Friday, September 30, 2016

அப்பர் பெருமானுக்கும் அவர் கையில் உள்ள உழவாரத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?

உழவாரத்தினால் செய்யும் பணி உழவாரப்பணி. சமணர்களின் ஆதிக்கத்தால் பல சிவன் கோயில்கள் பாழடைந்து கிடந்தன. அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தையும், இறைவன் குடிகொண்ட ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் உலகுக்கு உணர்த்துவதற்காகவே #அப்பர் பெருமான் கோயில்களில் முளைத்திருந்த புல்பூண்டுகளை தம் கரங்களால் களைந்து கோயிலைத் தூய்மையாக்கி திருப்பணியைத் தொடங்கிவைத்தார். அதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் #உழவாரம் என்னும் புல் செதுக்கும் கருவி.

அப்பர் பெருமான் தோளில் சுமந்திருக்கும் இக்கருவி முழுவதும் இரும்பினால் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. பெருமானின் கையில் இருக்கும் இக்கருவி, விவசாயக் கருவிகளுள் ஒன்றாக இருந்துள்ளது. தென்னாற்க்காடு மாவட்டமான (தற்போது அரியலூர் மாவட்டம்) #திருக்களப்பூர் என்ற ஊரில் விவசாயக் கருவிகளுள் ஒரு கருவியின் பெயர் உழவாரம். இன்றும் அக்கருவிக்கு உழவாரம் என்ற பெயரே இருந்து வருகிறது. இன்று திருக்களப்பூரில் கால்நடைகளுக்கு புல்லை செதுக்க இக்கருவி பயன்பட்டு வருவதாக அறியமுடிகிறது.

ஒருமுறை #திருப்புகலூரில் பெருமான் உழவாரப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, குப்பைகளோடு பொன்னையும் ஓட்டையும் கண்டார். ஆனால், ஏற்கனவே தனித்துவத்தை இழந்து சிவமாகி விட்டபடியால் பெருமானுக்கு எல்லாம் கானல் நீர் காட்சியாக (பொய்யாக, அசத்தாக) இருந்தது. பொன்னையும் ஓட்டையும் சமமாகவே பாவித்து, புல்லோடும் கல்லோடும் சேர்த்து தூக்கி எறிந்தார்.

*குளத்தில் படிந்த பாசியின் மீது கல்லை விட்டெறிந்தால், அந்தக் கல் நீரில் விழும்போது மட்டும் பாசி விலகும். பின் மீண்டும் பாசி, தண்ணீரை மூடிக்கொள்ளும். அதுபோல, ஒருவன், தன் மனத்தை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், எவ்வளவுதான் இறைவன் புகழ் கூறும் நூல்களைக் கற்றாலும், பூஜித்தாலும், மலர் பறித்துக் கொடுத்தல் போன்ற தொண்டுகளைச் செய்தாலும், அப்போதைக்கு வேண்டுமானால் இறைவனிடம் அவனது மனம் குவியும் - ஒருமைப்படும். பின்னர் மீண்டும் மனம் உலகப் பற்றுகளில் - உலக ஆசைகளில் திரும்பிவிடும் என்கிறார் திருமூலர்.*

*ஆக, சித்தமெல்லாம் சிவமாகும் வரை, தனித்துவம் இருக்கும் வரை, மனம் இருக்கும் வரை, சீவன் சிவமாகும் வரை, தன்னாட்டம் (ஆத்மவிசாரம்) என்னும் உழவாரப் பணியில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கவேண்டும்.  வெளிமுகத்தில் வாழ்க்கையை "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற கண்ணோட்டத்தில் வாழ வேண்டும்.*

இதுவே அப்பர் பெருமானின் வாக்கும் தோற்றமும் நமக்கு உணர்த்தும் கருத்துகள். 🙏

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

(அடிப்படை: https://m.facebook.com/story.php?story_fbid=977876058989980&id=100003027847087)

No comments:

Post a Comment