைத்து என்பது நேரான பொருள்.

ஒரு முறை, பருமனான உடலைக் கொண்ட சற்று வயதான பெண் ஒருவர் பகவானின் 🌺🙏🏽 முன் 108 முறை விழுந்து வணங்க முற்பட்டார். அவரது சிரமத்தைக் கண்ட பகவான, "எதற்கு இந்த சர்க்கஸ் வேலை? பகவானின் உண்மையான திருவடி உனக்குள்ளே இருக்கிறது. அதை இறுகப் பிடித்துக் கொள்." என்று அறிவுறுத்தினார்.

ஆக, திருவடி என்பது நம்முள்ளே இருக்கிறது - நான் என்ற தன்மையுணர்வே அது! அவ்வுணர்வில் நிற்பதே அதை இறுகப்பிடிப்பது!! இதுவே "அடிஇணையச் சேர்த்து" என்பது. இதுவே நிலைபேறு. மற்றதெல்லாம் அலைபேறு. 😊

🔸கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும் - புற வாழ்க்கையில் தடுமாறாமல் - ஆணவம் தலை தூக்காமல் இருக்க - ஒரு கனமான பொருளைக் கொடுத்திருக்கிறார் குகை நமச்சிவாயர். என்னவாக இருக்கும்?

எனது சிற்றறிவிற்கு 2 பொருள்கள் தோன்றுகின்றன:

1. திருவோடு - பிச்சையெடுத்து உண் என்று அறிவுறுத்தியிருப்பார். பகவானும் திரு முருகனார் சுவாமிகளுக்கு 🌺🙏🏽 இந்த அறிவுரையைக் கொடுத்துள்ளார். ஆடி மாதங்களில் அம்மனுக்கும், புரட்டாசி மாதங்களில் பெருமாளுக்கும் பிச்சையெடுப்பதின் உள்நோக்கம் ஆணவமழிப்பதே. ஆக, திருவோடு ஆணவத்தை அடக்கும் ஒரு கனமான பொருளானாலும், "இனிய" என்ற அடைமொழி திருவோட்டிற்கு பொருந்துமா? அடுத்த பொருளைப் பார்ப்போம்.

2. தமிழ் - ஆம். அன்னைத் தமிழ் ஒரு கனமான பொருளே!

தனது இழிந்த நிலையை எண்ணி கண்ணீர் சிந்தி, தற்கொலை செய்து கொள்ள முயன்ற அருணகிரிநாத சுவாமிகளை 🌺🙏🏽 தடுத்தாட்கொண்ட அவரது மெய்யாசிரியர் 🌺🙏🏽 (கோபுரத்து இளையனார் திருக்கோயில் இவரது சமாதி), மேற்கொண்டு அருணகிரிநாதர் நிலை தடுமாறாமல் இருக்க பயன்படுத்திய கனபொருள் - நமது நிறைமொழி! விளைவு: திருப்புகழ்!!

சமண மதத்தின் பக்கம் சாய முயன்ற பேரரசர் முதலாம் குலோத்துங்க சோழனைக் கட்டியிழுத்து நிலைபெறச் செய்து, அவரையும், சைவத்தையும், தமிழரையும் காப்பாற்றிய கனபொருள் தெய்வத் தமிழ்!! உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரிய கூத்தபிரான் 🌺🙏🏽 அடியெடுத்துக் கொடுத்து, சேக்கிழார் நாயனார் 🌺🙏🏽 பெற்றெடுத்த பெரியபுராணத் தமிழ்!!

புறவாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க குகை நமச்சிவாயருக்கு கொடுக்கப்பட்ட இனிய கனபொருள் "தன் நேர் இலாத" தமிழ் தான் என்பது எனது கருத்து! 🙏🏽 தமிழை முறையாக ஆறுமுக நாவலர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உவேசா, பரிதிமாற்கலைஞர், கதிரைவேற் பிள்ளை போன்ற திருவுடையோரிடம் கற்றாலே போதும் நிலைபேற்றினை அடைந்துவிடுவோம். (இன்று தமிழ்துறை பெரும்பாலும் இந்து சமய, சமூக, பாரத எதிரிகளால் நிறைந்திருக்கிறது. இவர்களிடம் தமிழ் கற்பதை விட கூகுளில் வடக்கிருக்கலாம். 😁)

🔸மகத்துமலை - மகத் என்ற ஆரியச் சொல் பெருமதிப்பிற்குரிய, மிக உயர்ந்த, வலிமையான, பெரிய போன்ற பொருள்களைத் தரும். மகான் என்ற ஆரியச் சொல்லும் இதிலிருந்துதான் வருகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽