Showing posts with label தட்சிணாமூர்த்தி. Show all posts
Showing posts with label தட்சிணாமூர்த்தி. Show all posts

Thursday, September 28, 2017

🌼 *#ஹயக்ரீவர் - #குதிரைத்தலையர் / #பரிமுகர் - வைணவத்தின் #கல்விக்கடவுள்* 🌼

இங்கு குதிரை "தொடர்ந்த விடாமுயற்சியைக்" குறிக்கிறது. ஒரு குதிரை, தான் இறக்கும் தருணம் வரையில் நின்று கொண்டேயிருக்கும். இது போல, ஞானத்தின் இறுதி நிலை (சாயுஜ்ஜியம்) கிட்டும் வரை விடாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

என்ன இது புதுக்கதை என்கிறீர்களா? 🙄 உங்களது கேள்விக்கு காரணம், பரிமுகரைக் கல்விக் கடவுளாக இன்றுவரை முன்னிறுத்துவது தான். பரிமுகர் சொற்கிழத்தி (ஸ்ரீசரஸ்வதி தேவி) போன்று இவ்வுலகக் கல்விக் கடவுளன்று. சைவத்தின் தென்திசைக் கடவுளை (#ஸ்ரீதட்சிணாமூர்த்தி) (#) வைத்து உருவாக்கப்பட்டவர்.

தென்திசைக் கடவுளின் முகம் பேரமைதியையும், அதனால் ஏற்படும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்தும். இப்பேரமைதியை அடையும் வழியை அவரது வலது கை முத்திரைக்காட்டும்: *தேடுபவனே (ஜீவனே) தேடப்படுபவன் (பரமன்).* இது ஜீவ-பிரம்ம ஐக்கியம் எனப்படும். இதில் பல நிலைகள் உண்டு. இறுதி நிலையே *பேரமைதி (சாயுஜ்ஜியம்)*. இதற்கு முந்தைய நிலையிலிருந்து இப்பேரமைதி நிலையை அடைய விடாமுயற்சித் தேவை. *இவ்விடா முயற்சியைத் தான் #பரிமுகர் உணர்த்துகிறார்!* 🙏

🐟 ஒருவர் ஞானமடைய வேண்டும் என்ற வேட்கைத் தோன்றிய ஆரம்ப காலத்தில், சதா தவத்தில் மூழ்கியிருப்பார். இது *மீன் (#மச்சம்) நீரிலிருப்பது போன்றது.*

🐢 பின்னர், திருவருளால் சிறிது தெளிவுப் பெறுவார். சதா தவத்தில் திளைக்காமல், தவத்தில் சிறிது நேரமும், புறஉலகில் கடமைகளையும் செய்ய முயற்சிப்பார். இது *ஆமை (#கூர்மம்), நீரிலும் நிலத்திலும் இருப்பது போன்றது.* அவ்வாறு கடமையாற்றும் போது, ஐம்புலன்களின் மேல் எச்சரிக்கையாக இருப்பார். ஏதும் ஆபத்தை உணர்ந்தால் ஆமை, தலையையும், கால்களையும் தனது ஓட்டிற்குள் இழுத்துக் கொள்வது போன்றது.

🐗 இது வரை மேலோட்டமாக செய்து வந்த பயிற்சியை இனி ஆழ்ந்து செய்ய ஆரம்பிப்பார். தன் தலைவனைத் தேடி உள்ளாழ்ந்து செல்வார். *இது பன்றி (#வராகம்) புதைக்கப்பட்ட கிழங்கை மோப்பம் பிடித்து மண்ணைக் குத்திக் கிளறுவதற்குச் சமம்.* (மோப்பம் பிடிப்பதில் நாய்க்கு அடுத்தப் படியாக உள்ள விலங்கு பன்றி. சைவர்கள் நாயை பைரவ தத்துவத்திற்கு உபயோகப்படுத்திவிட்டதால் வைணவர்கள் பன்றியை எடுத்துக் கொண்டனர். 😀)

🦁 ஒரு நிலை வரை மட்டுமே அவரால் முயன்று செல்லமுடியும். அதற்கு மேல் இயலாமல் நின்றுவிடுவார். *எக்கணம் அவர் தன் இயலாமையை உணர்ந்து சுய முயற்சியைக் கைவிடுகிறாரோ (சரணாகதி என்பது இதுவே), அக்கணம் உள்ளிருந்து இறைசக்தி ஒன்று சிங்கம் (#நரசிம்மம் - நர+சிம்மம் என்று பிரிக்கக் கூடாது. ந+ர+சிம்+ஹ என்று பிரிக்கவேண்டும். பொருள்: பற்றுகளை விட்டால், பற்றற்றவன் பற்றிக்கொள்வான்!! 👏👏🙏) போல் வெளிப்பட்டு அவரை ஆட்கொண்டுவிடும் (அவரது தனித்துவத்தை - ஜீவனை - விழுங்கி விடும்).*

இதுவரை செய்த தவத்தால் அவரது எண்ணப் பதிவுகள் (விஷய வாசனைகள்) முற்றிலும் அழிந்து போயிருந்தால், மேற்கொண்டு எந்தத் தடங்கலும் இல்லாமல் #பேரமைதி (#சாயுஜ்ஜியம்) நிலைக்குச் சென்று விடுவார். இல்லையெனில், அந்நிலையிலிருந்து அவரை மீண்டும் புற உலகிற்குத் தள்ள ஒரு சக்தி தோன்றும். இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.

மேற்சொன்ன மனிதர் தீவிர ரமண பக்தர் என்று வைத்துக் கொள்வோம். ஏதேச்சையாக வேறொரு மகானின் அறிவுரையை அவர் படிக்கிறார். அந்த அறிவுரை அவரை மேற்சொன்ன சிம்மத்திற்கு இரையாக்குகிறது. ஆனால், எண்ணப் பதிவுகள், பற்றுகள் இன்னமும் மீதமிருப்பதால், இப்போது அவரது உள்ளுணர்வில், "பகவானது அறிவுரைகளால் அல்லவா இங்கு வந்திருக்க வேண்டும். வேறு மகானின் அறிவுரையால் இங்கு வருவது உனது குருபத்திக்கு இழுக்கல்லவா? வெளியே வந்து விடு." என்று ஒரு எண்ணம் தோன்றும். இது அவரை உவகைக் கொள்ளவைக்கும். பகவானின் மேலிருந்த அதீத பக்தியின் காரணமாக, "ஆம். இது தவறு தான்." என்று அவரும் புன்சிரிப்புடன் வெளியே வந்துவிடுவார்.

👤 *ஞானமடைந்த ஜீவனை அந்நிலையிலிருந்து வெளியே இழுத்த சக்திக்கு வைணவம் இட்ட பெயர்: வெண்ணெய் திருடிக் #கண்ணன் (அ) #மாயக்கண்ணன். (வெண்ணெய் / நவநீதம் - ஞானம்)*

பல பிறவிகளில் பாடுபட்டுப் பெற்ற ஞானத்தை கெடுத்து விட்டதற்காக அச்சக்தியின் மீது நமக்கு கோபமோ வருத்தமோ வரக்கூடாது என்பதற்காகத்தான் அதை மனதைக் கொள்ளை கொள்ளும் ஒரு சிறு குழந்தையாக வடிவமைத்தார்கள். அப்படிப்பட்ட ஒரு குழந்தை, வெண்ணெய்ப் பானையை விளையாட்டாக உடைத்து விட்டு, நம்மைப் பார்த்து சிரித்தால் கோபம் கொள்வோமா? அல்லது, அதை அள்ளி அணைத்து, அதன் சேட்டையை ரசிப்போமா? 🤗

ஏன் இப்படி வடிவமைத்தார்கள்? உலக இயக்கம் செவ்வனே நடைபெறுவதற்காக. இல்லையெனில், உலகின் மேல் (படைப்பின் மேல்) நமக்கு கோபம் வரும்; வெறுப்பு வரும். சைவம் இதை எப்படிக் கையாள்கிறது என்று பார்த்தோமானால், இன்னும் நன்றாக விளங்கும்.

*சைவத்தில், "வெளியே வா" என்று ஞானியை (சிவனை) இழுத்த சக்திக்குப் பெயர் #காளி!* இதனால் தான் காளியை பயங்கரமானவராகக் காண்பித்திருப்பார்கள். சிவனைக் காலால் இவர் மிதித்துக் கொண்டிருப்பது போன்று காட்டியிருப்பதும் இதனால் தான். ஆனால், மிதிபட்ட நிலையிலும் சிவன் ஆனந்தமாக இருப்பார். இது மேற்சொன்ன ஞானி உவகை கொண்டதற்கு சமம். காளியால் ஞானி தனது நிலையை கைவிடவில்லை. மாறாக, உவகை அடைந்திருப்பார். அடுத்து, முகத்தில் புன்சிரிப்பும், மனதில், "சரி. விட்டுக் கொடுப்போம். நம் பகவானின் அறிவுரையைக் கடைபிடித்து மீண்டும் வருவோம்." என்ற எண்ணமும் தோன்றும். பிறகே புறமுகமாவார். *இப்படி அவரைப் புறமுகம் செய்த சக்திக்குப் பெயர் #காமாட்சி - காமக்கண் கொண்டவள்.* இவர் விதைத்த காமமே (ஆசை / எண்ணம்) ஞானியை (சிவனை) கண் திறக்க வைத்தது. பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது. ஒடுங்கிய நிலையிலிருந்து அண்டம் மீண்டும் வெளிப்படக் காரணமானவர். இவரது காமத்தால் நன்மையே விளையும். காளி, காமாட்சி போன்ற சக்திகள் தேவைப்படும் போது மட்டுமே தோன்றுபவன. தோன்றி மறைபவை இறைவனாகாது. மேலும், இவற்றால் பின்விளைவுகளும் உண்டு. ஆகையால், பெண் உரு கொடுத்தார்கள்.

புறமுகமான ஞானி, சில காலம் கழித்து, மேலும் பக்குவம் பெற்று, திருவள் துணையுடன் மீண்டும் முயன்று சிம்மத்துக்கு இரையாகி (நான் என்பது தானாகி) நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இம்முறை மாயக்கண்ணனின் லீலைகளும், காளியின் தாண்டவங்களும் அவரை ஒன்றும் செய்யாது. அவருடைய நிலையை விடாது இறுகப்பற்றிக் கொண்டிருப்பார். இவ்விடாமுயற்சி, அவரை பேரமைதியில் (சாயுஜ்ஜியத்தில்) கொண்டு போய் சேர்க்கும். தான் என்பதும் கரைந்து போகும். இறையோடு இரண்டற கலத்தல் என்பது இதுவே.

🐎 *மாயக்கண்ணனிடம் சிக்காமல் அவரைத் தொடர்ந்து முயற்சிக்க வைத்த சக்திக்குத் தான் பரிமுகர் - ஹயக்ரீவர் - என்று பெயர்.* ஆக, பரிமுகரை வணங்குவது பேரமைதி நிலையை அடைவதற்காக. தமிழனை ஒழிக்க வந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக அல்ல! 😝

இப்பேருண்மைகளை #வேதாந்த #தேசிகர் திருவஹீந்திரபுரத்தில் தவத்தில் இருக்கும் போது உணர்ந்திருப்பார். இதைத் தான் இணைப்புக் கட்டுரையில், "தேசிகர் பரிமுகரை நேரில் தரிசித்த தலம்" என்று எழுதியிருக்கிறார்கள். இவற்றை உணர நுண்ணறிவுத் தேவை. இதை, "பரிமுகருடன் கருடாழ்வாரும் காட்சித் தந்தார்" என்று எழுதியிருக்கிறார்கள். (#கருடன் - அறிவு. #அனுமன் - மனம்.)

வைணவத்தைப் பொறுத்த வரையில் எல்லாமே பெருமாள் தான். எனில், எதற்கு அதற்கு முந்தைய நிலைச் சக்திகளை வணங்கவேண்டும்? *ஏன் தேசிகர் பரிமுக வழிபாட்டை உருவாக்கவேண்டும்?* எத்தனையோ காரணிகள் உண்டு. சுருங்கச் சொன்னால், 2 காரணிகள்: *அரசியல் மத படையெடுப்புகளாலும், மக்கள் தொகைப் பெருக்கத்தாலும் தாழ்ந்து கொண்டிருந்த மக்களின் தரம் மற்றும் தேசிகர் சார்ந்த வழிபாடு நடத்தி வைப்போர் சமூகத்தின் பெருக்கம்.* 😑

(ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழின் கடைசிப் பக்கத்தில் ஹாஸ்ய யோகம் என்ற தலைப்பில் சில சிரிப்புக் கட்டுரைகளை பதிப்பித்திருப்பர். அது போல, இந்த இடுகையின் ஹாஸ்ய யோகப் பகுதி - இணைப்புக் கட்டுரையிலுள்ள தல வரலாறு! 😁)

*கண்ணனே கூறினான். கண்ணனே இயக்கினான். அவனே எல்லாவற்றிற்கும் காரணம். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.*
-- பகவான் #ஸ்ரீகிருஷ்ணர் (மேற்சொன்ன மாயக்கண்ணன் ஒரு சக்தி. இவர் பகவத்கீதை வழங்கிய ஞானி. 🌺🔥🙏)

*"இல்லறத்தான் அல்லேன்.*
*இயற்கைத் துறவி அல்லேன்.*
*நல்லறத்து ஞானி அல்லேன். நாயினேன்.*
*சொல்லறத்து ஒன்றேனும் இல்லேன்.*
*உயர்ந்த கண்ணா, என்றே நான் ஈடேறுவேன்?"* 😢

🙏 🙏 🙏 🙏 🙏

# - *#தென்திசைக் #கடவுள் என்று சொல்வது சரியன்று. தென் திசையில் இருந்த கடவுள் / ஞானி என்று சொல்வதே சரி!* 🙏

சனகாதி முனிவர்கள் நால்வரும், ஞானத்தைத் தேடி அலைகிறார்கள். அவர்கள் சந்தித்த எந்த குருவும் அவர்களது கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கவில்லை. காலம் ஓடி விட்டது. வயதாகிவிட்டது. இறுதியாக, நம் பக்கம் வருகின்றனர். இங்கே ஒரு ஆலமரத்தின் கீழ், ஒரு இளைஞர் மிகுந்த ஆனந்தத்துடன் அமர்ந்திருப்பதைக் கண்டனர். அவ்விளைஞரின் தோற்றமும், அவர் முகத்தில் தோன்றிய ஒளியும், அவரைச் சுற்றி நிலவிய அமைதியும், இவரே தாங்கள் தேடி வந்த ஆசிரியர் என்று அவர்கள் உள்ளுணர்வால் உணர்ந்தனர். அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். இளைஞரும் பதில் கூற ஆரம்பித்தார். இரவு பகல் பாராது முனிவர்கள் கேள்விகளைக் கேட்டனர். அவ்விளைஞரும் சளைக்காமல் பதில் கூறினார். இவ்வாறாக 1 வருடம் ஓடியது. முனிவர்களின் ஐயங்கள் தீர்ந்தபாடில்லை. இறுதியில், இளைஞர் பதில் கூறுவதை நிறுத்திக் கொண்டார். உள்முகமானார். அவரிடமிருந்து வெளிப்பட்ட பேரமைதி முனிவர்களையும் தொற்றிக் கொண்டது. கேள்விகள் தேவையற்று காணாமல் போயின. ஆர்பரித்த மனக்கடல் அடங்கியது. *எதை உணர்ந்தால் அனைத்தையும் உணர்ந்ததாகுமோ அதை உணர்ந்தார்கள். தங்களை உணர்ந்தார்கள்.* 👏

*"தேடுபவனே தேடப்படுபவன்" என்னும் உண்மையை, சனகாதி முனிவர்கள் வழியாக உலகிற்கு முதன்முதலில் உணர்த்தியதால், தென் திசையிலிருந்த அந்த இளம் ஞானி தென்திசைக் கடவுள் (#ஸ்ரீதட்சிணாமூர்த்தி) என்றும், ஆதிகுரு என்றும் அழைக்கப்படுகிறார்.* 🌸🔥🙏

(இவரைப் பற்றி #பகவான் #ஸ்ரீரமணர் ஸ்ரீமுருகனாருக்கு கூறியதை வைத்து எழுதியுள்ளேன். பகவான் இவ்வாறு கூறி முடித்ததும், #முருகனார் கேட்கிறார், "பகவானே, எங்குமே இது போல பதிவு செய்யப்படவில்லையே. இது தான் நடந்ததா?". "ஆம். இது தான் நடந்தது.", என்று கூறிவிட்டு பகவான் மெளனமானார். மேற்சொன்ன நிகழ்வு நடந்த போது அவ்விளம் ஞானியும், 4 சனகாதி முனிவர்கள் மட்டுமேயிருந்தனர். இது பகவானுக்குத் தெரிந்திருக்கிறது என்பதால், அந்த ஐவரில் ஒருவர் தான் பகவான் என்று முருகனார் முடிவு செய்துகொண்டார். *பகவானே அந்த தென்திசைக் கடவுள் என்று முருகனாரும், சனகாதி முனிவர்களுள் ஒருவரான #சனற்குமாரர் தான் பகவான் என்று வேறு சிலரும் முடிவு செய்துகொண்டனர்.* இவர்களது கருத்துக்களை பகவான் எதிர்க்கவும் இல்லை. ஆமோதிக்கவும் இல்லை. ☺)

🌸 ஓம் நமோ பகவதே ஸ்ரீஅருணாச்சலரமணாய 🌸

🔥 திருச்சிற்றம்பலம் 🔥