Monday, March 29, 2021

பிறப்பறுக்க தமிழ் பிள்ளையார் கூறும் அறிவுரை!!

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே!!
🌺🙏🏽🙇🏽‍♂️

-- சம்பந்தர் தேவாரம் - 1.91.2

இச்செய்யுள், ஆளுடையபிள்ளையார் 🌺🙏🏽 திருவாரூர் திருத்தலத்தில் பாடிய முதல் பதிகத்தின் 2வது செய்யுளாகும்.

மேலோட்டமான பொருள்: பிறவித்தளையை அறுக்க விரும்பும் அன்பர்களே, நீதியே வடிவான ஆரூர் பெருமானை மறவாது துதித்தால் துறவு கிடைக்குமே.

🔸"பிறவித்தளையை அறுக்க" என்று தான் குறிப்பிட்டுள்ளார். "பிறவியெடுத்துள்ள" என்று குறிப்பிடவில்லை. ஏனெனில், பிறவியெடுத்துள்ளது நமதுடல் தான். நாமல்ல. நாம் நமதுடலோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். இந்த பிணைப்பை - தளையை - அறுத்தெறியவேண்டும்.

🔸ஆரூர் பெருமானை இடைவிடாது (மறவாது) துதித்தால் என்னவாகும்? ஆரூர் மூலவர் போலாகிவிடுவோம்!! ☺️ எதைத் தொடர்ந்து நினைக்கின்றோமோ அதுவாகிவிடுவோம். எனில், ஆரூர் மூலவரைத் தொடர்ந்து நினைத்துக்கொண்டிருந்தால் அந்த உருவத்தைத்தான் பெறுவோம். அதற்காகவா இவ்வளவு போராட்டம்?

ஆரூர் பெருமான் என்பது கருவறையிலுள்ள மூலவரல்ல. அதன் கீழ் சமாதியாகியிருக்கும் மாமுனிவருமல்ல 🌺🙏🏽. எங்கும் எக்கணமும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவப்பரம்பொருளாகும். நாமே - நமது தன்மையுணர்வே - அப்பரம்பொருள்!! அப்பொருளை மறவாது துதித்தல் என்பது நம்மை (நமது தன்மையுணர்வை) விடாதிருத்தல்.

"தன்னை விடாதிருத்தல் ஞானம். அந்நியத்தை நாடாதிருத்தல் வைராக்கியம். உண்மையில் இரண்டும் ஒன்றே." என்பது பகவான் திரு ரமண மாமுனிவரின் 🌺🙏🏽 வாக்கு.

🔸நம்மை விடாது பற்றிக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், நாம் யாரென்ற தெளிவு பிறக்கும். "நாம் இன்னார்" என்பதிலுள்ள "இன்னாரை" (அகந்தையை) விட்டுவிடுவோம். இதுவே துறவு எனப்படும். பெயர், உடை, இடங்களை மாற்றிக்கொள்வது துறவாகாது. அகந்தையை துறத்தலே துறவாகும். (இக்கருத்தை பல முறை பகவான் வலியுறுத்தியுள்ளார்)

ஆக, தன்மையுணர்வை விடாது பற்றி, தன்னைப் பற்றிய தெளிவு பெற்று, அகந்தையை துறந்து, பிறவித்தளைகளிலிருந்து விடுபடவேண்டும் என்பதே தமிழ் காத்த திருஞானசம்பந்த பெருமானின் அறிவுரையாகும்!!

oOOo

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽