Monday, December 30, 2019

அண்ணாமலை வெண்பா - காப்பு செய்யுள்

மன்னுதிரு அண்ணா மலைமாலை நாய்அடியேன்
பன்னுதமிழ் வெண்பாவில் பாடவே - துன்னுமலர்ப்
பாதனே மூடிகத்தின் பால்ஏறும் தேவகண
நாதனே நீமுன் நட

-- குரு நமச்சிவாயர் 🌺🙏🏽

🌸🏵️🌼🌻💮

மன்னு - நிலை பெற்ற

பன்னு - திரிக்கப்பட்ட. திரிக்கப்படாத பஞ்சுத்திரி விளக்கெரிக்க உதவாது. இங்ஙனமே செம்மையாகாத மொழி அஞ்ஞானத்தை எரிக்க உதவாது. அனைத்து மொழிகளுக்கும் தாயாகியதும், பன்னெடுங்காலமாக மெய்ப்பொருளை உணர்ந்த மெய்யறிவாளர்களாலும், ஆன்றோர்களாலும், சான்றோர்களாலும் தொடர்ந்து செம்மை படுத்தப்பட்டதும், மெய்ப்பொருளை அடிப்படையாக கொண்டதும், வீடு பேற்றினை குறிக்கோளாக கொண்டதும், அண்டத்தின் இயக்கத்தோடு ஒத்துப்போவதுமாகிய அன்னைத் தமிழை ஒருவர் செம்மையாக கற்றாலே போதும், எந்த மெய்யாசிரியரின் வழிகாட்டுதல் இல்லாமல், பொய்யறிவாகிய உலகறிவை எரித்து வீடு பேற்றினை அளித்துவிடும். எனவே, "பன்னு தமிழ்".

துன்னு - அழகிய

🌸🏵️🌼🌻💮

சிவப்பரம்பொருளில் என்றும் நிலைபெற்று உயர்ந்த அண்ணாமலையாருக்கு, இழிந்த பிறவியான நான், பன்னுதமிழ் வெண்பா மாலையொன்று பாடி சாத்த விரும்புகிறேன். இச்செயலை, அழகிய மலர் போன்ற பாதங்களைக் கொண்டவரும், ஆசை என்னும் மூஞ்சுறுவை அடக்கி வாகனமாகக் கொண்டவருமாகிய உயர்ந்த விநாயகப் பெருமானே, நீ உடனிருந்து காத்தருள வேண்டும்!!

🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺

No comments:

Post a Comment