Saturday, September 11, 2021

அக்ஷரமணமாலையின் காப்புச் செய்யுளுக்கு மாற்று விளக்கம்


அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலைசாற்றக் 
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே!!

-- அக்ஷரமணமாலை பாடலுக்கு பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய காப்புச் செய்யுள்

பொருள்: அருணாசல வானவனுக்கு ஏற்ற எழுத்துக்களால் ஆன பாமாலையை நான் சாற்ற/இயற்ற கருணைக் கடலான கணபதி பெருமானே உனது திருக்கரம் கொடுத்து என்னைக் காக்க வேண்டுகிறேன்.

பகவான் மேற்சொன்ன பொருளில் அன்புவழிக்கேற்ப பாடியிருந்தாலும் அவரது மெய்யறிவு வழிக்கேற்ப சற்று மாற்றிப் பார்த்தேன்.

🔹அருணாசல வானவன் - உள்ளபொருள்

🔹எழுத்து - இதற்கு பல பொருள்கள் உள்ளன. சித்திரம் என்பதும் ஒரு பொருளாகும். நமது வாழ்வும் ஒரு சித்திரமாகும். எனில், சாற்ற/இயற்ற என்பதை "வாழ" என்று கொள்ளலாம்.

இவற்றை வைத்து மேற்கண்ட பொருளின் முற்பகுதியை "உள்ளபொருளுக்கு ஏற்ற வாழ்வை நான் வாழ" என்று மாற்றலாம். அதென்ன உள்ளபொருளுக்கு ஏற்ற வாழ்வு? உள்ளபொருளை அடைவதற்கேற்ற வாழ்வு. உள்ளபொருளாய் சமைவதற்கேற்ற வாழ்வு.

உள்ளபொருளாய் சமைவதெப்படி?

இதற்கு பகவானின் உள்ளது நாற்பதிலும், உபதேச உந்தியாரிலும் விடைகள் உள்ளன:

🌷 உள்ளத்தே உள்ளபடி உள்ளதே உள்ளல்
🌷 தானாய் இருப்பதே தன்னை அறிதல்

அதாவது, நமது தன்மையுணர்வை விடாது பற்றவேண்டும்.

அடுத்து, கணபதி கடவுள். இவர் நமது அறிவைக் குறிப்பவர். இவரது திருக்கரம் என்பது நமதறிவை ஒன்றின் மேல் செலுத்துதல் அல்லது அறிவால் ஒன்றைப் பற்றுதல் எனக் கொள்ளலாம்.

இப்போது அனைத்தையும் இணைத்தால்: உள்ளபொருளாய் சமைவதற்கேற்ற வாழ்வை நான் வாழ எனது அறிவே தன்மையுணர்வை விடாது இறுகப் பற்றுவாயாக!!

(பட்டினத்தடிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️ தனது நெஞ்சை நோக்கி தானே பாடுவது போன்றமைத்துள்ளேன்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment