Sunday, October 3, 2021

இராமேச்சுர திருத்தலத்தில் அதிகாலையில் நடக்கும் பளிங்கு சிவலிங்க பூசையின் உட்பொருள்


கண்ணாடியின் வழியாக ஒளி ஊடுருவும். விரிவடையாது. ஆனால், பளிங்கின் வழியே ஊடுருவும் ஒளிக் கற்றையானது விரிவடையும். அந்த பளிங்குப் பொருள் முழுவதும் பரவிவிடும். சற்று தூரத்திலிருந்து பார்த்தால், நிறமற்ற பளிங்குப் பொருள் ஊடுருவும் ஒளியின் நிறத்தினதாய் தெரியும். ஒரு வெள்ளைப் பொருளை அருகில் வைத்தால் வெள்ளையாய் தெரியும். நீலப் பொருளை வைத்தால் நீலமாய் தெரியும். எந்த பொருளும் இல்லாவிட்டால் தெளிவான பளிங்காகத் தெரியும். வைக்கப்படும் பொருளால் பளிங்கு பாதிப்படையாது. பொருளே இல்லாவிட்டாலும் பளிங்கில் ஏதும் குறைவிருக்காது.

இராமேச்சுர திருத்தலத்தில் நடக்கும் பளிங்கு சிவலிங்க பூசையின் போது, சிவலிங்கத்தை நீர், பால் முதலியவற்றால் தூய்மைபடுத்திவிட்டு, வில்வ இலைகள் மற்றும் பல வண்ண மலர்கள் கொண்டு துதிப்பார்கள். சிவலிங்கத்தின் அருகில் வில்வ இலை விழும்போது லிங்கம் பச்சையாக தெரியும். சாமந்தி பூ விழும்போது மஞ்சளாக தெரியும்.

பளிங்கு சிவலிங்கம் உள்ளபொருளுக்கு சமம். அதனருகில் விழும் பூக்களும் இலைகளும் தோன்றும் உயிர்களுக்கு, உயிர்களுக்கு ஏற்படும் பிறவிகளுக்கு சமம். பகவான் திரு ரமணர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது சிவலிங்கம் ரமணராகிறது. திரு மெய்கண்டார் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது அதே சிவலிங்கம் மெய்கண்டாராகிறது. திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்ற பூ விழும்போது அது ஞானசம்பந்தராகிறது.

நம்மிடம் இயற்கையாக அமைந்துள்ள நான் எனும் தன்மையுணர்வு பளிங்கு சிவலிங்கத்திற்கு சமம். தன்மையுணர்வுடன் இணைந்திருக்கும் "இன்னார்" (மனிதன், ஆண்/பெண், படிப்பு, பதவி...) பூவுக்கு சமம். எத்தனை பூக்கள் வந்து விழுந்தாலும் சிவலிங்கம் அப்படியேதானிருக்கும். எத்தனை பிறவிகள் நமக்கு ஏற்பட்டாலும் நமது தன்மையுணர்வு சிறிதும் மாறாது. (பகவான் இறுதியாக பேசிய சொற்றொடர்களில் ஒன்று: ஜென்மா (பிறவி) வரும். போகும். அதனாலென்ன?)

இவ்வாறே எத்தனை வகையான பூக்கள் வந்து விழுந்தாலும் சிவலிங்கம் மாற்றமடைவதில்லை. மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என கோடான கோடி உயிர்கள் பிறந்தாலும் எல்லோருக்குள்ளும் இருக்கும் தன்மையுணர்வு ஒன்றுதான்!! "சிவபெருமானேயானாலும் அவரும் தன்னை நான் என்றுதான் உணர்கிறார்" என்று அருளியிருக்கிறார் பகவான்.

நம் மீது விழுந்திருக்கும் பூவை (பிறவியை) கவனியாது, நான் எனும் நமது தன்மையுணர்வில் (சிவலிங்கத்தில்) நிலைத்து நிற்றலே பிறவியறுத்தலாகும். இதை உணர்தலே பளிங்கு சிவலிங்க பூசையை காண்பதின் பயனாகும். 🙏🏽

ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும் - ஏதேதும் 
தானாகா வண்ணம் தனித்திருக்கும் 
ஞானாகாரம் தானே நாம்

-- திரு நடனானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

சில சமூகங்களில் ஆயிரம் பிறை கண்டோர் (80 ஆண்டுகள் மற்றும் சில மாதங்களை கடந்தோர்) பளிங்கு மாலையை அணிந்து கொள்வர். அவர்கள், முனைப்பற்று, வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு, கரியாக (பார்ப்பானாக / அறிபவனாக / சாட்சியாக (ஆரியம்)) மட்டுமிருப்பவர்கள் என்பது பொருள்.

(நம் அன்னைத்தமிழ் மெய்யியலை அடிப்படையாகக் கொண்டது என்பதற்கு "கரி" என்ற சொல் மேலும் ஒரு சான்றாகும். இதை விளக்குவதற்கு தனி இடுகையே தேவைப்படும்!!

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

-- திருக்குறள் #25)

oOOo

ஸ்படிகா என்ற ஆரியச் சொல்லை தமிழில் படிகம் என்று எழுதுகிறார்கள். இது தேவையற்றது. தமிழில் பளிங்கு என்ற சொல் ஏற்கனவேயுள்ளது.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

-- திருக்குறள் #706

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment