Thursday, July 29, 2021
பாதங்களை நன்கு பார்க்கவேண்டுமாம்! உலகில் வேறெங்கும் இப்படியொரு அமைப்பு கிடையாதாம்!! 🤦
Friday, July 23, 2021
அங்காளம்மன் வந்திருக்கிறேன்டா!!
Tuesday, July 20, 2021
பக்ரீத் கதையின் உட்பொருள்
(இவ்விடுகை கதை உணர்த்தும் பொருளைப் பற்றியது. கதையை தெரிந்துகொள்ள விரும்புவோர், தயவு செய்து இணையத்தில் தேடிப் படித்துக்கொள்ளவும். அல்லது, இந்த விகடன் கட்டுரையைப் படிக்கவும்: https://www.vikatan.com/spiritual/temples/68302-the-story-of-eid-al-adha--bakrid. நன்றி.)
பக்ரீத் கதையின் அடிப்படை வீடுபேறாகும். இக்கதையின் இரண்டு முக்கிய சொற்கள்: மகன் & ஆடு.
🔹மகன்
தீபாவளிக் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். கண்ணபிரானும் அன்னை சத்யபாமாவும் சேர்ந்து அவர்களது மகனான நரகாசுரனைக் கொன்ற நாளே தீபாவளி. இதில் கண்ணபிரான் என்பது பரம்பொருளின் கூறாகிய நாம். புவியின் கூறாகிய சத்யபாமா என்பது நமதுடல் முதலான அனைத்தும். நரகாசுரன் என்பது "நான் இவ்வுடல்" என்ற தவறான அறிவு. இந்த தவறான அறிவு நீங்குவதற்காக நாம் செய்யும் முயற்சிகள்தாம் கண்ணபிரான்-சத்யபாமா & நரகாசுரனுக்கு இடையே நடந்த போர் ஆகும். இந்த தவறான அறிவு நீங்கியவுடன் நாம் யாரென்று நம்மைப் பற்றிய தெளிவு (மெய்யறிவு) கிடைத்துவிடுகிறது. இந்த தருணமே தீபாவளி.
எல்லாவற்றையும் ஏடாகூடமாக பார்ப்போர் உண்டு. இக்கதையை அப்படி பார்த்தால்... "பெற்றோரே பிள்ளையைக் கொன்றால் நல்லது நடக்கும் (தீபாவளி)" என்றாகிவிடும்!! 😂
அண்மையில், ஆந்திரா/தெலுங்கானாவில் ஒரு கல்லூரிப் பேராசிரியரும் அவரது மனைவியும் சேர்ந்து அவர்கள் பெற்ற 2 மகள்களை, ஒரு கிறுக்கு/ஏமாற்றுக்கார மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பலியிட்டனர். இந்நிகழ்வை "பெற்றோர்-பிள்ளைகள்-பலி" என்று சுருக்கலாம். பெரும்பாலான புறம்போக்குகள் மகனை பலியிடச் சொல்லும். பெண்தெய்வ வழிபாட்டு புறம்போக்குகள் மகளை பலியிடச் சொல்லும்.
தகவல் தொடர்பு வெகுவாக வளர்ந்து விட்ட இக்காலத்திலும் இப்படி ஏமாறுபவர்களும், ஏமாற்றுபவர்களும் இருக்கும் போது அக்காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவும். அதுவும், பண்படாத, காட்டுமிராண்டித்தனமான மக்களையே பெரும்பான்மையாகக் கொண்டிருந்த ஐரோப்பிய & மத்திய கிழக்குப் பகுதிகள் எப்படியிருந்திருக்கும்?
கிறித்துவ மதத்தின் முக்கிய நகரமான வாடிகன் ஒரு காலத்தில் சிறு பிள்ளைகளையும் விலங்குகளையும் பலியிடும் இடமாக இருந்தது. அந்நகரின் அடித்தளமே மண்டையோடுகளால் ஆனது என்று சொன்னாலும் மிகையாகாது!
இஸ்ரவேலர் இயேசுவின் கதையும் "தந்தை-மகன்-பலி" வகை தான்! ("உலகைக் காப்பதற்காக பரமபிதா தனது ஒரே மகனான இயேசுவை பூமிக்கு அனுப்பியதன் மூலம் அவரை பலியாக்கினார்") குறுக்கை என்பது நமது உடலாகும். அதில் அறையப்பட்டிருக்கும் இயேசு என்பது சிதைக்கப்பட்ட மனமாகும். இவ்வுருவைக் கண்டவுடன் "மனதை அழி" என்று அவர்களுக்குத் தோன்றவேண்டும். மாறாக, "2000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேய்யா!" என்று ஒப்பாரி வைக்கின்றனர்.
ஐரோப்பாவின் கதையே இப்படியெனில் பாலைவனப் பகுதிகள் எப்படியிருந்திருக்கும்?
🔹ஆடு
"மனதை அழி" என்று சொன்னால் எல்லோரையும் சென்றடையாது என்பதால் "நரகாசுரன்" வகை கதைகளை உருவாக்கினர். இது, சமூகத்தின் சில பகுதிகளில் ஏடாகூட விளைவுகளை ஏற்படுத்தியதால் அடுத்து விலங்குகளுக்கு மாறினர். குறிப்பாக, ஆட்டைத் தேர்ந்தெடுத்தனர்.
நம் ஊர்களில் "கிடா வெட்டு" திருவிழாக்கள் நடக்கும். ஆட்டுக்கிடாவை வெட்டி, பொங்கல் வைத்து, இறையுருவங்களுக்கு படையலிட்டு, உற்றார் உறவினருடன் விருந்துண்பர்.
இதில், ஆடு என்பது மனமாகும் (மனதைக் குறிக்கும் முருகப்பெருமானின் ஊர்திகளில் ஒன்று ஆடு). ஆட்டை வெட்டுதல் என்பது மனதை அழித்தலாகும். பொங்கல் என்பது மனம் அழிந்தோரிடமிருந்து (மெய்யறிவாளர்களிடமிருந்து) வெளிப்படும் சொற்கள் - அறிவுரைகளாகும். அந்த அறிவுரைகளை எல்லோரிடமும் எடுத்துச் செல்லுதலே பகிர்ந்து உண்ணுதலாகும்.
இதற்கு அண்மைக்கால மிகச்சிறந்த எடுத்துக்காட்டு: பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️. இவரது மனமழிந்த பிறகு, இவரிடமிருந்து பொங்கிய "நான் யார்?" எனும் பொங்கலால் வீடுபேறு அடைந்தோர் எத்தனையோ! இனி வரும் காலங்களிலும் ஆன்மபசி போக்கவல்ல உணவு இது ஒன்றேயாகும்.
மீண்டும் பாலைவனப் பகுதிக்கு திரும்புவோம்.
"மகனைக் கொல்" என்று சொன்னதால் வந்த விளைவைக் கண்ட அப்பகுதி பெரியவர், "ஆட்டைக் கொல்" என்று மாற்றியிருக்கிறார். "மகன் நின்ற இடத்தில் ஆடு இருந்தது" என்று பக்ரீத் கதையில் வரும் சொற்றொடர் உணர்த்தும் பொருள் இதுதான்.
இதன் பிறகு, ஆட்டின் இறைச்சியை மூன்றாகப் பிரிப்பதென்பது நாம் மேலே பார்த்த "பகிர்ந்துண்ணுதலுக்கு" சமம்.
பக்ரீத் = பக்ரு + ஈத் = ஆடு + திருநாள் = ஆட்டுத் திருநாள் = மனதை அழிக்கும் பெருநாள்!!
(எவ்வாறு நமது விநாயகர் சதுர்த்தி, அனுமார் படைப்பு/பிறப்பு (ஜெயந்தி) போன்ற திருவிழாக்கள், அந்தந்த இறையுருவங்கள் உருவாக்கப்பட்ட நாட்களோ (அல்லது, அப்படிப்பட்ட இறையுருவங்களை உருவாக்கலாம் என்ற எண்ணங்கள் நமது பெரியோர்களுக்கு தோன்றிய நாட்களோ), இவ்வாறே பக்ரீத்தும் "பிள்ளைக்கு மாற்று ஆடு" என்ற சிந்தனை தோன்றிய நாள் அல்லது அந்த சிந்தனை செயலாக்கப்பட்ட நாள். அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கருத்தில் கொண்டால் இது எவ்வளவு பெரிய, சிறப்பான, அப்பகுதி மக்களைக் காப்பாற்றிய மாற்றம் என்பதை உணரலாம்.)
oOOo
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮