

மேலுள்ள இரண்டு செய்திகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான்: ஒன்றில் ஒரு தனி மனிதன், மற்றொன்றில் ஒரு கூட்டம் (அல்லது அக்கூட்டத்தை இயக்கும் ஒரு அரசியல்வியாதி)! 😀
ஒரு உதாரணத்திற்காக, சற்று மாற்றி யோசிப்போம். பல ஆராய்வுத் தரகுகளின் அடிப்டையில், ரஜினி நீதிமன்றம் சென்று, "மீனவர்களால் எனக்கு நல்ல வருமானமில்லை. ஆகையால், எல்லா மீனவர்களையும் ரூ.120/- நுழைவுசீட்டு வாங்கி எனது படங்களை பார்க்குமாறு உத்தரவிடக் கோருகிறேன்" என்று கோரிக்கை வைத்தால் எப்படியிருக்கும்? 😂
அப்படித்தான் இருக்கிறது இவர்கள் வாதம். மீனவர் பிரச்சினைக்கு குரல் கொடுக்காததால் படத்தை வெளியிடக்கூடாதாம். குரல் கொடுத்தால், "நடிகன் நீ. நடிப்பதை மட்டும் செய்." என்பார்கள் (இர்ஃபான்கான் ஒட்டகங்கள் கொல்லப்படுவது பற்றி கருத்துக் கூறியதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பதில் இது).
மக்களின் பணத்தினால் கோடீஸ்வரனாகி விட்டாராம். அவருக்கு மேற்கொண்டு பணம் சேரக் கூடாதாம். இப்படியொரு கல்லெறியப்பட்டிருக்கிறது. எந்தத் தொழில் தான் மக்களின் பணத்தினால் நடக்கவில்லை? சட்டப்படி குற்றத் தொழில்களான திருட்டு, வழிப்பறிமுதல் சட்டப்படி குற்றமில்லாத பகல் கொள்ளை (அரசாங்கம்) வரை எல்லாம் மக்கள் பணம் தான்!
ஆந்திராவில் (திருட்டுத்தனமாக மரம் வெட்டச் சென்ற) தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு குரல் கொடுக்கவில்லையாம். இப்படியே போனால், அவனவன் வீட்டுச் சாக்கடை அடைத்துக் கொண்டதற்குக் கூட "ரஜினி குரல் கொடுக்கவில்லை" என்பார்கள்! 😂
நம் மக்களிடம் சில குணங்கள் உண்டு. பணத்திற்காகப் போராடுவார்கள். ஆனால், பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் மோசம் என்று நினைப்பார்கள். தனக்கு கீழ் 4 பேர் வேலை செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், அப்படி 4 பேர் வைத்திருப்பவர்கள் எல்லாம் அதிகார வர்க்கம் என்பார்கள். தனது தனிப்பட்ட வாழ்க்கை யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்று நினைப்பார்கள். ஆனால், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள முனைவார்கள். தெரிந்து கொள்ள முடியவில்லை எனில் புறம் கூறுவார்கள். இப்படி பல "நியாயமான" குணங்கள் நம்மவர்களுக்கு உண்டு. நியாயம் என்ற வார்த்தைக்கு பொருள் கண்ட பூமியின் இன்றைய நிலை இது. 😔
வெற்றிகரமான விற்பனை யுக்திகளுள் ஒன்று: மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை விற்பது (அது குப்பையாக இருந்தாலும்). நம் மக்களின் "நியாயமான" குணங்களை புரிந்து கொண்ட சிலர் (அரசியல்வியாதிகள், தலீவர்கள், ...), மக்கள் விரும்பும் தகவல்களை விற்று, அவர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, ரஜினி / தாணுவிடம் தேவையான பொரையைப் பெற்றுக் கொண்டு மறைந்துவிடுவார்கள். ஆனால், தூண்டிய உணர்வுகளின் விளைவுகள்? 😱
ருசி கண்ட பூனை சும்மா இருக்காது. ரஜினி / தாணுவிடம் ஆரம்பிக்கும் இந்த வழிப்பறி யுக்தி நாளை கடைக்கோடி மனிதனிடமும் நடத்தப்படும். (ஏதோ இப்போது நடக்காதது போலவும், இனிமேல் தான் நடக்கப் போவதாக எழுதியிருக்கிறேன். உண்மையில் காலகாலமாக ஏய்த்துப் பிழைத்தல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அது இன்னும் அதிகமாகும். பரவலாகும்.)
இதனால், நியாயமானவர்கள், நல்ல உள்ளம் கொண்டவர்கள், திறன்மிக்கவர்கள், நல்ல சிந்தனையாளர்கள், தலைமைப் பண்பு உள்ளவர்கள், சிறந்த வணிகர்கள் என நாட்டின் ஆரோக்கியமான இயல்பு வாழ்க்கைக்குத் தேவையானவர்கள் அனைவரும் புலம் பெயருவார்கள் அல்லது சோர்ந்து அமருவார்கள். பின்னர், நாடு "லார்ட் ஆஃப் த ரிங்ஸ்" கதைகளில் வரும் "ஆர்க்ஸ்" இனம் வாழும் "மிடில் எர்த்" எனும் பகுதி போல் ஆகிவிடும். அல்லது, சுமார் கி.பி. 700 முதல் 1600 வரை நம்மைக் கொள்ளையடித்தே வாழ்க்கையை ஓட்டிய காட்டுமிராண்டிகள் வாழ்ந்த அரபு நாடுகளைப் போலாகிவிடும்.
இறுதியாக, கிரண்பேடியின் "கழிவறைக் கட்டினால் 2 கபாலி நுழைவுச் சீட்டு இலவசம்" திட்டம். ரஜினி என்ற பெயரை வைத்து மக்களை திருத்த முடியும் என்று புதுச்சேரி ஆளுநர் நினைக்கிறார் என்பதையே இந்தத் திட்டம் காட்டுகிறது. இதையே அவர் "கழிவறைக் கட்டினால் 2 மீன்கள் இலவசம்" என்று அறிவித்திருந்தால் என்னவாகியிருக்கும்? 😝
இந்தத் திட்டம் அறிவித்தவுடன், "இதற்காகவாவது ரஜினி பயன்படட்டும்" என சில மேதாவிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்தியப் பொருளாதாரத்திற்கு கபாலியின் பங்களிப்பை மட்டும் சிறிது பார்ப்போம்...
படத்தின் மதிப்பு சுமார் 100 கோடிகள். இதில் சம்பளங்கள் மட்டும் 50 கோடிகள் இருக்கலாம். மீதமுள்ள 50 கோடிகள் ஏனைய செலவுகளாக இருக்கலாம். சம்பள பணத்தில் வருமான வரி 15 கோடிகள் அரசுக்கு கிடைக்கும். மீதமுள்ள 50 கோடியில் சேவை வரியாக சுமார் 7.5 கோடிகள் அரசுக்கு கிடைக்கலாம். சேவை கொடுத்த நிறுவனங்கள் வருமான வரியாக சுமார் 1 - 1.40 கோடி கட்ட வாய்ப்புள்ளது. நான் 1 கோடி என்றே எடுத்துக் கொள்கிறேன். ஆக, 100 கோடி செலவில் அரசுக்கு மட்டும் சுமார் 23.5 கோடிகள் கிடைக்கின்றது.
இவர்கள் உபயோகப்படுத்தும் மின்சாரத்தின் மதிப்புத் தெரியவில்லை. அதில் கிடைக்கும் வருமானத்தில் 66% இலவச மின்சாரத்திற்குச் செல்கிறது.
ஒரு படம் தயாரிக்க எவ்வளவு வாகன எரிபொருள் செலவாகிறது என்று தெரியவில்லை. இது பல லட்சங்களில் இருக்கும். அதிலும், அரசு 66% லாபம் ஈட்டுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
நுழைவுச்சீட்டு விற்பனையின் மூலம் மட்டும் 300 கோடிகள் கிடைக்கும் என வைத்துக்கொள்வோம். இதில் அரசாங்கம் 6 கோடிகளை கேளிக்கை வரியாகப் பெறும் (அரசு வருமானம் இதுவரை 29.5 கோடிகள்). தயாரிப்பாளர்களின் பங்காக சுமார் 176 கோடிகள் வரும். இதில் படச்செலவான 100 கோடிகளை கழித்தால் 76 கோடிகள் நிற்கும். இது முழுவதும் லாபம் என எடுத்துக்கொள்ள முடியாது. நிறுவனச் செலவுகள் இருக்கும். ஒரு வாதத்திற்காக இது அனைத்தும் லாபம் என்று எடுத்துக்கொண்டால், அதில் 23 கோடிகளை வரியாக செலுத்த வேண்டும் (அரசு வருமானம் இதுவரை 52.5 கோடிகள்).
அடுத்து, வினியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குகளின் வருமானமாக சுமார் 118 கோடிகள் நிற்கும். இதில் 10% லாபம் நிற்கிறது என்று வைத்துக்கொண்டால் (12 கோடிகள்), அதில் வரியாக அரசுக்கு 3.6 கோடிகள் கிடைக்கும் (அரசு வருமானம் இதுவரை 54.1 கோடிகள்). திரையரங்குகள் செலுத்தும் மின்சாரக் கட்டணத்தில் 66% இலவச மின்சாரத்திற்குச் செல்கிறது மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
படம் பார்க்கச் செல்வோரால் கிடைக்கும் இதர வருமானம் (300 கோடி நுழைவு சீட்டு வருமானம் என்ற கணக்கில்) (வாகன எரிபொருளில் 66%, தின்பண்டங்களில் சேவை வரியாக 15%, அந்த நிறுவனங்களின் லாபத்தில் 30% வரி):
- வாகன எரிபொருள் - 75 கோடி
- தின்பண்ட சேவை வரி - 22.5 கோடி
- லாபத்தில் வருமான வரி - 9 கோடி
ஆக, சுலையாக 106.5 கோடிகள் பார்வையாளர்களால் அரசுக்கு கிடைக்கிறது.
அனைத்தையும் சேர்க்கும்போது அரசின் மொத்த வருமானம் 160.6 கோடிகள். இது மிகவும் மேம்போக்கான கணக்கு. சரியான தரகுகள் இருப்பின் இதை இன்னும் துல்லியமாகக் கணக்கிடலாம். அப்படிக் கணக்கிட்டால் இது சுலபமாக 200 கோடிகளைத் தொடும். கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் படக்குழுவினர் கூட இவ்வளவு பணம் பார்க்கமாட்டார்கள். இந்தப் பணம் ஏங்கே போகப்போகிறது? அரசாங்கம் ஏப்பம் விட்டது போக, மீதம் இவர்களுக்குத் தானே வரப்போகிறது? 100 நாள் திட்டம், இலவசங்கள், மலிவு விலை அங்காடிகள், மலிவு விலை டீசல், ....
ஒரு தனி மனிதனால் இந்தியப் பொருளாதாரம் 200 கோடி பயன்பெறுகிறது எனும் போது, அம்மனிதருக்கு உரிய மதிப்பை நாம் கொடுக்கவேண்டும். இல்லையேல், இவர் போன்றோர் புலம் பெயறவோ, வெறுத்து ஒதுங்கிவிடவோக்கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில் அதிகம் நஷ்டமடைவது இப்போது தொந்தரவு கொடுக்கும் கூட்டம் தான். இக்கூட்டத்தைத் தூண்டிவிட்டு பொரை சம்பாதிக்கும் கூட்டத்தை கண்டுபிடித்து அழிப்பதை விட, நம் மக்களிடமுள்ள "நியாயமான" குணங்களில் ஒன்றான "அடுத்தவனைப் பார்த்து வயிறெரிதல்" என்பதைக் ஒழித்தால் போதும். இது நடக்க இன்னொரு கிருஷ்ணர், புத்தர், ஆதிசங்கரர், ஞானசம்பந்தர் வரவேண்டுமே! 😑
(இணைப்பு: தினமலர் - சென்னை - 18/07/2016)
🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼
பி.கு.: இன்று நான் எந்த நடிகனின் ரசிகனுமல்ல. நல்ல நடிப்பின், நல்ல உழைப்பின் ரசிகன்!
posted from Bloggeroid
No comments:
Post a Comment